திரை விமர்சனம்

 ‘ஒரு நொடி’ விமர்சனம்

மெல்லிய சஸ்பென்ஸை வைத்து அழுத்தமான அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை பற்ற வைக்கும் அளவுக்கான திரைக்கதையுடன் ரசிக்க வைக்கும் படம்  ‘ஒரு நொடி’.

மதுரையைச் சேர்ந்த சேகரன்  திடீரென காணாமல் போக, அவரது மனைவி சகுந்தலா  இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறனிடம் புகார் அளிக்கிறார். இதில் கந்து வட்டிக்குக் கடன் கொடுக்கும் கரிமேடு தியாகு  ஊழல் அரசியல்வாதியான திருஞான மூர்த்தி  ஆகியோரின் மீது காவல்துறைக்குச் சந்தேகம் உண்டாகிறது. இப்படி அரசியல் வளையத்துக்குள் விசாரணை சுற்றிக்கொண்டிருக்க, பார்வதி என்கிற பெண்ணின் மரணம் இந்தப் புலனாய்வைக் கூடுதல் தலைவலி ஆக்குகிறது. வெவ்வேறு அடுக்குகளை உடைய இந்த இரு வழக்கின் மர்மங்களையும் பரிதி கலைந்தாரா, குற்றவாளிகள் யார் என்பதே  ‘ஒரு நொடி’ படத்தின் கதை.

கம்பீரமான தோற்றம், அதிகாரிக்கான மிடுக்கு போன்ற ஏரியாக்களில் தன் கதாபாத்திரத்துக்குச் சரியாகப் பொருந்தும் தமன்குமார், நடிப்பில் சற்றே ஏமாற்றமளிக்கிறார். கணீரென இருக்கும் அவரது குரல் ப்ளஸ் என்றால் தட்டையான முகபாவனைகள் மைனஸ். டப்பிங்கிலும் கூடுதல் கவனம் தேவை. இரக்கமற்ற வில்லன் – மதுரை என்றவுடனே வருகை பதிவில் கையைத் தூக்கி “உள்ளேன் ஐயா” என்று என்ட்ரி கொடுக்கிறார் வேல ராமமூர்த்தி. கண்ணை உருட்டி உருட்டி மேலே கீழே பார்ப்பது, முறைப்பதென அவரது ரியாக்ஷன்கள் பார்த்துப் பழகியவை ரகம்தான். ஒரு சில காட்சிகளே வந்தாலும் எம்.எஸ் பாஸ்கர் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார்.

குற்றமே தண்டனையாக இறுதிக் காட்சிகளில் படத்தின் ஒட்டுமொத்த கருத்தினையும் தாங்கி நிற்கும் பாத்திரத்தில் நடித்திருப்பவர், மிக நேர்த்தியான நடிப்பை வழங்கி படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்திருக்கிறார். (யார் அது என்பதே சஸ்பேன்ஸ்!) கொலை செய்யப்பட்ட பெண்ணாக வரும் நிகிதாவின் நடிப்பில் குறையேதுமில்லை. அவரது அம்மாவாக நடித்துள்ள தீபா, அவரது காதலனாக வரும் நபரின் மீமிகை நடிப்பு படத்தின் பெரிய மைனஸ். இருவரும் பச்சாதாப உணர்வை ஏற்படுத்தாமல் எரிச்சலை மட்டுமே தருகிறார்கள். கஜராஜ், கருப்பு நம்பியார், அழகர் ஆகியோர் தங்களின் குணச்சித்திர பாத்திரங்களுக்கான மீட்டரில் நடித்துள்ளார்கள்.

இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு த்ரில்லர் அனுபவத்தைத் தரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. ஆனால் அதற்காகத் திருப்பங்கள், அதற்கு அடுத்த திருப்பத்தில் மற்றொரு திருப்பம் என்றே நகர்வது, ஒரு சில இடங்களில் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வைத் தருகிறது. போகிற போக்கில் இதுவாக இருக்குமோ, அவராக இருக்குமோ என்று காட்சிகள் நகர, “இது சும்மா… இவன் இல்ல. இதுவா இருக்காது” என்று நாமே யூகிக்கும் வகையான காட்சிகளும் ஏராளம். காணாமல் போன நபரின் கதையில் தொடங்கி, சம்பந்தமே இல்லாமல் இளம்பெண் மரணத்தைக் காட்டிய விதத்திலேயே இருவழக்குகளுக்கும் தொடர்பு உண்டு என்ற ஸ்பாய்லரை நம்மிடம் நேரடியாகச் சொல்லிவிடுகிறார்கள். இருந்தாலும் அந்த சஸ்பென்ஸ் உடையாமல் இறுதிவரை எடுத்துச்சென்ற இயக்குநருக்கு மணிவர்மனுக்குப் பாராட்டுகள்!

சஞ்சய் மாணிக்கம் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை சஸ்பென்ஸ் உணர்வை மிக நெருக்கமாகக் கடத்துகிறது. அதிலும் நாய்க்குக் கறி போடுகிற இடத்திலெல்லாம் திகிலூட்டுகிறது இசை. இரவு நேரக் காட்சிகளில் சிறப்பான ஒளியுணர்வைக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரத்தீஷ், இருப்பினும் ஒரு சில இடங்களில் வேறு கேமராவில் எடுக்கப்பட்ட மங்கலான தரத்தில் இருப்பது சொதப்பல் ரகம். (பட்ஜெட்?!) படத்தொகுப்பளார் வளவளவென நகர்கிற இரண்டாம் பாதியை இன்னும் நறுக்கியிருக்கலாம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE