திரை விமர்சனம்

’தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் எப்படி? – ஒரு பார்வை

வாழ்வில் தோல்வியை மட்டுமே சந்தித்த ஒரு மனிதனின் கதையை ( ‘வெயில்’ )  வெற்றிப்படமாக மலர்த்திய வசந்தபாலன், ஆட்டுமந்தை கூட்டமென ஏழைகளை அடிமை பணியில் அமர்த்தும் ஒரு நிறுவனத்தின் கோர முகத்தை ‘அங்காடி தெரு’வில் தோலுரித்து காட்டிய வசந்தபாலன், மேடைக் கலைஞர்களின் வாழ்வை, வலியை அதற்குள் இருக்கும் அரசியலை, போட்டி, பொறாமை, காதல் போன்ற உணர்வுகளை உயிர்த்தெழச்செய்த ‘காவியத்தலைவன்’ போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலனின் கருவாக்கத்தில் உருவாக்கத்தில் வெளியாகியிருக்கும் இணைய தொடர் ‘தலைமைச் செயலகம்’.

என்றோ செய்த ஊழல், ஆளும் முதல்வரின் கழுத்தை நெறுக்க, முதல்வரின் கைத்தடிகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி அடுத்த முதல்வராவதற்கு காய் நகர்த்த, அதே நேரம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் பன்சால் மற்றும் அவன் கூட்டாளிகள் ஐவரைக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கௌலைகாரி துர்காவைத் தேடும் வழக்கு போலீஸ் இடமிருந்து சி.பி.ஐ.-க்கு மாற்றப்படுகிறது.  இந்த வட இந்திய மற்றும் தென் இந்திய நிகழ்விற்குமான தொடர்பு என்ன என்பதே இந்த தலைமை(ச்) செயலகம் இணைய தொடரின் கதை.

ராடன் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமாரும், சரத்குமாரும் தயாரித்திருக்கும் இந்தத் தொடரை வசந்த பாலன் இயக்கி இருக்கிறார்.  கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், பரத், ஆதித்யா மேனன், சந்தான பாரதி, கவிதா பாரதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

எப்போதோ செய்த ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் முதல்வர் கதாபாத்திரத்தில் கிஷோர் சிறப்பாக நடித்திருக்கிறார்.  தான் சிறை செல்வதைத் தடுக்கும் முனைப்பில் தன் வீட்டு குழந்தையின்  வாழ்க்கையைச் சீரழித்து விடுவார்களோ என்கின்ற தவிப்பையும், எல்லோர் முன்னிலையிலும் திருமணத்தை நிறுத்தும் போது துடிப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். ‘என்னைக் காப்பாற்ற எவன் காலிலாவது நான் விழ வேண்டும், இல்லை என் கட்சியை அடமானம் வைக்க வேண்டும் இல்லையா?’  என்று கேட்கும் போதும், ‘உங்கள் தலைமுறை கூட ஆண் பெண் நட்பைத் தவறாகத்தான் பார்க்கிறதா?’ என்று கொற்றவையின் மகளிடம் வினவும் போதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கொற்றவையாக நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி கதாபாத்திரம்,  பெங்களூரு மாநகரில் சுட்டு கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் சாயலில் படைக்கப்பட்டு இருக்கிறது.  முற்போக்கு சிந்தனை கொண்ட பத்திரிகையாளராகவும், ஆளுங்கட்சி முதல்வருக்கு அரசியல் ஆலோசகர் ஆகவும்,  ஒரு கட்டத்திற்கு மேல் முழு நேர அரசியல்வாதியாகவும் மாறும் கொற்றவை கதாபாத்திரம் மேம்பட்ட அரசியல் புரிதலுடன் படைக்கப்பட்டு இருக்கிறது. தன்  கதாபாத்திர கனம் புரிந்து ஸ்ரேயா ரெட்டியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அனுபவம் மற்றும் பக்குவம் அடைந்த பத்திரிக்கையாளராகவும்,  அன்பும் அக்கறையும் கொண்ட அன்னையாகவும்,  முதல்வர் மீதான அன்பும், அவர் ஆட்சி மீதான நம்பிக்கையும் கொண்ட அரசியல் ஆலோசகர் ஆகவும், தன்  லட்சியத்தை அடைய அதிகாரத்தை நோக்கி நகர வேண்டிய தேவை இருப்பதைப் புரிந்த புதுமைப்பெண்ணாகவும் அட்டகாசப்படுத்தி இருக்கிறார்.

