சூப்பர் ஸ்டாராக ஜொலித்திருக்கும் ‘ஸ்டார்’ விமர்சனம்
சினிமாவுக்குள் சினிமா பற்றிய படங்கள் நிறைய வந்திருந்தாலும் ‘ஸ்டார்’ எது மாதிரியும் அல்லாத புதுமாதிரி ரகம்.
கதை…
சினிமாவில் பெரிய நடிகராகவேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்து கால ஓட்டத்தில் ஸ்டில் போட்டோகிராபராக மாறியவர் லால். இவரது மகன் கவின். தனது கனவை, ஆசையை மகன் வழியாக நிறைவேற்றிக்கொள்ள நினைக்கும் லால் மகனை சிறுவயதிலிருந்தே கலை வழியில் வளர்க்கிறார். இதனால் கவினுக்குள்ளும் ஹீரோ ஆசை தொற்றிக்கொள்கிறது. இவரது கனவு நனவாகும் சூழல் நெருங்கிவரும் வேளையில் பெரிய விபத்தில் சிக்கி முகம் அகோரமாகிறது. அவ்வளவுதான் வாழ்க்கை என்று முடங்கிப்போகும் கவினின் காதலும் பாதியில் கருகிப்போகிறது. இப்போது புதிய காதலி புதிய பயணம் என மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வரும் கவினின் சினிமா கனவும் காதலும் கைகூடுகிறதா இல்லையா என்பதற்கு பதில் தருகிறது க்ளைமாக்ஸ்.
மிடில் கிளாஸ் பையனின் கலை கனவு, கல்லூரி குறும்பு, காதல், கவலை, தோல்வி, அவமானம், இயலாமை, தாழ்வு மனப்பான்மை என கவின் தனது கதாபாத்திரம் வழி கடத்தும் உணர்வுகள் அற்புத நடிப்பாக ஸ்டாரில் அணிவகுக்கிறது. குறிப்பாக மொட்டை மாடியில் தனது அப்பாவிடம் வசனம் பேசும் காட்சி ஆகசிறப்பு. அதேபோல் க்ளைமாக்ஸில் குழந்தையை கையில் ஏந்தியபடி கதறும் காட்சியில் நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு பாய்ந்திருக்கிறார்.
கவினின் தந்தையாக லால் அட்டகாசம், மகன் துவண்டுபோகும் இடங்களில் நம்பிக்கை கொடுத்து தட்டி எழுப்புவதும், மகன் நடித்துக்காட்டும் காட்சியில் கண்கள் கலங்க கலங்க பெருமிதம் கொள்வதும் பக்குவப்பட்ட நடிப்பாற்றல்.
முன்னாள் காதலியாக ப்ரீத்தி, இரண்டாம் பாதியில் நவினுக்கு தோள் கொடுக்க வரும் அதிதி இருவருமே பிரமாதம். கொஞ்சம் தூக்கலான நடிப்பில் அதிதி இதயத்தில் இடம் பிடிக்கிறார்.
கவினின் அம்மாவாக கீதா கைலாசம் அட்டகாசம். சாவு வீட்டில் மகனுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்த செய்தியை கேட்டு ஒப்பாரி வைத்ததை நிறுத்திவிட்டு புன்னகை மலர்வதும் மற்றவர்கள் அதை கவனிப்பதை அறிந்து பாவனையை மாற்றுவதும் சிறப்பு.
நீண்ட இடைவேளைக்கு பிறகு யுவனின் பின்னணி இசை ஸ்டாருக்கு உயிர் கொடுத்துள்ளது. பாடல்களும் கேட்கும் ரகம். எழில் அரசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு முதுகெலும்பாய் அமைந்துள்ளது.
இத்தனை சிறப்புகளுக்கும் காரணமாக இருக்கும் இயக்குனர் இளன் பாராட்டுக்குரியவர் என்றாலும் இரண்டாம் பாதி கதை, திரைக்கதையில் தடம் மாறி தடுமாறி இருப்பது திருஷ்டி பொட்டு.
இரண்டாம் பாதி திரைக்கதையையும் நேர்த்தியாக செதுக்கியிருந்தால் ஸ்டார்.. சூப்பர் ஸ்டாராக ஜொலித்திருக்கும்.