இந்தியன் தாத்தாவின் வர்மம் திருத்துவதாக!
எழுதக்கூடாது என்றே நினைத்தேன்.. எழுதுகிறேன்.
கழுத்தை அறுக்கலாம்… கையை வெட்டலாம்… பச்சை பிள்ளையை நாசமாக்கலாம் இதுபோன்ற காட்சிகள் வரும் படங்களை கொண்டாடும் இதயங்களே.. சேனாபதியை உண்டு இல்லையென அவரை நிர்வாணமாக்கும் உங்களுக்கு இரக்கமோ கூச்சமோ இல்லையா?
‘இந்தியன் 2’ அப்படியொன்றும் சிறந்த படமில்லை. குறைகள் இருக்கிறது. ஆனால் குடலை அறுத்து மாலையாக போடுமளவிற்கு மோசமான படமில்லை. திரைக்கதை தொய்வு, ஊழல் பெருச்சாலிகளை சேனாபதி கொல்லும் இடத்தில் பேசிக்கொண்டே இருப்பது; நாயகன் அவ்வப்போது காணாமல் போய் அவ்வப்போது உள்ளேன் ஐயா சொல்வது என்று நிறைய சறுக்கல் இருக்கவே செய்கிறது. அதற்காக இந்த சமூகத்திற்காக பேசும் ஒரு படைப்பாளியின் குரல்வளையை நெரிக்கும் அளவிற்கு அவர் குற்றவாளி அல்ல.
இதில் ஒருவர் சொல்கிறார்.. படத்தில் வசனம் மிகப்பெரிய மைனஸ் என்று. சார் நீங்கள் அப்’போதை’க்கு கவனிக்க தவறி இருக்கலாம். ஒரு வசனம் உதாரணத்திற்கு …. “உன்னோட அப்பா கைது செய்யப்படும்போது உன் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் துளி, மாற்றத்தின் விதை மீது விழுந்த முதல் நீர்த்துளி”. போதுமா சார்.
சினிமா பொழுதுபோக்கு மீடியம். ஆனால் அது சமூகத்திற்குமானது. தெரு கூத்து, ஓரங்க நாடகம், மேடை நாடகம் இதெல்லாம் சேர்ந்துதான் சுதந்திரத்திற்கு வித்திட்டது. (வெள்ளைக்காரன் ஆட்சியே பரவாயில்லை என்ற கருத்தை விவாதிக்கும் களம் வேறு) ஆக.. ஊழல் இல்லாத இந்த சமூகம் மாற, “உன் வீட்டில் உள்ள களையை பிடுங்கு நாட்டில் உள்ள களை தானாகவே போகும்” என்ற கான்செப்ட் உங்களை உதைக்கிறது போலும்.
சமூகத்தின் மீது துளி அக்கறை உள்ளவர்கள் நீங்கள் என்றால் இந்தப்படம் குறித்து சேற்றை அள்ளி வீசமாட்டீர்கள். காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகனுக்கு, எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற ஏமாற்றத்தை அளித்தாலும் யாரையும் மோசடி செய்யும் படமல்ல இது. அப்படி நினைப்பவர்களை இந்தியன் தாத்தாவின் வர்மம் திருத்துவதாக!
குறிப்பு : ரஜினி, கமல், அஜித், விஜய் மற்றும் பலரின் ரசிகன் நான்.
– தஞ்சை அமலன்
– தஞ்சை அமலன்