ஸ்ருதியுடன் ஜோடி சேர்ந்த சம்பவம் : ‘ஜொள்ளும்’ லோகேஷ் கனகராஜ்
ஸ்ருதி ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் நெருக்கமாக இருக்கும் படங்கள் கடந்த வார வைரல். ஆளாளுக்கு ரெண்டு பேருக்கும் அது இதுன்னு கதை, திரைக்கதை, வசனம் எழுதியது ஃபாரன்ஹீட்டை ஏற்றியது. அப்புறம்தான் தெரிஞ்சது. அது ‘இனிமேல்’ஆல்பத்தின் விளம்பரம் என்று.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘இனிமேல்’ ஆல்பத்திற்கு கமல்ஹாசன் வரிகளை தீட்ட, இசையமைத்துள்ளார் ஸ்ருதிஹாசன். துவாரகேஷ் இயக்கி இருக்கும் ‘இனிமேல்’ ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஸ்ருதியும், லோகேஷ் கனகராஜும் அளித்த பேட்டி..
“நான் சிறுவயதில் இருந்தே திரையிசைப் பாடல்களுடன் சேர்ந்து பயணித்து வருகிறேன். அது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றால் மிகையில்லை. இதற்கு இடையில் Independent பாடல்கள் மீதான காதல் எனக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலுமே வளர்ந்து வந்தது. திரையிசை என்பது ஒரு மிகப்பெரிய மான்ஸ்டர் போன்றது. அதற்கு முன்னர் இன்டிபெண்டன்ட் மியூசிக் என்பது ஒரு 30 சதவீதமாவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். “இனிமேல்” ஆல்பத்திற்கு இவ்வளவு பெரிய வெளிச்சம் கிடைக்க காரணம் என் தந்தை மற்றும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம். இது தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்திருக்கும் சலுகை. இயக்குநர் லோகேஷ் கனகராஜை விக்ரம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு முறை இவரை கேமராவில் பார்க்கும் போது இவரது தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதிலிருந்துதான் ‘இனிமேல்’ எண்ணம் உதயமானது.
நான்கு நிமிடத்திற்குள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஆழத்தை சொல்வதற்கான ஒரு சிறு முயற்சிதான் இது. ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நிறை குறைகளை கூறுவதன் மூலம் இதைப் பார்க்கும் பார்வையாளர்கள் அவர்களின் ரிலேஷன்ஷிப்பை சீர் தூக்கிப் பார்ப்பார்கள் என்கின்ற ஒரு சிறு நம்பிக்கைதான். எங்கள் இருவரின் காம்போ அப்பாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் இயக்குநர் இதில் நடித்திருப்பது என் அதிர்ஷ்டம் தான். நான் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று லோகேஷ் பக்கம் மைக்கை திருப்பினார் ஸ்ருதி.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது:-
“எப்படியாவது நடித்தே ஆக வேண்டும் என்கின்ற எண்ணம் எல்லாம் எனக்குக் கிடையாது. முதலில் இனிமேல் ஆல்பம் பாடல் தொடர்பாக நடிக்க வேண்டும் என்று ஸ்ருதிஹாசன் என்னை அனுகியபோது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது. எனக்கு கமல் சார் அவர்களை எவ்வளவு பிடிக்கும் என்பதை பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன். தமிழ் சினிமாத் துறையில் இருந்து வரும் கடந்த 9 ஆண்டுகாலத்தில் நான் அவரைப் பற்றித் தான் அதிகம் பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன். நான் நடித்து என்னுடைய உருவம் திரையில் தோன்றப் போகும் ஓரிரு கணங்களில் திரையின் பின்னால் அவரின் குரல் ஒலிக்கப் போகிறது என்கின்ற எண்ணமே என்னை சிலிர்க்கச் செய்தது. மேலும் என் திரைப்பயணத்தில் அது ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பாக இருக்கும் என்றும் தோன்றியது. அதன் பிறகு தான் நடிக்க சம்மதித்தேன்.
இருப்பினும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற முதல் நாளே ஸ்ருதிஹாசன் அவர்களிடம், நீங்கள் உங்கள் முடிவை இன்று மாலையே மாற்றிக் கொள்ள நேர்ந்தாலும் நேரலாம். எனக்கு அதுகுறித்து ஒரு வருத்தமும் இருக்கப் போவதில்லை. எனவே எதற்கும் ஒரு பேக்-அப் நடிகர் ஒருவரை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றும் கூறி இருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் படத்தின் இயக்குநர் துவாரகேஷ், மற்றும் அவரின் குழுவினர் என அனைவருமே மிகவும் நட்பாக பழகினார்கள். அதனால் நடிப்பது என்பது மிகவும் சவால் நிறைந்த விஷயமாக தோன்றவில்லை.
உண்மையாகவே நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் அந்த அளவிற்கெல்லாம் இல்லை. உண்மையாகவே எனக்கு நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்திருந்தால் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்ப்படம் பொல்லாதவன். அப்படத்தின் கதையைப் போல் ஒரு கதையினை ரெடி செய்து, என் அசோசியேட் இயக்குநரைக் கொண்டு அதை இயக்க வைத்து அதில் நானே நடித்திருப்பேன். ஆனால் எனக்கு அப்படி எல்லாம் எந்த ஆசையும் இல்லை.
‘லியோ’ படத்தின் டப்பிங் பணியின் போது நான் கமல் சாருக்கு போன் செய்து இப்படி ஒரு டயலாக் படத்தின் இறுதியில் நீங்கள் பேச வேண்டும் சார் என்று கேட்டுக் கொண்டேன். எனக்காக ஒரு நாள் ஒதுக்கி, அந்த இறுதி டயலாக்கை ஐந்து மொழிகளிலும் வந்து பேசிக் கொடுத்துவிட்டு சென்றார். அவரே இந்த அளவிற்கு எனக்கு உதவும் போது, ராஜ்கமல் தரப்பு என்னுடைய தாய்வீடு போன்றது. அவர்களிடமிருந்து என்ன கேட்டு வந்தாலும், என்னாலும் மறுக்க முடியாது என்பதே உண்மை. மேலும் அடுத்து மூன்று படம் இயக்குவதற்கு அட்வான்ஸ் வாங்கி வைத்திருக்கிறேன். அந்தப் பணிகளை துவங்கவில்லை என்றால் பிரச்சனையாகிவிடும்.
கேமரா முன் ஒரு சிறு பயம் இருந்தது. இப்பொழுது இந்த குழுவினரின் முயற்சியால் அந்த பயம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். என் நாயகர்களுக்கு திரைப்படத்தில் பாடல்கள் மற்றும் டூயட் இல்லாமல் அமைவது திட்டமிட்டதல்ல. என் படத்தின் வேலைகள் எதுவுமே தடைபடவில்லை. இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு வெறும் 3 நாட்கள் தான் நடந்தது. ஜூன் மாதத்தில் இருந்து என் படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் துவங்கவிருக்கின்றன. ஆக நடிக்க சம்மதித்ததற்கு 3 காரணங்கள் தான். மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருந்தது முதற் காரணம். கமல்ஹாசன் சார் இரண்டாம் காரணம், ஸ்ருதிஹாசன் மற்றும் அவரின் குழுவினர் 3வது காரணம்.”