திரை விமர்சனம்

ஒரு எட்டு ஊருக்கு போய் பார்க்கத்தூண்டுகிறது :  ‘மெய்யழகன்’  – விமர்சனம்

தொலைந்துகொண்டிருக்கும் அறுந்துகொண்டிருக்கும் உறவுகளின் உன்னதம், மனிதம், பண்பாடு இவற்றை கடுகளவுக்காவது மீட்டுத்தரும் பாசாங்கற்ற சிறுமுயற்சி  ‘மெய்யழகன்’.

‘96’ இயக்குனர் பிரேம்குமாரின் அச்சிறு முயற்சிக்கு தங்கள் பங்குக்கு தோள்கொடுக்க முன்வந்த கார்த்தி, அரவிந்த்சாமி உள்ளிட்ட படக்குழுவினரை ஆரத்தழுவி ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் செய்யத்தோன்றுகிறது. அப்படியென்ன நிகழ்த்துகிறது இந்தப்படம்?…

சொல்லலாம்! அதற்குமுன்.. சமீபகாலமாக ரசிகர்களை பழக்கிவைத்த வன்முறை பார்முலா; குத்துப்பாட்டு; நிஜத்துடன் ஒட்டாத சண்டைக்காட்சி என வழக்கமான சினிமாவை எதிர்பார்த்து போகிறவர்கள் ’மெய்யழகனில்’ அதனை எதிர்பார்க்கவேண்டாம்.

‘1996’ல் தொடங்குகிறது கதை. தஞ்சாவூரில் வசதியாக வாழ்ந்த அரவிந்த்சாமி குடும்பம், மனசாட்சி இல்லாத உறவு ஒன்றால் வீட்டை இழந்து ஊரைவிட்டு சென்னைக்கு வருகிறது. இனி ஊரிலும், உறவுகள் முகத்திலும் விழிக்கக்கூடாது என்று வைராக்கியமாக இருக்கும் அரவிந்த்சாமி 20 வருடங்கள் கழித்து சித்தப்பா மகள் திருமணத்திற்காக தஞ்சைக்கு போகிறார். மாலையில் நடக்கும் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு இரவே சென்னை திரும்பும் திட்டத்தோடு செல்லும் அரவிந்த்சாமி, ஓர் இரவு தூரத்து உறவான கார்த்தி வீட்டில் தங்கும் சூழ்நிலை. அந்த இரவு தரும் புது வெளிச்சம்; கார்த்தியின் செயல்பாடும் உரையாடலும் அரவிந்த் சாமிக்குள் ஏற்படுத்தும் தாக்கம் ‘மெய்யழகனாய்’ உருவாகியுள்ளது.

படம் தொடங்கி இருபது நிமிடங்களுக்குப்பிறகு நாயகன் கார்த்தி எண்ட்ரி. ஆனால் அறிமுக காட்சியிலேயே மனசை அள்ளுகிறார். ‘பருத்திவீரன்’ படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக வாழ்ந்திருக்கிறார் கார்த்தி. அரவிந்த்சாமியை சந்தித்த நொடியிலிருந்து வாய்நிறைய “அத்தான் அத்தான்” என்று அழைப்பதும் தேவை அறிந்து அன்பு வலிய வலிய கவனிப்பது என அக்மார்க் பாச மனிதனாக கார்த்தியின் நடிப்பு படம் பார்ப்பவர்களின் மனசில் நங்கூரமிடுகிறது. வீட்டின் கொல்லையில் அரவிந்த்சாமியுடன் அமர்ந்து தனது குடும்பம் தலைதூக்கிய காலம், மனைவி அமைந்த விஷயம் என அசைபோடும் கதையில் பாட்டிசொல்லும் கதையின் இயல்பும் ஈரமும் எதார்த்தம்.

கதையின் அடிநாதமே அரவிந்த்சாமி என்பதால் ஹீரோ கார்த்தியா? அரவிந்த்சாமியா? என்னுமளவுக்கு அருள்மொழி என்ற கனமான கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் வாழ்ந்திருக்கிறார். ஏமாற்றிய உறவின் முகத்தில் விழிக்கக்கூடாது என்ற வைராக்கியம் இருந்தாலும் சித்தப்பா மகளின் உண்மையான பாசத்தில் உருகி அழும் காட்சி, படம் பார்ப்பவர்களின் கண்களிலும் நட்டுவைக்கிறது நீர்ச்செடியை. தன்னிடம் நிகரற்ற பாசத்தை அன்பை பொழிந்த கார்த்தியிடம் போலியாக பழகியதை நினைத்து உடைந்தழும் தருணம்.. மனசை பிசைகிறது. குற்ற உணர்வில் கார்த்தியிடம் சொல்லாமல்கொள்ளாமல் விடிகாலையில் தெருவில் ஓடிவரும் பின்னணியில் கமலின் குரலில் ஒலிக்கும் “யாரோ இவன் யாரோ” பாடலும், அரவிந்த்சாமியின் நடிப்பும் கலங்கடிக்கிறது.

அரவிந்த்சாமியின் அப்பாவாக ஜெயபிரகாஷ், தங்கையாக வ்ருபவர், கார்த்தியின் மனைவியாக ஸ்ரீதிவ்யா, உறவுக்காரர்களாக ராஜ்கிரண், இளவரசு, அரவிந்த்சாமியின் மனைவியாக தேவதர்ஷினி, முன்னாள் காதலியாக வருபவர் என படத்தில் எல்லா கேரக்டர்களுமே சிறப்பான தேர்வு.

கதை மாந்தர்களின் உள்ளுணர்வை படம் பார்ப்பவர்களுக்கு கடத்தும் அற்புததை நிகழ்த்துகிறது கோவிந்த்வசந்தாவின் பின்னணி இசையும் பாடல்களும். கிராமத்து பயணம், அணைக்கட்டு , ஆற்றங்கரை, கார்த்தியின் வீடு என எந்த இடத்தில் கேமரா வைத்தாலும் அசல் கிராமிய வாசனையை நுகரச்செய்யும் ஒளிப்பதிவு ஆகச்சிறப்பு.

“இந்த உலகம் நல்லவனை இளிச்சவாயன் என்று ஒதுக்கிவைக்கும் ! கெட்டவனை சாமர்த்தியசாலி என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடும்!” என  கவனம் ஈர்க்கும் வசனங்களில் இயக்குனர் பிரேம்குமாரை கட்டியணைத்து பாராட்ட தேடுகிறது கண்கள்.

ஊரில் வாழ்ந்துகெட்டு இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்பவர்களின் வலியை, வாழ்க்கையை அட்சரசுத்தமாக அனுபவிக்கவைக்கும் நேர்த்தி இயக்குனரிடம் தெரிகிறது. என்னதான் ஒருவர் நமக்கு துரோகம் செய்திருந்தாலும் காலம் முழுக்க அதனை நினைத்திருக்காமல் மனம் மாறி மன்னிக்கும் நொடி மகத்தானது என்பதை அரவிந்த்சாமிக்கு கார்த்தி உணர்த்தும் காட்சி எந்த சினிமாவும் செய்யாத ஒன்று.

ஒரு பழைய மிதிவண்டி… அதற்கு பின் இருக்கும் கதையும், தடமும் என பால்ய காலத்தை மீட்டெடுத்துதரும் இயகுனரின் கைகளுக்கு ஒரு முத்தம். தஞ்சாவூர் அழகும், அந்த மனிதர்களின் பாசம், பேச்சு வழக்கு என ஊர் மறந்த நகரவாசிகளை அடுத்த பஸ்ஸை பிடித்து ஒரு எட்டு ஊருக்கு போய் பார்க்கத்தூண்டுகிறது.

இவ்வளவு விஷயங்கள் இருந்தும் தேவையில்லாத ஆணிகளாக உறுத்தும் காட்சிகள் படத்திற்கு திருஷ்டிபொட்டு. ரத்தமும் சதையுமாக நகரும் பாச பயணத்தில் ஜல்லிக்கட்டு, அணைக்கட்டில் அமர்ந்து பேசும் வரலாறு படத்தின் நீளத்தை கொடுத்த ஆபத்து. தயவு தாட்சண்யம் இன்றி அந்த காட்சிகளுக்கு கத்திரி போட்டிருந்தால்  ‘மெய்யழகன்’ இன்னும் கட்சிதமாக இருந்திருப்பான்.

இருப்பினும் அந்த குறைகளை மறந்து மண்வாசனை கதையாக; உறவுகளின் உன்னதத்தை உயிர்ப்பித்து தரும் படமாக இதை பார்த்தால்  ‘மெய்யழகன்’ ஆகசிறந்த அற்புத படைப்பு!

by : thanjai amalan

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE