‘டீன்ஸ்’ – விமர்சனம்
புதிய முயற்சிகளில் சொல்லி அடிக்கும் ‘கில்லி’ பார்த்திபன். இந்த முறை அவர் இயக்கி வெளிவந்திருக்கும் ‘டீன்ஸ்’ எப்படி?
கதை…
ஒரே பள்ளியில் படிக்கும் பதிமூன்று டீன் ஏஜ் சிறுவர்கள். ஆனால் அவர்களுக்கும் இறக்கை முளைத்துவிட்டதாகவும் உலக ஞானம் பெற்றுவிட்டது போலவும் ஒன்றுகூடி பேசுகிறார்கள். ஒரு த்ரிலிங் டிராவல் செய்வதென முடிவெடுக்கிறார்கள். நட்சத்திரா என்ற சிறுமியின் பாட்டி வீடு இருக்கும் ஒரு கிராமம்தான் ஸ்பாட். பள்ளிக்கு போகும் அவர்கள், வகுப்பில் ஏமாற்றிவிட்டு பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஒரு பொட்டல் காட்டு வழியில் பயணிக்கும் அவர்கள் அமானுஷ்ய அனுபவங்களை சந்திக்கிறார்கள். வந்தவர்களில் ஒருவர் ஒருவராக மாயமாக அடிவயிற்றிலிருந்து அவர்களுக்கு பயம் கிளம்புகிறது. இதற்குள் ஒரு சிறுவனுக்கும் பெற்றோரை இழைந்த சிறுமிக்கும் ஏற்படும் பாச பந்தம்; இன்னொரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் ஏற்படும் வயது மீறிய காதல் என ’நடக்கும்’ கதையில் மாயமானவர்கள் என்னாகிறார்கள்; பயணம் நிறைவேறுகிறதா என்பதுதான் மிச்ச கதை.
சிறுவர்களின் நடிப்பு..
எல்லோருமே நடிக்க தெரிந்தவர்களாக இருப்பதற்காக ஒரு சபாஷ். ஆனால் வயதுக்கு மீறிய காது வரை நீளும் வாய்.. பக்குவமற்ற காதல் இதெல்லாம் கொஞ்சம் ஓவர். இதில் அந்த ஆதரவற்ற சிறுவனுக்கும் அவன் நிலை அறிந்த ஆதறிக்கும் சிறுமிக்குமான பாசம் மட்டும் மனதை தைக்கிறது. அப்புறம் இரண்டு காட்சியில் வரும் யோகி பாபு காமெடிகள் எந்த கியரையும் போடாமல் வண்டி அப்படியே நிற்கிறது.
பார்த்திபன்..
இடைவேளைக்கு பிறகு வருகிறார் பார்த்திபன். வான்வெளி ஆய்வாளராக வரும் அவர் ஓல்டு கண்டெய்னர் ஒன்றில் உட்கார்ந்தபடி புரியாத ஆய்வுகளை செய்யும் காட்சிகள் கொட்டாவி ரகம். இயக்குனராகவும் நிறையவே சறுக்கியுள்ளார். பக்குவமற்ற காய்களை கெமிக்கல் போட்டு பழுக்க வைப்பதுபோலவே சிறார்களை வயதுக்கேற்ற வசனம் பேச வைக்காமல் பொறுப்பற்றத்தனம் காட்டியுள்ளது நியாயமற்றது.
திரைக்கதை…
படம் தொடங்கி ஒரு பத்து நிமிடங்கள் மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ ஸ்டைலில் படம் போகலாம் என்று ஆர்வம் எழுவதை அடுத்த 15ஆவது நிமிடத்தில் தகர்த்து உடைக்கிறார் இயக்குனர். பொட்டல் காட்டில் ஒரே இடத்தில் ஓடுவதும், அதே இடத்திற்கு திரும்பி வருவதுமாக திரைக்கதை தெம்பில்லாமல் சண்டித்தனம் செய்கிறது.
தொழில் நுட்பம்..
இடைவேளைக்குப்பிறகு சயின்ஸ் பிஃக்ஷன்ஸ் நாற்காலியில் அமரும் கதையும் சரியான விஎஃபெக்ஸ் இல்லாமல் தடுமாறுகிறது. அப்புறம் காதலுக்காக டூயட் உட்பட இமானின் இசை எடுபடவில்லை. ஒளிப்பதிவும் உருப்படி இல்லை.
மொத்தத்தில் இந்த முறை புது முயற்சியில் புதுமை பித்தன் தோற்றுவிட்டார்.