சினிமா செய்திகள்

“கூப்பிடுங்கள் உதயநிதியை” : ‘செல்லக்குட்டி’ படவிழாவில் பயில்வான் கரகர..

ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிப்பில், சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செல்ல குட்டி’. புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக நடிகைகள் தீபிக்‌ஷா, சிம்ரன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்‌ஷ்மி, புஷ்பதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்களுக்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசையமைத்துள்ளார். பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஓம்பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாபி ஆண்டனி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

வரும் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், விநியோகஸ்தன் ஜெனிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கே.ராஜன் பேசுகையில், “மேடையில் உர்காந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இந்த படம் வெல்ல வேண்டும் என்பதற்காக நிறைந்த மனதுடன் வருகை தந்து வாழ்த்த வந்திருக்கும் உங்களையும் வாழ்த்துகிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் மணிபாய் அற்புதமான தம்பி. படத்தை இயக்கிய சகாயநாதன் சிறந்த இயக்குநராக வர வேண்டும். இதில் ஈடுபட்டிருக்கிற கலைஞரக்ள் அனைவரும் வெற்றி பெற வேண்டும். பின்னணி இசையமைத்திருக்கும் சிற்பி மிகச்சிறந்த இசையமைப்பாளர்.

கடந்த வாரம் 7 படங்கள் வெளியானது, ஆனால் எந்த படமும் பேர் சொல்லும் அளவுக்கு நிற்கவில்லை. தற்போது சின்ன படங்கள் சில மிகப்பெரிய வெற்றி பெறுகிறது. வாழை, கருடன் போன்ற படங்களை உதாரணத்திற்கு சொல்லலாம். இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான ‘லப்பன் பந்து’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. கிராமங்களில் எவ்வளவோ கதைகள் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கதை இருக்கிறது, அதை நம் பன்பாடு சிதையாமல் அற்புதமாக எடுத்துச் சொன்னால் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில், ‘செல்ல குட்டி’ நல்ல படமாக அமைந்து மக்களுக்கு வெல்லக்கட்டியாக இனிக்க வேண்டும். தயாரிப்பாளர் மணிபாய் வெற்றி பெற வேண்டும், அவர் போட்ட பணம் அவருக்கு திரும்ப கிடைக்க வேண்டும்.

பெரிய நடிகர்களுக்கு கோடி கோடியாய் கொட்டி கொடுக்கும் பணம் எங்கேயோ போய்விடுகிறது, மீண்டும் சினிமாவுக்கு வருவதில்லை. ஆனால், சிறிய தயாரிப்பாளர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் மீண்டும் படம் தயாரிக்கிறார்கள். அதனால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்கின்றனர். அந்த வகையில், தயாரிப்பாளர் மணிபாய் இந்த படம் வெற்றி பெற்றால் மீண்டும் மீண்டும் படம் தயாரிப்பார். அதனால், செல்ல குட்டி படம் மக்களுக்கு வெல்லக்கட்டியாக இனித்து மணிபாய் தயாரிப்பாளராக வெற்றி பெற்று திரும்ப படம் தயாரிக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜய முரளி பேசுகையில், “செல்ல குட்டி போன்ற படங்கள் வெற்றி பெற்றால் தான் சினிமாத்துறை நன்றாக இருக்கும். இதுபோன்ற படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வாழ்த்துவதை லட்சியமாக கொண்டிருக்கும் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார் மற்றும் பேரரசு இருவருக்கும் முதலில் கைதட்ட வேண்டும். அதேபோல், இதுபோன்ற சிறிய படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் ஊடகங்களையும் பாராட்டியாக வேண்டும். இதுபோன்ற படங்கள் வெற்றி பெற்றால் தான் ஆண்டுக்கு 200 படங்கள் வரும், வேலை வாய்ப்பு கிடைக்கும், புதிய தயாரிப்பாளர்கள் சினிமாத்துறைக்கு வருவார்கள். கே.ராஜன் சார் தலைமையிலான விநியோகஸ்தர்கள் சங்கத்திடம் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 ஏரியாக்களில் சிறிய படங்களை வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பட வெளியீட்டின் போது சிறு பட தயாரிப்பாளர்களுக்கு சிலர் தவறான ஆலோசனை வழங்கி, அவர்களுக்கு மேலும் மேலும் நஷ்ட்டத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை சிறு பட தயாரிப்பாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செல்ல குட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, தயாரிப்பாளர் மணிபாய் தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும். படத்தில் பங்குபெற்ற கலைஞர்கள் மிகப்பெரிய உயரங்களை தொட வேண்டும், என்று கூறி வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.

இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “சிறிய படங்கள் ஓட வேண்டும் என்று அனைவரும் சொல்கிறார்கள், ஆனால் தியேட்டர் கிடைத்தால் தானே ஓடும். தியேட்டர் கொடுப்பது யார்?, அது யார் கையில் இருக்கிறது?, ராஜன் சாரே சொல்லிவிட்டார், தியேட்டர் கொடுபப்து விநியோகஸ்தர்கள் கையில் இல்லை என்று, யார் முடிவு செய்கிறார்களோ அவர்களிடம் நீங்கள் முறையிட்டு, முடிவு செய்யுங்கள் என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 6 கோடி ரூபாய் வரை எடுத்தால் அது சிறு முதலீட்டு படம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் வரையரை வைத்துள்ளது. அப்படிப்பட்ட படங்களில் நடிப்பவர்களுக்கு வியாபாரம் என்பது சுத்தமாக இல்லை, வியாபாரம் இல்லாத பொருளை என்ன செய்வது?, ஒரு பொருளை வியாபாரம் செய்ய குறைந்த பட்சம் ஒரு கடையாவது இருக்க வேண்டும், ஆனால் இங்கு கடை கூட கிடைக்கவில்லை எண்றால் எப்படி வியாபாரம் செய்வது. சினிமாவின் நிலை இப்படி தான் இருக்கிறது. தற்போதைய சினிமா சரியில்லை என்பது தான் உண்மை.

செல்ல குட்டி படத்தின் பாடல்கள் சிறப்பாக உள்ளது. நா.முத்துக்குமாரின் வரிகள் சிறப்பாக உள்ளது. “போனால் என்னை விட்டு..” என்ற பாடலும் சிறப்பாக இருக்கிறது. இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசை அமைத்திருக்கிறார். நற்புக்காக சிற்பி இதில் பயணித்திருப்பது நல்ல விசயம். இயக்குநர் ஏழுமலை இந்த படம் முடிய உறுதுணையாக இருந்திருகிறார், அவருக்கு நன்றி. அதை தவிர மேலும் சில பிரச்சனைகள் இருக்கிறது, பண்பாடு கருதி சில விசயங்களை இங்கு பேச முடியவில்லை. தயாரிப்பாளர் மணிபாய் நல்ல மனிதர், அவர் படம் எடுக்க வந்த நேரம் தான் சரியில்லை, ஆனால் அவர் எடுத்திருக்கும் படம் நன்றாக இருக்கிறது. படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள், நன்றாக நடித்திருக்கிறார்கள். ஹீரோக்கள் இரண்டு பேரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