வடமாநிலத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சிலரைக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கொலைகாரியைத் தேடும் சி.பி.ஐ. அதிகாரி வேடத்தில் ஆதித்யா மேனன் அலட்டல்  இல்லாமல் நடித்திருக்கிறார். பேப்பரில் வந்த கண்ணீர் அஞ்சலி செய்தியைக் கொண்டு, அந்த வழக்கை புதிய கோணத்தில் அணுகும் அவரின் புலனாய்வுத் திறமையும், பஜன்லாலின் தம்பியை வித்தியாசமான முறையில் மிரட்டி அவரிடம் இருந்து உண்மையை வெளிக்கொண்டுவரும் வித்தையும் அபாரம்.

ஆரம்பத்தில் சென்னையில் நிகழ்ந்த ஒரு கொலையை விசாரிக்கத் துவங்கிப் பின்னர் துர்கா யார் என்கின்ற தேடுதல் வேட்டையில் சி.பி.ஐ. அதிகாரி ஆதித்யா மேனன் உடன் தன்னையும் இணைத்துக் கொள்ளும் காவல்துறை அதிகாரியாக பரத் நடித்திருக்கிறார். எமோஷ்னலான காட்சிகளில் அவர் இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கலாம் என்று தோன்றியது. ஏனென்றால் அவர் எமோஷ்னல் ஆகும் இடத்தில் பார்வையாளர்களுக்கு எந்தவொரு எமோஷனும் வராமல் போவது ஒரு குறை. மேலும் துர்காவைத் தேடும் தேடுதல் பயணத்தில் கொல்கத்தா செல்லும் அவரின் பயணம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திப் பின்னர் சப்பென்று முட்டுச் சந்தில் முடிந்துவிடுவதும் ஒரு குறை.

முதலமைச்சரின் மகளாக, ஒரு புறம் அப்பாவின் வழக்கை ஒன்றும் இல்லாமல் போகச் செய்து அப்பாவைக் காப்பாற்றப் போராடும் ஒருபுறம், உள்ளூற அப்பா சிறைக்குப் போய்விட்டால், அவரிடம் எடுக்கும் நல்ல பெயரைக் கொண்டு அடுத்த முதல்வராக தான் ஆகிவிட வேண்டும் என்கின்ற அதீத ஆவல் மறுபுறம் என இரண்டு எதிரெதிரான உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கி, அதை அவ்வப்போது அத்தியாவசியமான இடங்களில் மட்டும் வெளிக்காட்டி அசரடிக்கிறார் ரம்யா நம்பீசன். எங்கே அரசியல் ஆலோசகர் மீதான கரிசனத்தில் தன் முதல்வர் கனவு வில்லங்கம் வந்துவிடுமோ என்று ரம்யா பதறும் பதட்டம் அட்டகாசம்.

கட்சி துவக்கத்தில் இருந்து உடனிருக்கும் உற்ற தோழன், கட்சியின் பொதுச் செயலாளர் கதாபாத்திரத்தில் சந்தான பாரதி நடித்திருக்கிறார். எதிர்கட்சி முகாமில் இருந்தவர்களை இவர் சந்தித்துப் பேசிவிட்டார் என்கின்ற செய்தி தெரிந்து, முதல்வரின் மகள் இவரை எடுத்தெறிந்து பேசுவதை ஏற்க முடியாமல் கொதித்துப் போய் நான் கட்சியை விட்டே போகிறேன் என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு நடந்து போகும் போது, அந்த நடையில் கூட அத்தனை அவமானமும் அவநம்பிக்கையும் தெரிகிறது. உடைந்த குரலில் தன் நண்பன் அருணாச்சலத்தைப் பார்க்க வந்து, “அருணா” என்று அடித் தொண்டையில் அழைத்துக் கொண்டே தோள் தொடும் போது பண்பட்ட நடிப்பால் நம் நெஞ்சம் தொடுகிறார் சந்தானபாரதி.

