இசைஞானியின் இசை மாலை : ஜுலை 14 சென்னையில்
இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது.
இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஒருங்கிணைக்கின்றனர். இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது.
இந்த இசை விழாவிற்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா, மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்களின் சார்பில் அமைப்பாளர்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்விழாவினில் திரு அருண் அவர்கள் பகிர்ந்து கொண்டதாவது…
தமிழகத்தின் உயிர்நாடியாக உள்ள இசைஞானி இளையராஜா அவர்களுடன் இணைந்து இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, நடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இதற்கான அறிவிப்பை பத்திரிக்கையாளர்களாகிய உங்கள் முன்னால் தொடங்க வேண்டுமென்பது ஐயா இசைஞானி இளையராஜாவின் ஆசை, உங்கள் முன் இந்த போஸ்டரையும் டிக்கெட்டையும் வெளியிடுவது மகிழ்ச்சி. ஐம்பதாயிரம் பேர் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட விழாவாக இந்த இசை விழா நடக்கவுள்ளது. இந்த இசை கச்சேரியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதற்கு முன்பாக நடைபெற்ற கச்சேரிகளில் ஏற்பட்ட சிக்கல்கள், அதுவும் இவ்விழாவில் ஏற்படாதவாறு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சாப்பாட்டு பொருட்கள் அனைத்தும் வெளியில் கிடைக்கும் விலையில் உள்ளேயே கிடைக்கும் படி, வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை வசிதி முதல் குடி தண்ணீர் வசதி வரை அரங்கத்திற்குள் எளிதாக அனைவரும் அணுகும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இசை விழாவிற்கான டிக்கெட்டுகளை பேடிஎம் மூலம் மட்டுமே பெற முடியும். டிக்கெட் பார்ட்னராக இணைந்துள்ள பேடிஎம் நிறுவனத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இதன் மூலம் டிக்கெட்கள் கைமாறுவது போலி டிக்கெட்கள் பிரச்சனைகள் தடுக்கப்படும். மேலும் இசை விழாவிற்கு வருகை புரிபவர்கள் வந்து செல்ல எளிமையாக இருக்கும் வகையில், அவர்கள் இலவசமாக பயணிக்க சென்னை மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வருபவர்கள், சென்னையின் பலபகுதிகளிலிருந்து வந்து போகும் வகையில் பயன்படுத்த தனியார் வாடகை பைக், வாடகை கார் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத மிகப்பிரம்மாண்ட விழாவாக இருக்கும்.
இசைஞானி இளையராஜா அவர்களின் இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகளை நீங்கள் உங்கள் பேடிஎம் (Paytm) செயலி மூலம் எளிதாக பெறலாம்.