‘PT சார்’ எல்லோருக்கும் பிடித்த சாரா? – விமர்சனம்
நூற்றாண்டுகள் மாறினாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் மாறவில்லை. இதுபற்றி ஏற்கனவே நிறைய சினிமாக்கள் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அதே கருவை மையமாககொண்டு வெளிவந்திருக்கும் இன்னொரு படம் இது.
கதை…
தியாகராஜனுக்கு சொந்தமான பள்ளியில் பிடி வாத்தியாராக பணிபுரிகிறார் ஆதி. அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் காஷ்மிராவுடன் காதலாகும் ஆதி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஜாலியாக இருக்கிறார். இந்நிலையில் ஆதியின் எதிர்வீட்டில் இருக்கும் இளவரசுவின் மகள் அனிகா சில பொறுக்கிகளால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார். அது வீடியோவாகவும் வெளியாக அனிகாவை அவர் படிக்கும் கல்லூரி நிர்வாகம் தவறாக பேசுவதுடன் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்கிறது. இதனால் பயந்துபோகும் அனிகா, கல்லூரி சேர்மனான தியாகராஜனிடம் சென்று முறையிடுகிறார். அப்போது தியாகராஜனும் அனிகாவிடம் தவறாக நடக்க முற்படுகிறார். அங்கிருந்து தப்பிக்கும் அனிகா தற்கொலை செய்துகொள்கிறார்.
அனிகாவின் தற்கொலைக்கு காரணம் தியாகராஜன் என்பதை தெரிந்துகொள்ளும் ஆதி, தியாகராஜனுக்கு எதிராக வழக்கு தொடுக்க, பல சிக்கல்களை சந்திக்கிறார். இறுதியில் நீதி வென்றதா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ்.
ஹீரோ மெட்ரியலாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார் ஆதி. முதல்பாதி படத்தில் ஜாலி வாத்தியாராக கலகலப்பு ஏரியாவில் கலக்கும் ஆதி, இரண்டாம் பாதியில் சீரியஸ் டைப் ஹீரோவாக அடித்து ஆடுகிறார். அனிகாவுக்கு நடந்த அநீதிக்கு எதிராக களமிறங்கி, தியாகராஜனை நைய புடைக்கும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது. எமோஷன் எரியாவில் மட்டும் “இந்த கோட்டை தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரக்கூடாது” என்கிற மாதிரி நிற்பது மைனஸ்.
ஆதியின் காதலியாக காஷ்மிரா. வழக்கமான ஒரு கேரக்டர்தான் என்றாலும் சொதப்பாமல் இருப்பதே ஆறுதல். ஆதியின் அம்மாவாக தேவதர்ஷினி நடிப்பில் சம்பளத்தைவிட அதிகமான பர்பாமென்ஸ். ஆதியின் அப்பாவாக வரும் பட்டிமன்ற ராஜா ஒரே ஒரு இடத்தில் சிரிக்கவைக்கிறார். மற்ற இடங்களில் நடிப்பில் செயற்கைத்தனம்.
கதையின் ஆதாரமே அனிகா கேரக்டர்தான். அதை உணர்ந்து உள்வாகி அருமையாக நடித்துள்ளார். தன்னை எல்லோருமே தவறாக பேசும் இடங்களில் புழுவாக துடிப்பது பக்குவ நடிப்பு. கல்லூரி சேர்மனாக வில்லத்தனம் காட்டியிருக்கும் தியாகராஜனுக்கு தொடர்ந்து வில்லன் கேரக்டர் கிடைக்கலாம். அனிகாவின் தந்தையாக வரும் இளவரசு, தியாகராஜனை சந்தித்து பேசும் இடம் சிறப்பு. பிரபு, மதுவந்தி இருவரும் வக்கீல்களாக வருகிறார்கள். இதில் மதுவந்தி ஸ்கோர் செய்கிறார். நீதிபதி கேரக்டர் என்றாலும் வழக்கமான தனது பாணி நடிப்பிலிருந்து சற்றும் விலகாமல் ரசிக்க வைக்கிறார் பாக்யராஜ்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டும் படத்துக்கு பலம். டீச்சரை மாணவன் காதலிப்பது, ஆட்டோ டிரைவர்களையும் ரேஷன் கடை ஊழியரையும் காமுகன்களாக சித்தரிப்பது போன்ற இடங்களில் இயக்குனர் கவனம் பிசகியிருக்கிறார்.
சிறுசிறு குறைகள், க்ளைமாக்ஸ் லாஜிக், டிராமாத்தனமான வசனங்களை தவிர்த்திருந்தால் ‘பிடி சார்’ எல்லோருக்கும் பிடித்த சாராக மாறியிருப்பார்.