மாற்று திறனாளிகளுக்காக ஒரு படம் : ராகவா லாரன்ஸின் நல்ல மனசு
100 கோடி 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள்கூட செய்யாத காரியத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் இப்போது மாற்று திறனாளிகளுக்காக ஒரு படம் நடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் லாரன்ஸ்.
இவர் நடிக்கும் பல திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென சில காட்சிகளை வைத்திருப்பார். தற்போது இவரின் குழுவிலிருக்கும் மாற்றுத்திறனாளிகள் சிலர் தமிழர்களின் பாரம்பரிய ‘மல்லர் கம்பம்’ விளையாட்டை கற்றுக் கொண்டு பல இடங்களில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள். இப்படியான செயல்களை நிகழ்த்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் பல உதவிகள் கிடைத்திடவும் அவர்களை ஊக்குவிப்பதற்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வின் தொடக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் விளையாட்டில் ஈடுபட்டு பார்வையாளர்களை வியக்கச் செய்தனர்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், “பல மேடைகள்ல மாற்றுத்திறனாளி பசங்க நடனமாடுறதைப் பார்த்திருப்பீங்க. நடனத்தைத் தாண்டி அவங்களுக்கு எதுவும் தெரியாது. அவங்ககிட்ட தன்னம்பிக்கை அதிகளவுல இருக்கு. எனக்குச் சோகமாக இருக்கிற சமயத்துல போய் மாற்றுத்திறனாளி பசங்க நடனமாடுறதை பார்த்து என்னை ரீ-சார்ஜ் பண்ணிக்குவேன். நானும் பல இயக்குநர்கள்கிட்ட மாற்றுத்திறனாளிகளை நம்ம படத்துல பயன்படுத்திக்கலாம்னு சொல்லுவேன். சில இயக்குநர்கள் ‘எல்லா இடத்திலேயும் திரும்ப திரும்ப காட்சிப்படுதுற மாதிரி இருக்கு’ன்னு வேண்டாம்னு சொல்வாங்க. ‘எத்தனை தடவை த்ரிஷா, நயன்தாராவைப் பார்க்குறாங்க’னு நானும் சொல்லுவேன்.
மாற்றுத்திறனாளி பசங்க என்கிட்ட வந்து வருத்தமா, ‘மாஸ்டர், வீட்டு வாடகை கட்ட முடியலை’னு சொல்வாங்க. இதுமட்டுமில்ல பணம் இல்லைனு அழுதிருக்காங்க. நான் அவங்களுக்காக ஒரு மேடையை ரெடி பண்ணி நிகழ்ச்சிகள் பண்ணலாம்னு யோசிச்சிருக்கேன். இந்தப் பசங்க எப்பவும் பஸ்லதான் போறாங்க. அது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுனால அவங்களுக்காக நாளைக்கு என் வீட்டுல வச்சு ஸ்கூட்டி கொடுக்கப்போறேன். அதுமட்டுமில்ல, மாற்றுத்திறனாளிகளுக்காகவே ஒரு படம் பண்ணப்போறேன். அதுல நான் மாற்றுத்திறனாளியாக நடிக்கப்போறேன். அந்தப் படத்துல கிடைக்கிற பணத்தை வச்சு மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தரப்போறேன்” என்றார்.