‘கோட்’ – விமர்சனம்
ரொம்ப நாளைக்குப் பிறகு நடிப்பு, நடனம், ஃபைட், செண்டிமெண்ட், காமெடி என எல்லா ஏரியாவிலும் கலந்துக் கட்டி விஜய் கலக்கி இருக்கும் படம்.
ஏற்கனவே வந்த படங்களிலிருந்து சுட்ட கதைதான். தீவிரவாதத்தை கண்ட்ரோல் செய்யும் (SATS) சிறப்பு அதிகாரியான விஜய் ஒரு சூழலில் செல்ல மகனை பறிகொடுக்கிறார். விபத்தில் இறந்துவிட்டதாக நினைக்கும் மகன் பல வருங்களுக்குப் பிறகு உயிருடன் கண்முன் நிற்கிறார். அதுவும் எதிரியாக. ஒரு கட்டத்தில் மகன் விஜய்யே அப்பா கண்களில் விரலை விட்டு ஆட்டும் அளவுக்கு வில்லத்தனம் செய்கிறார். மகன் விஜய்யின் மாற்றத்திற்கான காரணம் என்ன? அப்பா- மகன் மோதலில் ஜெயிப்பது யார் என்பதே கதை.
எங்கேயா எப்போதோ கேட்ட கதையாகவும் பார்த்த படமாகவும் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். எனினும் பழைய கதைக்கு பட்டி பார்த்து, கலர் பூசி கமர்ஷியல் பொட்டலம் கட்டி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
ஏற்கனவே தந்தை, மகன் கேரக்டரில் விஜய் நடித்திருந்தாலும் இதுவரை பார்த்திராத புதுவித நடிப்பை, மேனரிஷத்தை கொடுத்து படம் பார்ப்பவர்களின் மனசில் பசையாக ஒட்டிகொள்கிறார் விஜய். அதிலும் மகன் விஜய் காட்டும் வில்லத்தனம் செம தூள். வெளியே புலியாக இருக்கும் விஜய், வீட்டில் மனைவி சினேகாவிடம் எலியாக மாட்டிக்கொண்டு தடுமாறும் கட்டங்கள் ரசனை. அட இப்படி நடிக்கிறாரே இவர் ஏன் அரசியலுக்கு போகனும் பேசாம சினிமாவிலேயே இருக்கலாமே என்ற ஏக்கம் விஜய் ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் அளவுக்கு மாஸ் ஹீரோவாக தூள் கிளப்புகிறார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் – சினேகா காம்பினேஷன் அட்டகாசமாய் வேலை செய்திருக்கிறது. சினேகாவும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் விஜய்க்கு அம்மா எனும்போதுதான் மனசு தவிக்கிறது. விஜய்யுடன் சேர்ந்து பணிபுரியும் நண்பர்களாக பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் நடித்திருக்கிறார்கள். இதில் பிரஷாந்த் கூடுதலாக கவனம் ஈர்க்கிறார். ஒருக்கட்டத்தில் பிரபுதேவாவின் கேரக்டர் டிவிஸ்ட் அடிக்கும்போது நடனப்புயல் நடிக்கவும் செய்கிறார். ஒரு பாடலில் விஜய்க்கு சமமாகவே ஆடி அசத்துகின்றனர்.
க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் எண்ட்ரி ஆகும் எஸ்கே, அந்த சில நிமிட நடிப்பில் அசால்ட்டாக அப்ளாஸ் அள்ளுகிறார். ஒரு பாடலுக்கு விஜய்யுடன் ஆட்டம் போடும் த்ரிஷாவை ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் அளவுக்குக்கூட அழகாக காட்டாமல் த்ரிஷா ஆர்மியை கடுப்பேற்றியுள்ளனர்.
பிரேம்ஜியும், யோகி பாபுவும் ஆங்காங்கே உள்ளேன் ஐயா சொல்லி சிரிக்கவைக்கிறார்கள். இருவரில் யோகி பாபு பெட்டர். விஜய்யின் சீனியர் ஆபிசராக ஜெயராமுக்கு பெரிசா வேலை இல்லை. அப்புறம் வில்லனாக மைக் மோகனை பார்க்கும்போதும் சிரிப்புதான் வருது. எனவே காமெடியில் இதனையும் சேர்த்துக்கொள்ளலாம். மொத்த படத்தையும் தூக்கி சுமப்பது விஜய்தான் என்றாலும் சஸ்பென்ஸ்களும் படத்தின் மிகப்பெரிய பலமாய் அமைந்திருக்கிறது.
பாடல்கள் சரியில்லை என யுவனை வச்சு செய்திருந்த நிலையில் அதற்கு ஈடாக பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் மனிதர். பாடல்களும் படத்துடன் பார்க்கும்போது நல்லாதானே இருக்கு என்று தோன்றுகிறது. ஒளிப்பதிவும் சிறப்பு.
டீ. ஏஜ் டெக்னாலஜியில் மகன் விஜய் தோற்றம் கச்சிதம். ஆனல் ஏ ஐ டெக்னாலஜில் விஜயகாந்தின் தோற்றம் சொதப்பலாக அமைந்து கேப்டன் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. ‘மங்காத்தா’, ‘மாநாடு’ போன்ற படங்கள் மூலம் கமர்ஷியல் கிங் என்று நிருபித்திருக்கும் வெங்கட் பிரபு, இதிலும் வெகுஜன மக்களை கவர்ந்திருப்பது சிறப்பு.
கந்தல் கதை, காணாமல் போன லாஜிக், முதல் பாதியில் திணறும் திரைக்கதை, ஆரம்ப காட்சியில் பல் இளிக்கும் கிராபிக்ஸ், மூன்று மணி நேரம் நீளும் படத்தை வெட்டாமல் விட்டுவிட்ட எடிட்டிங் என கணக்கில் அடங்கா குறைகள் கண்ணில் தென்பட்டாலும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் அளவுக்கு மேஜிக் செய்திருப்பதால் வெங்கட் பிரபுவை மன்னிச்சு..!
‘கோட்’… கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்று சொல்லமுடியாது.