விக்ரம் நடிப்பில் மின்னும் ‘தங்கலான்’ – விமர்சனம்
நாடி நரம்பெல்லாம் நடிப்பு வெறி ஊறிப்போனவர்கள் மட்டுமே கதாபாத்திரமாக வாழும் சூத்திரம் அறிவார்கள். அவர்களில் ஒருவராக இந்திய சினிமாவின் உச்சத்தில் ஒருவராக இருக்கும் விக்ரமின் கரியரில் முக்கியமான படைப்பாக வந்திருக்கிறது ‘தங்கலான்’.
1850களில் தொடங்குகிறது கதை. வட ஆற்காடு மாவட்டம்.. .. வேப்பனூர் கிராமம். விவசாயத்தில் வரும் விளைச்சலில் உண்டு கழித்து உறவுகளோடு வாழும் கிராமத்தினரின் நிலங்களை வரி என்ற பெயரில் அபகரித்து அதிகாரம் செய்யும் மிராசுதார். தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கும் தங்கலானின் (விக்ரம்) நிலத்தையும் பிடுங்குகிறார் ஊர் மிராசு. செய்வதறியாது திகைக்கும் நேரத்தில் வருகிறது ஒரு வாய்ப்பு.
வெள்ளைக்கார துரையான கிளமண்ட் கோலார் நிலத்தில் தங்கம் எடுக்க கூலிக்கு ஆட்களை அழைக்கிறார். ஊர் மக்களோடு புறப்படும் தங்கலானும், அவரை நம்பிச்சென்றவர்களும் கிளமண்டின் வஞ்சகத்தில் சிக்குகின்றனர். தங்கம் வெட்டி எடுப்பதிலும் சூனிக்காரியின் தடைகளை சந்திக்கின்றனர். எதிர்பார்த்த தங்கம் கிடைக்கிறதா? வேப்பனூர் மக்களின் வாழ்வு செழிக்கிறதா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.
முதல் பாராவில் சொன்னதுபோலவே நடிப்பில் சாமி வந்து ஆடி இருக்கிறார் விக்ரம். உழைப்பின் சுவடை உடம்பில் அப்பிய கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார். இப்படி சொல்வதுகூட தவறுதான். கேரக்டருக்காக செத்து பிழைத்து தங்கலானாக மின்னுகிறார் விக்ரம். கையில் இருக்கும் தடியுடன் இடுப்பு நெளிய நடந்துவரும் அவரது உடல்மொழி, ஏமாற்றுக்காரர்களிடம் காட்டும் ஆக்ரோஷம், திசை மாற்றும் சூனிக்காரியுடன் நடத்தும் மனப் போராட்டம் என காட்சிக்கு காட்சி நடிப்பதற்காகவே பிறந்தவர் போல படம் பார்ப்பவர்களின் நாடி நரம்புகளிலும் ஊடுருவி உள்ளம் தொடுகிறார். விகரமுக்கு இன்னொரு தேசிய விருது பார்சல்.
நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்துவரும் பார்வதிக்கு இதுவும் ஒரு படம் என்று கடந்துபோய்விட முடியாது. சாதாரண குடியானவனின் மனைவியாக, நான்கு குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்திருக்கிறார். சூனியக்காரியாக மாளவிகா மோகனனும் அர்ப்பணிப்பை அள்ளிக்கொடுத்து அசரடிக்கிறார். பெருமாள் பித்தராக பசுபதி, பிரிட்டிஷ் அதிகாரியாக டேனியல், விக்ரமின் மூத்த மகனாக வரும் அர்ஜுன், வரதனாக ஹரி கிருஷணன் என அத்தனை பேரின் நடிப்பும், உழைப்பும் ஆகச்சிறப்பு.
இந்த கேரக்டர்கள் தவிர படத்தின் ஆகச்சிறந்த இன்னொரு கதாபாத்திரமாக கவனம் பெறுவது லொகேஷன்தான். அந்த வேப்பனூர் கிராமம், கோலார் தங்க வயலை நோக்கி பயணம் செய்யும் போது எதிர்கொள்ளும் இடங்கள் என புது உலகத்தை கண்முன் நிறுத்தும்; நகர வாழ்க்கையை மறக்கடிக்கும் லொகேஷன் மற்றும் அதற்கான மெனக்கெடல்களுக்கு மெடல் கொடுக்கலாம்.
150 வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டத்தை கண்முன் நிறுத்துவது போன்ற ஒரு கலர் டோனில் கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு. இரண்டு பாடல்களில் பிரமாத மெட்டுக்களை கொடுத்த ஜி.வி.பிரகாஷ், பின்னணி இசையில் ஏனோ சிறக்கவில்லை. பல இடங்களில் கருவிகளை அலறவிட்டு படத்திலிருந்து அந்நியப்பட்டிருக்கிறது பின்னணி. இவ்வளவு சப்தம் தேவையா?
உழைப்பாளர்களின் வியர்வையும் இரத்தமும் எப்படியெல்லாம் சுரண்டப்பட்டிருக்கிறது. மற்றவர்களின் வாழ்விற்கு அடித்தட்டு மக்களின் உழைப்பு எந்தெந்த வகையில் உதவி இருக்கிறது. விவசாயிகள், ஏழைகள் அன்றைய காலக்கட்டத்தில் எவ்வாறெல்லாம் ஒடுக்கப்பட்டனர் என்ற உண்மையை படம் நெடுக விதைத்திருக்கும் பா.ரஞ்சித் பாராட்டுக்குரியர். இப்படியான கதையை கையில் எடுத்ததற்காகவே சபாஷ். ஆனாலும் மீண்டும் தேவையற்ற திணிப்புகளை செய்திருப்பது திரைமொழிக்கு உதவாமல் ஆங்காங்கே சிக்குவதால் வெகுஜன ரசிகனை எவ்வாறு சென்றடையும் என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவே திரும்பி பார்க்கவைக்கக்கூடிய ஒரு படமாக வந்திருக்கவேண்டிய ‘தங்கலான்’, திரைக்கதையில் ரஞ்சித் போட்ட ஓட்டைகளால் தடுமாறுகிறது. இருந்தாலும் மொத்த டீமையும் கையாண்ட விதமும், அயராத அர்ப்பணிப்பும் பா.ரஞ்சித்தை அணைக்கத் தோன்றுகிறது.
‘தங்கலான்’.. விக்ரம் நடிப்பால் மின்னுகிறது!