‘வாழை’ : வைரம் பாய்ந்த வாழ்க்கை வலி
வெற்றிப்பட இயக்குனர் வரிசையில் தனக்கென்ற இருக்கையை தக்கவைத்திருக்கும் மாரிசெல்வராஜின் வலி நிறைந்த, வாழைக்காய் சுமந்த இளமை நாள்களின் துயர நொடிகளை கண்முன் நிறுத்தும் வாழ்வியலே இந்த ‘வாழை’ படம்.
திருநெல்வேலியில் உள்ள புளியங்குளம் கிராமம். சிவனனைந்தன், சேகர் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்கள். பட்டாம் பூச்சி பருவத்தில் பசிக்காக தவித்தாலும் அவர்களது துன்பங்களின் மருந்தாக இருக்கிறது பள்ளிக்கூடமும் டீச்சர் பூங்கொடியும். ஒருவன் ரஜினி ரசிகன் இன்னொருவன் கமல் ரசிகன். பள்ளிக்கூட விடுமுறை வந்துவிட்டால் மற்றவர்கள் போல விளையாட முடியாது. வாழைக்காய் சுமக்கும் வேலைக்குச் செல்ல வேண்டும். எவ்வளவுதான் வாழைக்காய் சுமந்தாலும் கடன் சுமை குறைந்தபாடில்லை. இதனாலேயே கட்டாயப்படுத்தப்பட்டு வாழைக்காய் சுமக்கிறான் சிவனனைந்தன். அவனது வாழ்க்கையும் வலியும், பசியும் பாரமுமே கதை.
முதல் பாதி படம் சிறுவர்களின் நட்பு, சண்டை, சமாதானம், குறும்பு என்று போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் பிற்பாதி படம் சிவனனைந்தனின் குடும்ப தத்தளிப்பு, அவன் சந்திக்கும் அவமானம், தண்டனை, வேதனை என படம் பார்ப்பவர்களையும் அவனது ரணத்தை உணர வைத்து உலுக்கிவிடுகிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.
சிவனனைந்தனாக வரும் பொன்வேல், சேகராக ராகுல் இருவரும் சிறப்பான தேர்வு. இருவரின் நடிப்பும் அத்தனை இயல்பு. குறிப்பாக பொன்வேல் தனது பாத்திரத்தை உணர்ந்து அவனது வலியை நமக்கும் கடத்துவது சாதாரண நடிப்பல்ல; பிரமிப்பு. ராகுலும் மனசுக்குள் ஒட்டிக்கொள்கிறார். இருவருக்கும் அன்பு முத்தங்கள் !
பொன்வேலுவின் அம்மாவாக வரும் ஜானகி ஆரம்ப காட்சிகளில் மிகை நடிப்பை காட்டுகிறாரோ என்று நினைத்துக்கொண்டிருக்கையிலேயே “நான் இல்லாமல் போனாலும் அவன் வாழ கத்துக்கணும்கிறதுக்காகதான் அவனை காய் சுமக்க அனுப்புறேன்” என்று பேசும் காட்சிக்கு பிறகான அவரது நடிப்பு நம் எண்ணத்தை சுக்கு நூறாக்கும் அற்புத நடிப்பு. அதிலும் க்ளைமாக்ஸில் “அய்யோ.. எம் புள்ளய ஒரு வாய் சோறுகூட திங்கமுடியாத செஞ்சிட்டேனே” என்று கதறும் காட்சி கல் நெஞ்சையும் பதற வைக்கும்.
அழகும் அன்பும் கலந்த டீச்சர் பூங்கொடியாக இயல்பின் எல்லை மீறாத நடிப்பை கொடுத்திருக்கிறார் நிகிலா விமல். முதலாளித்துவ அநியாயத்திற்கு எதிராக துள்ளி நிற்கும் கலையரசன், தலையில் வாழைக்காயையும் மனதில் கலையரசனின் காதலையும் சுமக்கும் வேம்பு கதாபாத்திரத்தில் திவ்யா துரைசாமியும் மனதில் நிறைகிறார். இவர்கள் தவிர சிறு சிறு பாத்திரங்களில் வருகிறவர்கள்கூட வாழ்ந்திருக்கிறார்கள்.
இவர்களையெல்லாம் தாண்டி பசி முக்கிய கதாபாத்திரமாக நம் மனதை கனக்கச்செய்கிறது. உயிரை காட்டிலும் பசி உயர்வானது என்பதுபோன்ற உணர்வு க்ளைமாக்ஸில் நம்மை உலுக்கிப்போடுகிறது. தேனி ஈஸ்வரின் கண்கள் வழியே புளியங்குளமும் அதன் வாழ்வும் வலியும் பாசாங்கற்ற சினிமாவாக புரட்டிப்போடுகிறது. சந்தோஷ் நாரயணனின் பின்னணி இசையிலும் மனதின் பாரம் கூடுதலாகிறது.
அத்தனை அனுபவத்தையும் வலிக்க வலிக்க சுமந்தவர் இயக்குனர் மாரிசெல்வராஜ்தான் என்ற உண்மை நமக்கு தெரியவரும்போது. நம்மை அறியாமல் மாரி மீதான அவரது படைப்பு மீதான மரியாதை கூடுகிறது. வெல்டன் மாரி செல்வராஜ்.
‘வாழை’.. வைரம் பாய்ந்த வாழ்க்கை வலி!