‘தில்ராஜா’ திறமைக்காரனா? – விமர்சனம்
ஒரே நேரத்தில் பெரிய ஸ்டார் படங்கள் வந்தாலும் ஜெயிக்கிற படம்தான் இங்க பெரிய படம் என்ற தில்லோடு வெளிவந்திருக்கும் படம். படம் ரிலீஸ் செய்வதில் இருந்த தில் படத்தின் தெம்பில் இருக்கிறதா?… பார்க்கலாம்…
கட்டிட பொறியாளரான விஜய் சத்யா, மெக்கானிக் வேலையிலும் ஆர்வமுள்ளவர். அழகான மனைவி ஷெரின், அன்பான குழந்தையென குடும்ப வாழ்க்கை ஸ்மூத்தா போய்க்கொண்டிருக்கிறது. ஒருநாள் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு வரும்போது எக்குத்தப்பான பிரச்சனை ஏற்படுகிறது. இதில் அமைச்சர் ஏ.வெங்கடேஷின் மகன் எமலோகம் செல்ல, விஜய்சத்யாவுக்கு சுத்துப்போடுகிறது போலீஸ். தானும் தன் குடும்பமும் சிக்கலில் இருந்து மீள விஜய் சத்யா செய்யும் வேலையே கதை.
முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்கு பொருந்தும் கட்டுமஸ்தான தேகம், ஜெயம்ரவி சாயல் முகம் என ஹீரோ மெட்டீரியல்தான் விஜய் சத்யா. ஆனால் நடிப்பில் பார்டரில் பாஸ் ஆகிறார். அதில் தேறிக்கொண்டால் சினிமா கரியர் பிரகாசம் ஆகலாம். விஜய் சத்யாவின் மனைவியாக ரொம்ப நாள் கழித்து ஷெரீன். ‘துள்ளுவதோ இளைமை’ படத்தில் தூக்கத்தை கெடுத்த அந்த ஷெரீனா இது?.. தூக்கலான மேக்கப்பில் வந்தாலும் இளமை என்னவோ பேக்கப் செய்திருக்கிறது. அந்த பாடல் காட்சியில் மட்டும் நல்லாதான் இருக்கார். நடிப்பு… அது கிடக்கட்டும் பாஸ்.
அப்புறம் இயக்குனர் ஏ.வெங்கடேஷும் வழக்கமான அமைச்சர் கேரக்டரில் வண்டியோட்டி இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக சம்யுக்தா நடக்கிறாரே தவிர நடிக்கவில்லை. வனிதா, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பாலா என நட்சத்திர பட்டாளம் இருக்கிறது. அதுவும் இருந்து போகட்டும் என்ற அளவிலேயே இருக்கிறது.
அம்ரீஷ்தான் இசையமைப்பாளர். அந்த ஓப்பனிங் பாட்டு செம. அவரே ஆடியும் இருக்கிறார். ஆனால் அந்த நளினம்…. ஆகட்டும் மன்னா. பின்னணி இசை… வாங்கிய காசுக்கும் அதிகமாக இன்ஸ்ட்ருமெண்ட் பயன்‘படுத்தியிருக்கிறார்’.
ஏ.வெங்கடேஷ் சார்.. புதுசா ஒரு கதையை பண்ணியிருந்தால் ‘தில்ராஜா’ போங்காட்டமாக இருந்திருக்காது.
‘தில்ராஜா’.. திருப்தி குறைவு!
thanjai amalan