’இங்க நான்தான் கிங்கு’ விமர்சனம்
திருமணத் தகவல் மையத்தில் வேலை பார்க்கும் சந்தானம் வீடு வாங்கியதில் 25 லட்ச ரூபாய் கடனில் உள்ளார். ஒரு கல்யாணத்தை பண்ணி அதன் மூலம் வரும் வரதட்சணையில் கடனை அடைக்க ‘வெயிட்டான’ வரனை தேடுகிறார். அவரது தேடலுக்கு கிடைக்கிறது ஒரு ஜமீன் குடும்பம். ரத்னபுரி ஜமீனான தம்பி ராமையா தன் மகள் பிரியாலயா (அறிமுகம்) சந்தானத்திற்கு கட்டி வைக்கிறார். இங்கதான் ஆரம்பிக்கிறது டிவிஸ்ட். திருமணம் முடிந்த மறுநாளே தம்பிராமையாவின் குடும்பம் வாழ்ந்து கெட்ட குடும்பம் என தெரிய வர நொந்து போகிறார் சந்தானம். இப்போ மனைவியுடன் சேர்த்து மாமனார் தம்பிராமையா மச்சான் பால சரவணனையும் அழைத்துக்கொண்டு தனது வீட்டில்குடியேறுகிறார் சந்தானம்.
இப்போது மனைவி குடும்பத்தாலும் தனிப்பட்ட ஒரு பிரச்சனையிலும் சிக்குகிறார் சந்தானம். இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து சந்தானம் எப்படி எஸ்கேப்பாகிறார் என்பதே மிச்ச கதை.
ஆக்ஷன், காமெடி, காதல், நடனம் என எல்லாவற்றையும் அளவாகத் தொட்டுச் செல்லும் வெற்றி கதாபாத்திரத்தை, தன்னுடைய கூலான ஸ்டைலில் குறைவின்றி செய்திருக்கிறார் சந்தானம். முக்கியமாக, ஒன்லைன் கவுன்ட்டர்கள் அடிக்கும் இடங்களில் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறார். கதாநாயகி பிரியாலயா கொடுத்த வேலையை மட்டும் செய்திருக்கிறார். கதாநாயகனுக்கு அடுத்தபடியாக கைதட்டல் வாங்கும் தம்பி ராமையா, தனது அப்பாவித்தனமான காமெடிகளாலும் ‘அடப்பாவி’ தனமான தொந்தரவுகளாலும் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் ஓவர் டோஸாக இருந்தாலும், அது குறையாகத் தெரியவில்லை.
டெரராகவும், காமெடியாகவும் மாறி மாறிப் பயணிக்கும் கதாபாத்திரத்தில்(ங்களில்) தேவையான பங்களிப்பை அளித்திருக்கிறார் விவேக் பிரசன்னா. பிணமாக அவரின் நடிப்பு அட்டகாசம்! பால சரவணன், முனீஸ்காந்த்தோடு, சேஷு, கூல் சுரேஷ், மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட சந்தான காமெடி யுனிவர்ஸின் ஏஜென்ட்களும் ஒரு கலகலப்பான காமெடி படத்திற்கான சேட்டைகளைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
ஓம் நாராயணனின் ஒளிப்பதிவும், எம்.தியாகராஜனின் படத்தொகுப்பும் தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. டி.இமான் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் ‘குலுக்கு குலுக்கு’ பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. ‘வழக்கமான’ டி.இமான் பாடலாக ஒலிக்கும் மற்ற பாடல்கள் ஒன்றுக்கும் உதவாத படத்தின் ரத்னபுரி ஜமீன் கணக்காக மாறி படத்தின் ஓட்டத்திற்கு வேகத்தடையாக இருக்கின்றன.
எக்கச்சக்க காமெடி கதாபாத்திரங்கள் ஒரே ‘ஐக்யூ’ லெவலில் வந்தாலும், அவற்றைத் துருத்தலின்றி கதையோட்டத்தோடு இணைத்து, அவற்றுக்குத் தேவையான இடத்தையும் கொடுத்திருக்கிறது எழிச்சூர் அரவிந்தனின் எழுத்து. இந்திய நகரங்களில் நடக்கும் குண்டுவெடிப்புகள், சென்னையில் சுற்றித் திரியும் தீவிரவாதிகள் எனப் புளித்துப் போன கான்செப்ட்டானது திரைக்கதையை விறுவிறுப்பாக்கும் என நம்பி சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் லாஜிக்கும் இல்லை, ஆழமும் இல்லை என்பதால் பிசுபிசுக்கவே செய்கிறது. வரிசை கட்டும் பாடல்களும் பரபர திரைக்கதைக்குக் கட்டைப் போடுகின்றன.