அடித்து தூக்கும் ‘அந்தகன்’ : விமர்சனம்
வெட்டு, குத்து, ரத்தம் என வன்முறை தூக்கலா இருக்கும் படங்களுக்கு மத்தியில். க்ரைம் த்ரில்லர் ஜானர் என்றாலும் உறுத்தல் இல்லாத படமாக வெளி வந்திருக்கிறது பிரஷாந்தின் ‘அந்தகன்’
பார்வையற்ற பிரஷாந்த் ஒரு பியானோ கலைஞர். அவரை நடிகர் கார்த்திக் (நடிகராகவே வருகிறார்) திருமண நாளில் மனைவிக்கு (சிம்ரன்) சர்பிரைஸ் தருவதற்காக பிரஷாந்தை தனது வீட்டுக்கு வந்து பியானோ வாசிக்க அழைக்கிறார். அதன்படி கார்த்திக் வீட்டுக்குச் செல்லும் பிரஷாந்துக்கு காத்திருக்கிறது அதிர்ச்சி. வீட்டில் கார்த்திக் கொலை செய்யப்பட்டு அறையில் கிடத்தப்பட்டிருக்கிறார். யெஸ் பிரஷாந்த ஒரு காரணத்திற்காக பார்வையற்றவர் போல நடித்துக்கொண்டிருக்கிறார். இப்போது அந்த கொலையை சிம்ரனும் அவருடன் தவறான தொடர்பு வைத்திருக்கும் சமுத்திரகனியும் செய்திருப்பது பிரஷாந்துக்கு தெரிந்தாலும் கண் தெரியாதவர் போலவே நடந்துகொள்கிறார். ஒரு கட்டத்தில் பிரஷாந்த் பார்வையற்றவர் இல்லை என்ற உண்மை சிம்ரனுக்கு தெரியவர, சமுத்திரகனியுடன் சேர்ந்து பிரஷாந்தை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகிறார். இந்த சிக்கலில் இருந்து மீள பிரஷாந்த் நடத்தும் போராட்டமே கதை.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரஷாந்த் நடித்திருக்கும் படம். “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்பதுபோன்ற ஒரு நடிப்பை தந்திருக்கிறார் பிரஷாந்த். பார்வையற்றவர் போல் நடிப்பது சாதாரண விஷமில்லை. அதை சரியாக செய்து சபாஷ் வாங்குகிறார். சிம்ரனும் பிரஷாந்தும் சந்தித்துக்கொள்ளும் இடங்களில் யார் நடிப்பு சிறப்பு என்று பட்டிமன்றம் வைக்குமளவுக்கு மிரட்டி இருக்கிறார். தமிழ் சினிமாவில் இரண்டாம் இன்னிங்சில் அடித்து ஆட தொடங்கி இருக்கிறார் பிரஷாந்த்.
ஒரு கட்டத்தில் நடிப்பு, நடனம் இரண்டிலும் ராட்சசியாக இருந்த சிம்ரனுக்கும் ‘அந்தகன்’ கம் பேக் படமாக அமைந்துள்ளது. வஞ்சம், கோபம், கொலை வெறியை அத்தனை நயமாக வெளிப்படுத்தி தூள் கிளப்பி இருக்கிறார். நாயகி ப்ரியா ஆனந்த. படம் முழுக்க க்ளாமர் உடையில் கவர்ந்திழுக்கிறார். ஆனால் நடிப்பை பொறுத்தவரை வழக்கமான ஹீரோயினாக வந்துபோகிறார்.
சமுத்திரகனிக்கும் முக்கியத்துவமுள்ள கேரக்டர். அதை திறம்பட செய்திருக்கிறார்.நடிகர் கார்த்திக்காகவே வரும் கார்த்திக், சில காட்சிகளில் வந்தாலும் வழக்கம் போலவே சோபிக்கிறார். ஊர்வசி, யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் என படத்தில் நட்சத்திர பட்டாளம் ஏராளம். அவரவர்கள் பங்கில் சுதி சுத்தம் என்றாலும் ஊர்வசியிடம் மட்டும் ஓவர் நடிப்பு. யோகி பாபு, மனோபாலா ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றனர்.
கதைக்கேற்ற பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார் சந்தோஷ் நாராயணன். குறிப்பாக படத்தின் நாயகன் பியானோ கலைஞர் என்பதால் பின்னணியில் பல இடங்களில் பியானோ மெலடியை ஒலிக்க வைப்பது ஈர்ப்பு. ரவி யாதவின் ஒளிப்பதிவும் க்ரைம் த்ரில்லருக்கான லைட்டிங் மோடில் உறுத்தல் இன்றி காட்சிகளின் மீட்டருக்கு தகந்தது போல அமைந்திருப்பது சிறப்பு.
மகன் பிரஷாந்துக்கு கம் பேக் தரும் படத்தை தந்தையே இயக்கியிருக்கிறார். இந்தியில் ஹிட்டடித்த ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கே ‘அந்தகன்’ என்றாலும் அதை சொதப்பாமல் கைதேர்ந்த இயக்குனராக ஃபிரேம் பை ஃபிரேம் அசத்தி இருக்கிறார். இன்றைய யூத் இயக்குனர்களின் டேஸ்டுக்கு இணையாக தியாகராஜனின் இயக்கம் பேசப்படும்.
முதல் பாதி படத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் சஸ்பென்சும் நம் கண்களை திரையை விட்டு அகலாத வண்ணம் இருக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் சற்றே சறுக்கல். ஊர்வசி – யோகிபாபு – கே.எஸ்.ரவிக்குமார் சேரும் இடங்கள் நாடகத்தனம். முதல் பாதியில் ஏற்படும் விறுவிறுப்பை இரண்டாம் பாதியிலும் டெம்போ குறையாமல் மெயிண்டெயின் செய்திருந்தால், ‘அந்தகன்’ இன்னும் அதிகமாக அசத்தி இருப்பான்.
– தஞ்சை அமலன்