ரம்யா நம்பீசனின் மாமாவாகக் கட்சியில் முக்கியமான பொறுப்பில் இருந்து கொண்டே அடுத்த முதல்வராக ரம்யாவைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கும் கதாபாத்திரத்தில் கவிதா பாரதி பொருந்திப் போகிறார். புதிர் நிறைந்த கதாபாத்திரமாக வரும் கனி குஷ்ருதி, அந்தக் கதாபாத்திரத்திற்கு தன் அழுத்தமான நடிப்பால் நியாயம் சேர்த்திருக்கிறார். ஸ்ரேயா ரெட்டியின் மகளாக நடித்திருக்கும் சாரா ப்ளாக் தன் தாய் மீது கொண்ட வெறுப்பையும் வாழ்க்கை மீது கொண்ட அவநம்பிக்கையையும் அணு அணுவாக முகத்தில் தாங்கி நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். இன்றைய இளம் தலைமுறையின் விட்டேத்தியான மனநிலையையும் உடல்மொழியையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவர்களைத் தவிர்த்து ஸ்ரேயா ரெட்டியின் பணிப்பெண்ணாக வரும் அந்த வாய் பேச முடியாத எலிசபெத் கதாபாத்திரமும், அதன் உள்ளத்தூய்மையும் நம்மை ஏதோ செய்துவிடுகிறது. நாம் வாழ்கின்ற வாழ்க்கையில் இது போன்ற ஒரு ஒற்றை உறவையாவது நாமும் சம்பாதித்துவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளக்கிடக்கையில் பீறிடுகிறது. தாய்க்கு பணிவிடை செய்வதோடு அவளை அன்பால் அரவணைத்து, அவளை வெறுக்கும் மகளையும் அதே அன்போடு அரவணைத்து வாய்மொழி பேசாது, அன்பின் மொழியால் அவர்களை ஆளும் அந்த எலிசபெத் கதாபாத்திரம் ஒட்டு மொத்த கதாபாத்திரங்களில் ஒரு க்ளாசிக்கல் டச் கொண்ட கதாபாத்திரம். வெகு சிறப்பாக நடித்திருக்கும் அந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள்.

ஜிப்ரானின் பின்னணி இசை மொத்தமாக எட்டு அத்தியாயங்களுக்கும் உயிர் கொடுத்திருக்கிறது. ஒட்டு மொத்த தொடரின் அடிநாதம் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில் என்பதால், காட்சிக்குக் காட்சி இருண்மையான மனநிலையை உருவாக்கும் ஓர் இசையை இழையோடவிட்டிருக்கிறார் இசையமைப்பாளர். அவரோடு சேர்ந்து கூடுதல் பின்னணி இசைக்காகப் பணியாற்றி இருக்கும் சைமன் கே. கிங் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 98

ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவியின் போட்டோகிராஃபி படத்திற்கு கூடுதல் அழகைக் கொடுத்திருக்கிறது. ஜார்கண்ட், பீகார், கொல்கத்தா, ஒரிசா, தமிழ்நாடு என அந்தந்த நிலவரைவியலை அப்படியே தன் கேமராவில் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார். ஒளியும் இருளும் கலந்த ஒவ்வொரு திரைச்சட்டகத்தின் ஒளியமைப்பும் தொடருக்கான மர்மத்தைக் கூட்ட உதவி இருக்கிறது. ரவிக்குமாரின் படத்தொகுப்புக்குத் தேவையில்லாத எந்த ஃப்ரேமையும் விட்டுவைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

