படம் பார்ப்பவர்களின் மனக்கிளையில் கூடுகட்டும் ’குரங்கு பெடல்’ : விமர்சனம்
இந்த தலைமுறையினருக்கு ‘குரங்கு பெடல்’ என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் டூ கே கிட்ஸ்களுக்கு முந்தைய தலைமுறையினருக்கு ஒரு விமானத்தை ஓட்டுமளவிற்கான மகிழ்வையும் த்ரிலிங் அனுபவத்தையும் கொடுத்த குரங்கு பெடல்.. அன்றைய தலைமுறையின் பொற்காலம். அந்த பொற்காலத்தை இன்னொருமுறை கண்முன் நிறுத்தும் படம் ‘குரங்கு பெடல்’.
ஆற்றங்கரையை ஒட்டியிருக்கும் ஒரு கிராமம் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட, மாரியப்பன் எனும் சிறுவன் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள முடிவு செய்கிறான். வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யும் அவர்களின் கேங்கில், வசதி படைத்த வீட்டைச் சேர்ந்த நீதி மாணிக்கம் புது சைக்கிள் வாங்கிவிடுகிறான். இந்நிலையில் மாரியப்பனுக்கும் நீதி மாணிக்கத்துக்கும் சண்டை வர, யார் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்கிறார்கள், அதில் மாரியப்பன் சந்திக்கும் சவால்கள் என்ன, அவனுக்கும் அவனது தந்தைக்குமான உறவு எப்படியிருந்தது போன்ற கேள்விகளுக்குக் கிராமத்துப் பின்னணியில் நகைச்சுவை கலந்து பதில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன்.
சைக்கிள் ஓட்டுவதற்கான ஏக்கம், கைபிசைந்து கொண்டு நிற்கும் சுழலில் பதற்றம், தந்தையிடம் உண்மையைப் போட்டு உடைக்கும் இடத்தில் உணர்வுபூர்வமான நடிப்பென கலக்கியிருக்கிறார் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன். அவரது நட்பு வட்டத்தில் இருக்கும் மற்ற குழந்தைகளிடம் இயல்பான நடிப்பு சற்றே மிஸ்ஸிங்.
‘நடராஜா சர்வீஸ்’ கந்தசாமியாக சைக்கிள் ஓட்டத் தெரியாத கண்டிப்பான தந்தையாக வரும் காளி வெங்கட், வழக்கம் போலவே சோபித்திருக்கிறார். கடைசியில் கண்கலங்கி நிற்கும் இடத்தில் தன் உணர்வுப்பூர்வமான நடிப்பினால் அந்தக் கதாபாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். வருகின்ற காட்சிகளில் எல்லாம் கிச்சுகிச்சு மூட்டும் குடிகார கணேசனாக நக்கலான உடல்மொழி, வாய்ஸ் மாடுலேஷன்களில் பின்னியிருக்கிறார் ஜென்சன் திவாகர். மிலிட்டரியாக பிரசன்னா பாலசந்தர், வாத்தியாராக வரும் செல்லா ஆகியோரின் நடிப்பில் குறையேதுமில்லை.
ஜிப்ரான் வைபோதாவின் துள்ளலான இசையில் “கொண்டாட்டம் விட்ட லீவ வச்சு திங்கப் போறோம்” என்ற பாடல் முன்முனுக்க வைக்கிறது. அதேபோல படத்தின் பின்னணி இசையும் பீல் குட் உணர்வைக் கடத்தி நம்மைப் படத்தோடு ஒன்ற வைத்துவிடுகிறது. ஒளிப்பதிவாளர் சுமி பாஸ்கரன் உயரமான மலைத் தொடர்கள், ஆறு என ரம்மியமான காட்சிகளில் அழகான ஒளியுணர்வை செட் செய்தவர், சைக்கிள் ரேஸ்ஸில் ஒற்றையடிப் பாதையைப் பின்தொடரும் விதத்தில் கேமரா ஆங்கிள்களை பரபரவென பயன்படுத்தியிருக்கிறார். டிரோன் ஷாட்களும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
சைக்கிள்’ எனும் ராசி அழகப்பனின் கதைக்குக் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ள இயக்குநர் அதற்கு நியாயம் செய்யும் விதத்திலான ஆக்கத்தைத் தந்திருக்கிறார்.
படம் பார்ப்பவர்களின் மனக்கிளையில் கூடு கட்டுகிறது இந்தக் ‘குரங்கு பெடல்’.