‘அரண்மனை 4’ – விமர்சனம்
அம்மா பாசத்திற்கு முன் பேயெல்லாம் சும்மா என்ற ஒன்லைனை வைத்து பயம் காட்டும் படமே ‘அரண்மனை 4’
சுந்தர்.சி ஒரு வழக்கறிங்கர். ஒரு பெண்னை விரட்டி வரும் ரவுடிகளை ஓட ஓட புரட்டி எடுக்கிறார். அந்த ரவுடிகளுக்கும் இவருக்கும் சம்பந்தம் இலையென்றாலும் அடித்து ஆடி அதகளம் செய்கிறார். அதற்கு ஒரே ஒரு காரணம் செல்வி என்ற அந்த பெண்ணின் பெயர்தான்.
காதலனுடன் வீட்டை விட்டு சென்ற சுந்தர்.சியின் தங்கை பெயரும் (தமன்னா) அந்த பெண்ணின் பெயரும் ஒன்றாக இருப்பதால் அந்த பெண்ணை தன் தங்கையாக நினைத்து அவளை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுகிறார். அத்தனை பாசம் வைத்திருக்கும் தங்கை தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கிடைக்கிறது சுந்தர்.சிக்கு.
பதறிப்போய் தமன்னா வாழ்ந்த ஊருக்கு செல்கிறார். போன இடத்தில் தமன்னாவின் கணவரும் இறந்த செய்தி அறிந்து அதிர்கிறார். இதற்கிடையே தமன்னா குழந்தைகளை தீய சக்தி ஒன்று துரத்துவதையும் தெரிந்துகொள்கிறார். அந்த தீய சக்தி எது? அதற்கும் தங்கையின் குடும்பம் சிதைந்ததற்கும் தொடர்பு என்ன என்பதை அறிய களத்தில் இறங்கும் சுந்தர்.சிக்கு அடுத்தடுத்து காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சிகளும் சஸ்பென்ஸ்களும் ஆடியன்ஸை திருப்திப்படுத்துவதே கதை.
வழக்கமான பேய் கதை என்றாலும் புதுவகையான தீய சக்தி, காடு சார்ந்த களம், அந்த ஊர், தமன்னா வீடு போன்ற புது ஏரியாவில் புகுந்து விளையாடி இருக்கிறார் சுந்தர்.சி. கதை முழுக்க தன்னை நிரப்பிக்கொள்ளாமல் தமன்னா உள்ளிட்ட கதாபாத்திரங்களை விளையாடவிட்டு விட்டுக்கொடுத்திருக்கிறார்.
ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் என்பதுபோன்ற ஆக்ஷன் காட்சிகளில் அன்லிமிட் விருந்து படைக்கிறார். எமோஷன் ஏரியாவில் மட்டும் வீக்காக இருப்பதும் தெரிகிறது.
படத்தின் ஆதாரமே தமன்னா கேரக்டர்தான். அன்பான கணவர், அழகான குழந்தைகள் என சந்தோஷமாக இருக்கும் வாழ்க்கையில் கணவனே பேயாக மாறும் கட்டங்களில் தமன்னாவின் நடிப்பு அட்டகாசம். கண்ணாமூச்சி ஆட்டம் என்று குழந்தைகளிடம் சொல்லிவிட்டு தான் துன்பங்களை அனுபவித்து குழந்தைகளிடம் சிரித்த முகத்தை காட்டி ஏமாற்றும் காட்சிகள் தமன்னா ஆஹாஹா நடிப்பு.
இன்னொரு நாயகி ராஷிகண்ணாவுக்கு அவ்வளவாக வேலை இல்லை. ஊறுகாய் அளவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார். தமன்னா கணவராக சந்தோஷ் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார்.
மேஸ்திரியாக யோகிபாபு, கார்பெண்டராக விடிவி கணேஷ், சுந்தர்.சியின் அத்தையாக வரும் கோவை சரளா, ஜமீன் டெல்லி கணேஷ் மற்றும் சேசு கூட்டணி பல இடங்களில் சிரிக்க வைக்க முயன்று தோற்கிறார்கள். க்ளைமாக்ஸ் ஏரியாவில் மட்டும் களை கட்டும் காமெடிக்கு ஆடியன்ஸ் குலுங்கி சிரிக்கின்றனர்.
பிரமாண்ட சிலைகளுடன் கம்போஸ் செய்யப்பட்ட க்ளைமாக்ஸ் சண்டை காட்சி ஆக்ஷன் ப்ரியர்களை திருப்திப்படுத்தும். பின்னணி இசையில் பயமுறுத்தும் ஹிப்ஹாப் தமிழா, பாடல்களில் ஈர்க்கவில்லை. கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.
கதையுடன் சேர்ந்த காமெடிக்கு முயற்சி செய்து ஏமாந்திருப்பதால் திரைக்கதை வேகம் அவ்வப்போது பிரேக்டவுனாகி அலுப்பை ஏற்படுத்துகிறது. கதையில் கூடுதல் கவனம் செலுத்தி அழுத்தம் கூட்டியிருந்தால் ‘அரண்மனையை’ முழுமையாக ரசித்திருக்கலாம்.