வசந்தபாலன் எழுதி இயக்கி இருக்கிறார். ராடன் நிறுவனம் கொடுத்த ஒரு முதல்வர் தொடர்பான கதையில் சில பல மாற்றங்கள் செய்து இக்கதையை உருவாக்கி இருக்கிறார் என்பதை அவரது பேச்சில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் விபத்து, கெளரி லங்கேஷ் வீட்டு வாசலில் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது, ஆளும் மாநிலக் கட்சிகளைத் துண்டாடத் துடிக்கும் ஒன்றிய அரசின் காய் நகர்த்தல்கள், முதல்வரின் நாற்காலியைப் பிடிக்கத் காத்திருக்கும் கழுகுக் கூட்டங்கள் என சமகால அரசியல் நிகழ்வுகளை எந்த அளவிற்குப் பேச முடியுமோ அந்த அளவிற்குப் பேசி இருக்கிறார் இயக்குநர். அதற்காகப் பாராட்டுகள்.

மேலும் வசனங்களில் பொறுப்பற்ற தன்மையுடன் வளரும் இளைய தலைமுறைக்கு எதிரான சவுக்கடிகள் ஏராளம். “இந்தியாவை விட்டுப் போக வேண்டும் என்று விரும்புகிற டிபிக்கல் யங்க்ஸ்டரா நீயும்? ஸ்டேஜ்ல நின்னுக்கிட்டு ஒரு அரசியல்வாதி இந்த வாழ்க்கைல எனக்கு எதுவுமே கெடைக்கலன்னு புலம்புனா, உனக்கு அதப் பாக்க எவ்ளோ டிஸ்கஸ்டிங்கா இருக்கும். எனக்கும் உன் புலம்பலைப் பாக்கும் போது அப்டித்தான் இருக்குது. ஓ! உங்களுக்கு ஜூ-ல பாக்குறது தான் காடா? செல்ஃபோனை விட்டுட்டு சுத்தி என்ன நடக்குதுங்குறத பாக்கவே மாட்டிங்களா? இந்தத் தலைமுறை கூட ஒரு ஆண் பெண் நட்பைத் தப்பாத்தான் பாக்குதா?’ என பல்வேறு இடங்களில் எழுத்து அத்தனை வலிமையாகத் தவறுகளை வன்மையாகக் கண்டிக்கிறது. ஹாட்ஸ் ஆஃப் டூ வசந்தபாலன்!

கதை மற்றும் திரைக்கதையாகப் பார்த்தால், முதல்வர் நாற்காலியைப் பிடிக்க நடக்கும் குழிப்பறிப்புகள், ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க கட்சிகள் நடத்தும் கொரில்லா தாக்குதல்கள் இவற்றுக்கு இடையே வட மாநிலங்களில் நடந்த கொலை தொடர்பாக நீடிக்கும் மர்மம். இவற்றிக்கு இடையேயான முடிச்சுகளை அவிழ்ப்பதே திரைக்கதை. அதை முடிந்த அளவிற்கு சுவாரசியமாகவே கொடுத்திருக்கிறார்கள். சில அத்தியாயங்களுக்குப் பின்னர் கொலைகாரி யார் என்கின்ற ரகசியம் ஓரளவிற்கு யூகிக்கக்கூடியதாக மாறினாலும் கூட, முதல்வர் பதவிக்கு என்ன ஆபத்து நேரிடும் என்கின்ற சுவாரசியம் தொடர்வதால் அத்தியாயங்களை உற்சாகத்துடன் பார்க்க முடிகிறது.

மொத்தத்தில் தலைமை(ச்) செயலகத்தை அது பேசியிருக்கும் சமகால அரசியலுக்காகவும், அதிலிருக்கும் கூர்மையான சமூக சிந்தனையுடன் கூடிய வசனங்களுக்காகவும், கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கும் நடிகர் நடிகைகளின் அற்புதமான நடிப்பிற்காகவும், மேம்பட்ட சில அரசியல் புரிதலுக்காகவும் நிச்சயமாகப் பார்க்கலாம்.

நன்றி : இதுதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE