சினிமா செய்திகள்

‘இந்தியன் 2’ வசதியான குடும்பம் : கமல் கலகல

‘இந்தியன் 2’வுக்காக குறிப்பாக  சேனாபதிக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஜுலை 12ஆம்தேதி படம் ரிலீஸை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

அப்போது கமல் பேசியதாவது :-

“விபத்துகள், கோவிட், உடன் நடித்த நடிகர்களின் அகால மரணங்கள் என ஒரே படத்தில் நான் இத்தனை அனுபவங்களை சந்தித்தது இதுதான் முதல்முறை. எல்லாவற்றையும் தாண்டி நாங்கள் செய்த வேலைக்கு பயன் கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.  ‘இந்தியன்’ நடுத்தர குடும்பம் என்றால்  ‘இந்தியன் 2’ வசதியான குடும்பம். வசதி என்றால் பணம் மட்டுமில்லை. திறட்டக்கூடிய திறனும்.

இந்தப்படத்தில் கதைக்கு கிடைத்த முக்கியத்துவம் நடிகனுக்கு கிடைக்கவில்லை. என் முகத்தில் பிளாஸ்த்திரி ஒட்டி, இறுக்கமான உடைகள் கொடுத்தது என எதையும் என்னால் அனுபவிக்கமுடியவில்லை. ஒருநாள் என் முகமெல்லாம் எறும்பு கடிப்பது போல் இருந்தது. என்னால் முடியவில்லை என்றதும் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதன் பின் மூன்று நாட்கள் என்னால் நடிக்க முடியவில்லை. வேற்று மொழியில் நீளமாக பேசும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட காட்சி இருக்கிறது.

எம்ஜிஆரின்  ‘அடிமை பெண்’ படத்துக்காக சத்யா ஸ்டூடியோவில் போடப்பட்ட செட்டை பார்ப்பதற்காக ஆர்வமுடன் சென்றிருக்கிறேன். ஜெய்ப்பூரை கண்முன் நிறுத்தி இருந்தார்கள். அதைவிட பிரம்மாண்டமான செட் ‘இந்தியன் 2’வில் இருக்கிறது. நான் பார்த்து பிரமித்துவிட்டேன். படம் பார்க்கும்போது உங்களுக்கும் வியப்பாக இருக்கும். இதுபோல் நிறைய பிரமாண்டம் படத்தில் இருக்கிறது.

இப்படி பேசிக்கொண்டு வந்த கமலிடம்,    “இத்தனை வருட அனுபவத்தில் கற்றுக்கொண்டது என்ன? என்று கேட்டபோது, கமலின் சொன்ன பதில்…

“கற்றது இருப்பது நல்லதுதான். ஏனெனில் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். இந்த தலைமுறை என்னைவிட அதிகமாக கனவு காண்கிறார்கள். எனக்குத்தான் நட்சத்திர அந்தஸ்து வந்துவிட்டதே என்பதற்காக ஆர்வம் குறைந்துவிடக்கூடாது.  ‘தேவர் மகன்’ படத்தில் நடித்தபோது காலை 7 மணிக்கு ஷாட் என்றால் நடிகர் திலகம் 6.45 மணிக்கெல்லாம் ஸ்பாட்டுக்கு வந்து உட்கார்ந்து விடுவார். அப்படியான ஆர்வத்தை பார்த்தவன் நான்.

ஒளவையாராக நடித்த கே.பி.சுந்தரம்பாள் என் வீட்டுக்கு பின்னாடி வீடுதான். அவர்களிடமே சென்று  வெட்கமே இல்லாமல் ‘பழனியப்பா ஞான பழனியப்பா’ பாடலை பாடி காட்டியிருக்கிறேன். அவரும் கனிவாக கேட்டுவிட்டு இட்லி சுட்டு தருவார். ஒளவையாரிடமே ஞான பழம் இல்லை ஞான இட்லி வாங்கி சாப்பிட்டதையெல்லாம் பாக்கியமாக பெற்றவன் நான்” என்றார்.

இந்தியன் 2’ சென்சார் செய்யும்போது என்ன நடந்தது? என ஷங்கரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்..

“பொதுவா சென்சார் அதிகாரிகள் ஒரு படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவதென்பது அபூர்வம்.  ‘இந்தியன் 2’ பார்த்துவிட்டு பாராட்டினார்கள். ஆனால் ஒரு கிளாமர் சீனை வெட்ட வேண்டும் என்றார்கள்.  “அது படத்துக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறதே “ என்று நான் சொன்னபோது,    “இல்ல சார் இது நல்ல படம். குடும்பமாக வந்து இந்த படத்தை பார்க்கணும். அதனால் இதை நீக்கிவிடுங்கள்” என்று சொன்னார்கள். அது எனக்கு சரியாக பட்டதால் அந்த காட்சியை நீக்கிவிட்டோம். அதேபோல் சில இடங்களில் கெட்ட வார்த்தைகள் பேசுவதுபோல் இருந்தது. அதையும் நீக்கிவிட்டார்கள். மற்றபடி சென்சார் கடுமையாக நடந்துகொள்ளவில்லை” என்றார்.

தொடர்ந்து சேனாபதி கேரக்டர் உருவான விதம் குறித்து பேசிய ஷங்கர், “முதலில் கமல் சார் அவரது அப்பா மற்றும் அண்ணன்களின் போட்டோக்களை கலை இயக்குனர் தோட்டா தரணியிடம் கொடுத்து ஒரு ஸ்கெட்ச் போட்டுத் தரச்சொன்னேன். அந்த ஸ்கெட்சில் கமல் சாரின் தோற்றம் பார்த்ததுமே ஒரு சிலிர்ப்பு வந்துவிட்டது. அந்த ஸ்கெட்ச்தான் படத்தில் நீங்கள் பார்க்கப்போகும் கமல் சாரின் சேனாபதி கெட்டப். அவர் மேக்கப்  போட்டு செட்டில் இருந்தால் அங்கே கமல் சார் இருக்கிறார் என்பது தெரியாமல் இந்தியன் தாத்தாவை பார்ப்பது போன்ற பயம் இருக்கும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE