வெற்றிமாறனை தேடும் ஜூனியர் என்டிஆர்
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மற்ற மொழி சினிமாக்காரர்களும் விரும்பும் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் லிஸ்டில் இணைந்துள்ளார் வெற்றிமாறன். கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘தேவரா’ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நம்மூர் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது.
நிகழ்ச்சியில் அனிருத் பேசியதாவது:-
“இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். பயம் என்ற விஷயத்தை வேறொரு கோணத்தில் இயக்குனர் சிவா இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார். தெலுங்கில் எனக்கு இது நான்காவது படம். இது ஒரு புது உலகமாக பார்வையாளர்களுக்கு இருக்கும். படத்தின் டிரெய்லர் பார்க்கும்போதே எவ்வளவு உழைப்பு கொடுத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். இந்த உழைப்பை எல்லோரும் விரும்பியே கொடுத்திருக்கிறார்கள். படம் நிச்சயம் பேசப்படும் என்ற நம்பிக்கை இசையமைப்பாளராக எனக்கு இருக்கிறது.” என்றார்.
நடிகை ஜான்வி பேசும்போது, “சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சென்னை என்றாலே அம்மாவுடன் இருந்த பல ஞாபகங்கள் இருக்கு. அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் தருவீர்கள் என நம்புகிறேன். அந்த அளவுக்கு கடினமான உழைப்பையும் கொடுப்பேன்.” என்றார்.
ஜூனியர் என்.டி.ஆர். பேசியதாவது:-
“சென்னையில்தான் நான் குச்சுப்புடி கற்றுக் கொண்டேன். ‘தேவரா’ எந்தளவுக்கு எனக்கு ஸ்பெஷல் என்பதை வார்த்தையில் விவரிக்க முடியாது. படம் சிறப்பாக வர உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு மட்டுமல்ல உங்கள் எல்லோருக்கும் இந்தப் படம் ஸ்பெஷலா அமையும். தமிழ் இயக்குனர்களில் எனக்கு விருப்பமான இயக்குனர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் படத்தை தெலுங்கில்கூட டப்பிங் செய்துகொள்ளலாம்.” என்றார்.
வெற்றிமாறன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!