திரை விமர்சனம்

‘லப்பர் பந்து’ – திரை விமர்சனம்

இரு கிரிக்கெட் வீரர்களின் ஈகோ யுத்தத்தின் பின்னணியில் இருக்கும் காதல்; குடும்பத்தில் உதித்து உதிரும் ஊடல் கூடல்; ஆங்காங்கே சாதியவெறிக்கு சைலண்டாக கொடுக்கும் சாட்டையடி என எல்லாம் கலந்த ‘லப்பர் பந்தில்’ சிக்ஸர்களாக விளாசி தள்ளி இருக்கிறார் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.

ஜெர்சி கடை நடத்தும் ஹரிஸ் கல்யாணுக்கும் ஓவியர் அட்டக்கத்தி தினேஷின் மகள் சஞ்சனாவுக்கும் காதல். கிரிக்கெட்டில் மைதானத்தில் தினேஷ் களமிறங்கினால் எதிராளிகளின் பந்து துவம்சம்தான். அதேபோல் யார்க்கரில் புலியான ஹரிஸ் கல்யாண் பந்து போட்டால் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் விழும். யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லையென்றாலும். அவருக்கெல்லாம் பந்து போடுற மாதிரி போட்டா அடிக்கமுடியாது என ஹரிஷ் கல்யாண் விளையாட்டுக்கு சொல்லப்போக அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளும் தினேஷ் ஹரிஸை பார்க்கும் போதெல்லாம் எரிச்சலாகிறார். இருவருக்குள்ளும் வெடிக்கும் ஈகோ யுத்தத்தில் காதலும் குடும்பமும் சிக்க, அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்புக்கு கிடைக்கும் விடை, க்ளைமாக்ஸ்.

விளையாட்டில் நடக்கும் நீயா நானா போட்டி ஒருபக்கம் நிஜவாழ்க்கையில் மாமனார் மருமகன் ஆவதற்கு முன்பே நடக்கும் சண்டை என ஹரிஸ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவருமே நடிப்பிலும் போட்டி போட்டு நடித்துள்ளனர். கிரிக்கெட் களத்தில் சிங்கங்களாக இருந்தாலும் மனைவி, மகள் பாசத்தில் உருகித்தவிப்பராக தினேஷ், கைகூடிய காதல் கல்யாணத்தில் முடியவேண்டுமென ஏங்கும் ஹரிஸ் கல்யாண் இருவரிடமும் ஆகச்சிறந்த நடிப்பு.

தினேஷின் காதல் மனைவி கேரக்டருக்கு சுவாசிகா அட்டகாச தேர்வு. கணவன் கிரிக்கெட் விளையாடுவதையே வெறுக்கும் சுவாசிகா, கிரவுண்டுக்குள் டிராக்டரை ஓட்டி மைதானத்தை பஞ்சராக்கும் அந்த ஒரு  சீனே போதும் பிரமாதம். ‘கோரிப்பாளையம்’ படத்துக்குப்பிறகு தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போன சுவாசிகா இனி கோலிவுட் கொண்டாடும் நட்சத்திரமாவது சத்தியம்.

ஹரிஷ்கல்யாணின் காதலியாக சஞ்சனா எளிமையான அழகில் ஈர்க்கிறார். “எனக்காக இதை செய்யணும் அதை செய்யணும்னு எதிர்பார்க்கமாட்டேன்” என்ற கொள்கையில் கடைசிவரை போராடி காதலில் வெற்றிபெறும் காட்சிகள் ஒவ்வொன்றும் லட்டு. (அய்யோ நாம சொல்லும் லட்டு வேற..)

ஜாலி பாய்ஸ் அணி கேப்டனாக காளிவெங்கட், ஹரீஸின் நண்பராக பாலசரவணன், தினேஷின் குடிகார நண்பராக ஜென்சன் திவாகர், தினேஷின் தாயாக கீதாகைலாசம், ஹரீஷின் தாயாக தேவதர்ஷினி என எல்லா கேரக்டர்களுமே அடித்து ஆடியிருக்கிறார்கள் படத்தில். குறிப்பாக எப்போதும் மப்பிலேயே மிதக்கும் ஜென்சன் திவாகரின் நடிப்பில் அத்தனை தெளிவு. “நாங்களெல்லாம் தம்பி இல்ல.. தம்பி மாதிரிதான..” என நறுக்கென்று பேசும் இடத்தில் பாலசரவணன் ஸ்கோர் செய்கிறார். ஷான் ரோல்டனின் பின்னணி இசையும், தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் படத்திற்கு இரட்டை பலம்.

எத்தனையோ கிரிக்கெட் படங்கள் வந்திருந்தாலும் ‘லப்பர் பந்து’ எளிமையான களம்; வலிமையான திரைக்கதை, நேர்த்தியான இயக்கம் என நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறது. சாதிக்கெதிராக பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் மாட்டுக்கறியை குறியீடாக காட்டியே கலப்பு மனத்தை பறைசாட்டும் இடங்களில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து முத்திரை பதிக்கிறார். தமிழ்சினிமாவில் இவரும் தவிர்க்கமுடியாத இயக்குனராக மலரும் காலம் வெகுவிரைவில். மொத்தத்தில் இது ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் எகிறும் ‘லப்பர்பந்து’.

-தஞ்சை அமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE