எத்தனால் குடித்த எலியின் கதை : ‘ஹிட்லர்’ – விமர்சனம்
நிஜவாழ்வில் தொடர் சோதனைகள் இருந்தாலும் இரும்பின் உறுதியுடன் நம்பிக்கையை பற்றிக்கொண்டு பயணிப்பவர் விஜய் ஆண்டனி. அப்படிப்பட்டவர் சினிமா பயணத்தில் தங்குதடையின்றி செல்கிறாரா ? என்ற கேள்விக்கு ‘ஹிட்லர்’ படமும் தன் பங்குக்கு பதில் சொல்லி இருக்கிறது.
ஆளும் கட்சியின் ஊழல் பெருச்சாளியான அமைச்சர் சரண்ராஜுக்கு அடுத்த முதல்வராகும் ஆசை வருகிறது. அடுக்கடுக்கான ஊழல் புகார்களை வைத்திருப்பவர் முதல்வர் ஆவது சாத்தியமா? மக்கள் மறதி; ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் வாக்காளர்கள் இருக்கும்வரை அது சாத்தியம்தானே… ஆக மக்களுக்கு லஞ்சம் கொடுக்க 300 கோடியை தயார் செய்கிறார். அந்த 300 கோடி அடுத்தடுத்த கைகளுக்கு மாறும்போது மொத்த பணமும் அடையாளம் தெரியாதவர்களால் ‘சுட’ப்படுகிறது. இந்த பிரச்சனைக்குள் வங்கி வேலை, ரியா சுமனுடன் காதல் என்றிருக்கும் விஜய் ஆண்டனி மாட்டிக்கொள்கிறார். 300 கோடி பணம், விஜய் ஆண்டனியின் காதல் என்னவானது என்பதற்கு க்ளைமாக்ஸில் கிடைக்கிறது விடை.
அரசத பழசான கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் தம்மாதுண்டு கதையை வைத்து டிசைன் டிசைனாக பூ சுற்றியிருக்கிறார் இயக்குனர் தனா. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விஜய் ஆண்டனி, தொடர்ச்சியாக கதை தேர்வில் கோட்டைவிடுவது அவரது கரியருக்கு ஆபத்து என்பதை அறியாமல் விளையாடிக்கொண்டிருப்பது அந்தோ பாவம்.
ஆக்ஷன் அதகளம்; லவ்வர் பாய் ஏரியா இருந்தால் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்கள் என்று தப்புக்கணக்குப்போட்டு யார்டில் நிறுத்தப்பட்ட டிரெய்னில் ஏறிக்கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. அடுத்த காதல் மன்னன் ஆகிவிடும் ரேஞ்சில் காதல் காட்சிகளில் செய்யும் ரொமான்ஸை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லையே….
நாயகியாக ரியா சுமனின் கதாபாத்திரம் 20 வருடங்களுக்கு முந்தைய பழைய பாத்திரம். வில்லனாக சரண் ராஜும் பழைய டெம்ப்ளேட்டில் சவாரி செய்து சமாளிக்கிறார். கொள்ளை அடித்த பணத்தை கண்டுப்பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக கெளதம் வாசுதேவன், கொடுத்த கால்ஷீட்டை கச்சிதமாக முடித்துக்கொடுத்திருக்கிறார். ரெடின் கிங்ஸ்லி காமெடியெல்லாம் வேகாத இட்லி. பின்னணி இசை ஓகே ரகம் என்றாலும் பா‘டல்கள்’ இம்சை. ஒளிப்பதிவாளர் நவீன்குமார். ஐ மட்டும் தரமான சம்பவமாக கைவண்ணம் காட்டி இருக்கிறார். கவிதையான ஒளிப்பதிவு திரைக்கதையில் இருக்கும் அலுப்பை மறைக்கிறது.
வன இலாக்காவுக்கும் அரசுக்கும் தெரியாமல் மலை காட்டில் பாலம் கட்டுவதெல்லாம் சாத்தியமற்ற நிதர்சனம். படத்தில் அப்படி ஒரு காட்சி வருகிறது. அதுதான் படத்தின் ஒட்டுமொத்த காமெடி. பணத்தை கொள்ளையடிப்பது யார் என்ற சஸ்பென்ஸ் ஆரம்பத்திலே தெரிந்துவிடுகிறது. அதைகூட ரசிகனால் கெஸ் பண்ணமுடியாதா என்ன?
ஹிட்டலர் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று யோசிக்க ஆரம்பித்தால் எத்தனால் குடித்த எலியின் கதையாகிவிடும். இதற்குமேல் சொல்வதற்கு ஏதுமில்லை.
‘ஹிட்டலர்’.. கொலை.
எழுத்து : தஞ்சை அமலன்