திரை விமர்சனம்

கதை+ கதாபாத்திரங்கள் + காட்சி அமைப்புகள் = குழப்பங்களே: ‘பயமறியா பிரம்மை’ விமர்சனம்

டைட்டிலே வித்தியாசமா இருக்கே படம், புதிய உலகத்தின் வாசல் திறக்குமோ என்ற எதிர்பார்ப்பில் படம் பார்க்க தொடங்கினால்.. கதை தொடங்கிய கொஞ்ச நேரத்தில் நொந்த போன நூடுல்ஸை வேக வைக்கும் வேலையை செய்யத்தொடங்கிறது நமது மூளை.

அப்படியென்ன கதை?…

‘பயமறியா பிரம்மை’ என்ற புத்தகத்தை சில வாசகர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  எழுத்தின் தாக்கத்தால் ஒவ்வொரு வாசகர்களும் தங்களை அந்த புத்தகத்தில் வரும் கதாபாத்திரமாக கற்பனை செய்துகொள்கிறார்கள். இன்னொரு பக்கம் சாகித்யா அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கபிலன் 96 பேரைக் கொலை செய்த சிறைக்கைதி ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கையைக் கதையாக எழுத அவரை சிறையில் சந்தித்துப் பேசுகிறார்.

எழுத்தாளர் தான் எழுதிய எழுத்துகளை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திப்பேச, பதிலுக்கு தான் செய்த கொலைகள் கலைகள் என்கிற ரேஞ்சில் வியாக்கியானம் தருகிறார். இந்த ரெண்டு பேரின்  பேச்சுகளுக்கு இடையே விரியும் கதைகள் + கதாபாத்திரங்கள் + காட்சி அமைப்புகள் = குழப்பங்களே..  ‘பயமறியா பிரம்மை’.
சிறைக்கைதியிடம் கதை கேட்கும் எழுத்தாளராக வினோத் சாகர், கைதியாக ஜெடி (அறிமுகம்) சுற்றி பிண்ணப்படும் திரைக்கதை வலையில்… எட்டுக்கால் பூச்சியாக சிக்கிக்கொண்டு தவிப்பது படம் பார்ப்பவர்களே.  ஜெகதீஸாக தங்களைக் கற்பனை செய்து கொள்பவர்களாக குரு சோமசுந்தரம், ஹரீஷ் உத்தமன், சாய் பிரியங்கா எனப் பலர் வந்து போகிறார்கள். இதில் குரு சோமசுந்தரம் (ஜோக்கர் புகழ்) மட்டும் அட்டகாசம்.

ஒரு வித குழப்பத்துடனே நடக்கும் இந்தக் கதையில் ‘கே’யின் பின்னணி இசை  ஆறுதல் . 70-80 காலகட்டங்களில் நடக்கிற கதை என்பதால் ஒளிப்பதிவாளர் நந்தா மெனக்கெட்டிருக்கிறார். ஏகப்பட்ட முட்டு சந்துகளில் முட்டி நிற்கும் திரைக்கதை வண்டியை ரிவர்ஸ் கியர் போட்டு மெயின் ரோட்டில் நிறுத்தும் பெரும் பொறுப்பில் கவனிக்க வைக்கிறார் படத்தொகுப்பாளர் அகில் பிரகாஷ்.

பிணத்தை ரம்பம் கொண்டு அறுப்பது, ரத்த சகதியில் விழுந்து புரளும் காட்சிகள் குமட்டல். கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால் ஒரே குஷ்டமப்பா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE