அஜித்தின் நெடும்பயணம் ‘விடாமுயற்சி’ : ரிலீஸ் தேதி எப்போது?
தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியத் திரையுலகின் முன்னணி மற்றும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி, இணையற்ற பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்கியவர் மற்றும் தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்றவர்.
‘மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களுக்குப் பிடித்த காம்பினேஷனாக மாறிய நடிகர்கள் அஜித்குமார் – த்ரிஷா – ஆக்ஷன் கிங் அர்ஜுன் மூவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறும்போது, “எங்கள் சிறப்பு தயாரிப்புகளில் ஒன்றான ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது முதல் ரசிகர்கள் இந்த படத்தின் மீது தங்கள் அன்பையும் ஆதரவையும் பெருமளவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டிருக்கிறோம். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் நடுப்பகுதியில் படப்பிடிப்பு முடிவடையும். ரிலீஸ் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றார்.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். என் பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். மிலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சுப்ரீம் சுந்தர் (ஸ்டண்ட்ஸ்), அனு வர்தன் (ஆடைகள்), சுப்ரமணியன் நாராயணன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), ஜே. கிரிநாதன் & கே ஜெயசீலன் (தயாரிப்பு நிர்வாகி), ஜி ஆனந்த் குமார் (ஸ்டில்ஸ்), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைனர்), ஹரிஹரசுதன் (விஎஃப்எக்ஸ்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு), மற்றும் ஜிகேஎம் தமிழ் குமரன் (லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.
சன் டிவி சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ‘விடாமுயற்சி’ படத்தின் திரையரங்குக்கு பிந்தைய ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது.