‘கொட்டுக்காளி’.. இந்திய சினிமாவின் புது ரத்தம்!
ஆணாதிக்கத்துக்கு எதிரான ஒரு படம் எடுக்கவேண்டி இருந்தால் பக்கம் பக்கமாக வசனம் பேசுவதுதான் தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாகவே இருந்துவரும் விதி. அதை உடைத்திருக்கும் படம் இது. அதேபோல் பின்னணி இசையே இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் முதல் இந்திய சினிமா ‘கொட்டுக்காளி’.
சூரியின் முறை பெண்ணான அன்னா பென்னுக்கு பேய் பிடித்திருப்பதாக நினைக்கும் குடும்பம் அவரை ஒரு சாமியாரிடம் அழைத்துச்செல்ல ஒரு ஆட்டோ மற்றும் டூ வீலர்களில் புறப்படுகிறார்கள். போகிற வழியில் சந்திக்கும் பிரச்சனைகள், ஆத்திரம், மூத்திரம் என எல்லாம் கலந்த மனிதர்களின் குணாதிசயமும் எண்ண ஓட்டங்களுமாக நீளும் பயணத்தின் முடிவே ‘கொட்டுக்காளி’.
சூரியின் நடிப்பு எப்படி?…
இதுபோன்ற கதாபாத்திரம் ஏற்று நடிக்க ஒரு தில் வேண்டும். அந்த தில்லே சூரியின் வெற்றி. ஆணாதிக்க மூர்க்கம், சந்தேக கொடுக்கில் முறை பெண்ணின் மனதில் விஷம் விதைப்பது. இயலாமையின் உச்சத்தால் பொத்துக்கொண்டு வரும் கோபம் என சூரியின் நடிப்பு அட்டகாசம். தொண்டை கட்டிய குரலும், பொசுக்கி எடுக்கும் பார்வையுமாக படம் முழுவதும் தேடிப்பார்த்தாலும் பழைய சூரி தென்படவில்லை.
நாயகி அன்னா பென்..
படத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வசனம்; ஒரே ஒரு இடத்தில் புன்னகை. மற்ற இடங்களில் வெறித்த பார்வை, சிறைபட்ட சேவலை போலவே இருக்கும் தனது நிலையை கண்களால் மென்றுகொண்டே பயணிக்கும் அமைதியுமாக உலகத்தரத்தில் நடித்திருக்கும் அன்னா பென்னுக்கு அவார்டுகளை எடுத்து வைக்கலாம்.
சூரியின் தந்தை, தங்கைகளாக வருகிறவர்கள், அன்னா பென்னின் தாயாக வருகிறவர். பயணத்தின் இடையே டாஸ்மாக்கிற்காக தவிக்கும் இருவர். முரட்டுக் காளையை அழைத்துச்செல்லும் சிறுமி, அப்புறம் அந்த ஆட்டோக்காரர் என படத்தில் வரும் அத்தனை பேரும் ஒரு இடத்திலும் நடிக்கவில்லை… வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒரு காட்சியின் தன்மையை மெருகேற்றுவதற்காக சேர்க்கப்படும் பின்னணி வாத்திய ஒலிகளை கேட்டுக்கேட்டே கெட்டுப்போன செவிகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்திய சினிமாவில் முதல்முறையாக எதார்த்த ஒலி அமைப்புகளை மட்டுமே பயன்படுத்தியதற்காக சபாஷ்.
பெரும்பாலும் சிங்கிள் ஷாட்தான். அந்த பயணத்தை பல கோணங்களில் படம் பிடித்து சூரி குடும்பத்துடன் படம் பார்ப்பவர்களும் தொற்றிக்கொண்டு செல்வது போன்ற உணர்வை கடத்தும் ஒளிப்பதிவு சிறப்பு.
இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜுக்கு இது இரண்டாவது படம்தான். ஆனால் பல புது முயற்சிகளை கைகொண்ட துணிச்சலே இவரது திறமைக்கு சான்று. மனித எண்ணங்களில் படிந்த சைத்தான், மூட நம்பிக்கையில் மூழ்கிப்போனவர்களை சாதகமாக்கி சம்பாதிக்கும் கும்பல், ஆணாதிக்க பித்துப்பிடித்தவர்களிடம் நாதியற்று அடங்கிப்போகும் பெண்கள் என வினோத் அடுக்கும் பிரச்சனைகள் பல.
அலுப்பை தரும் நீளம் அதிகமான காட்சிகள். எதார்த்தம் என்ற பெயரில் திணிக்கப்படும் கெட்ட வார்த்தைகள், சிறு நீர் கழிக்கும் காட்சியெல்லாம் உலகத்தரம் என்று நம்புவது, முடிவில் சூரி திருந்துவதற்கான உணர்ச்சிகளை சரியாக கன்வே செய்யாதது என குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் ‘கொட்டுக்காளி’ போன்ற முயற்சிகள், கெட்டுப்போய்க்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் வீக்கத்தை குறைக்கும் களிம்பாக இருக்கும். வினோத்ராஜ் வரிசையில் இன்னும் சில இயக்குனர்கள் வர காத்திருப்பார்கள்.
‘கொட்டுக்காளி’.. இந்திய சினிமாவின் புது ரத்தம்!
-தஞ்சை அமலன்