என் வாழ்வின் வலிதான் ‘வாழை’ படம் : நெகிழும் மாரிசெல்வராஜ்
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ என மூன்றே படங்கள்தான். ஆனால் 30 படங்கள் பண்ணிய அனுபவம், பெயர், புகழை பெற்று தனித்த அடையாளத்துடன் நிற்கிறார் மாரி செல்வராஜ். இயக்குனர்கள் ராம், பா.ரஞ்சித்தின் சிஷ்யர்.
இப்போது ’வாழை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இது மாரிசெல்வராஜ் கடந்து வந்த கரடுமுரடான வாழ்க்கை கதை. இப்படத்தில் மாரி செல்வராஜின் சொந்த அக்கா மகன்கள் இளவயது மாரியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கலையரசன், நிகிலா, திவ்யா துரைசாமி நடித்துள்ளனர். சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா, சென்னையில் இன்று மாலை நடந்தது. தயாரிப்பாளர்கள் கலைப்புலி தானு, ரெட்ஜெயண்ட் செண்பக மூர்த்தி, இயக்குனர்கள் ராம், பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் மாரி செல்வராஜ் பேசியதாவது:-
“ ‘வாழை’ என் சொந்த கதை. வாழ்க்கையில் நான் பட்ட துயரங்களை இறக்கி வைத்த கதை இது. இயக்குனரானதும் முதலில் இந்த கதையைதான் படமாக இயக்க நினைத்தேன். அப்போது இந்த படத்துக்கு 50 லட்சம் பட்ஜெட் இருந்தால் போதும் என்று நினைத்தேன். ஒரு கட்டத்தில் இந்த கதையை கஷ்டப்பட்டு எடுக்கக்கூடாது என்று நினைத்தே முதல் படமாக ‘பரியேறும் பெருமாளை’ எடுத்தேன். தொடர்ந்து ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களை இயக்கியபோது இந்த கதை, எனக்குள் அடித்துக்கொண்டே இருந்தது. ‘மாமன்னன்’ எடுத்தபோதே இந்த படம்பற்றி உதயநிதியிடம் சொன்னேன். அவரும் ரிலீஸ் பண்ணிடலாம் என்றார்.
இந்த படத்திற்காக நடிகர்களிடம் நிறைய வேலை வாங்கினேன். கலையரசன், திவ்யா துரைசாமியை நூறு கிலோ சுமையை சுமக்க வைத்தேன். பாரத்தை சுமந்து டேக் முடித்து கழுத்து வலியுடன் இருப்பார்கள். “எங்கே ரீ டேக் வந்துவிடுமோ” என்ற பயம் அவர்கள் முகத்தில் இருக்கும். அதேபோல் ரீ டேக்கும் எடுக்கப்படும். அவ்வளவு உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். நிச்சயமாக ‘வாழை’ பார்க்கும் அனைவரையும் உருக்கும். ஆகஸ்ட் 23 படம் ரிலீஸ் ஆகிறது. அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்” என்றார்