அந்த காலத்தில் சிறிய படங்கள், பெரிய படங்கள் என்று இல்லாமல் அனைத்து படங்களும் ஓடும். தீபாவளிக்கு பத்து படங்கள் வெளியானால் அதில் நான்கு படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறும். மற்ற படங்கள் 75, 50 நாட்கள் என்று ஓடும். அப்போது எந்த படத்திற்கும் நஷ்ட்டம் ஏற்படாது. அனைத்து படங்களையும் மக்கள் பிரித்து பார்த்து விடுவார்கள். அந்த காலத்தில் சிவாஜி படங்கள் வெளியாகும் போது, ஜெமினி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்கள் வெளியாகும், ஒரு பக்கம் சாமி படங்கள் வரும், அதற்கான ரசிகர்கள் அங்கு செல்வார்கள், இப்படி பல வகையான படங்கள் வெளியாகி அனைத்தும் வெற்றி பெறும், அப்படி ஒரு சிறப்பான முறையில் சினிமா இருந்தது. ஆனால், தற்போது அது இல்லை என்பது தான் உண்மை. நான் சிறு பையனாக இருந்த போது, ஒரு படத்தை பார்த்துவிட்டு கதை சொல்வார்கள், அந்த படத்தின் முழு கதையையும் விளக்கமாக சொல்வார்கள், அவர்கள் சொல்லும் அளவுக்கு படம் எடுத்தார்கள். ஆனால், இப்போது ஒரு படத்தின் கதையை சொல்ல முட்கிறதா?, படங்களை விமர்சனம் செகிறவர்களால் கூட படத்தின் கதையை சொல்ல முடிவதில்லை. அவர்களே கதை புரியாமல், அதை எப்படி சொல்வது என்று தெரியாமல், இங்களுக்கு பிடிக்கும், அங்களுக்கு பிடிக்கும், நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள், என்று சொல்லி ஒப்பேத்துகிறார்கள். அவர்களையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பிரமாண்டம் என்ற பெயரில் மக்களின் பாக்கெட்டில் இருந்து எவ்வளவு எடுக்கலாம் என்பதை மட்டுமே சிந்தித்து படம் எடுக்கிறார்கள். அனைத்து தியேட்டர்களிலும் அந்த படத்தை போட்டு, வேறு எந்த படத்தையும் பார்க்க விடாமல், அந்த படத்தை மட்டுமே பார்க்க கூடிய கட்டாயத்திற்கு மக்களை தள்ளி வசூல் வேட்டை செய்கிறார்கள்.

எவ்வளவோ கதைகள் இருக்கிறது, அதை எல்லாம் சொல்லாமல் ஆங்கிலப் படங்களை பார்த்துவிட்டு அதில் பயன்படுத்தும் பெரிய பெரிய துப்பாக்கிகளை இங்கு கொண்டு வருகிறார்கள். நம்ம ஊரில் அதுபோன்ற ஆயுதங்களை பார்த்தது உண்டா?, நம்ம காதுல பூ சொத்துகிறார்கள். இங்கு ஒரு நடிகரை போட்டால் 400 கோடி ரூபாய் வசூல் செய்யலாம், 50 கோடி வசூல் செய்யலாம், என்று முடிவு செய்து தான் படம் எடுக்கிறார்கள். அப்படிப்பட்ட படங்களில் அழகியல் இல்லை, பண்பாடு இல்லை. விவரம் தெரியாமல் மக்களை ஏமாற்ற தொடங்கி விட்டார்கள். சினிமா யாரையும் ஏமாற்றாது, சினிமாக்காரர்கள் தான் சினிமாவை ஏமாற்றி வருகிறார்கள். நல்ல படங்கள் என்று சொல்லி நாம் சந்தோஷப்படும் படங்கள் ஒரு சதவீதம் தான் இருக்கிறது. தெலுங்கில் நல்ல படங்கள் வருகிறது, கன்னட சினிமாவில் நல்ல படங்கள் எடுக்க தொடங்கி விட்டார்கள். மலையாளம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அனைத்து மொழி படங்களுக்கும் தமிழ்ப் படங்கள் உதாரணமாக இருந்த காலம் மாறிவிட்டது. தமிழ்ப் படங்கள் டப்பிங் உரிமை விற்பதில்லை. தெலுங்குப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெறுகிறது. இதை யாரும் சிந்தித்து பார்ப்பதில்லை. குறிப்பாக பத்திரிகையாளர்கள் சிந்திக்க வேண்டும். படம் நல்லா இல்லை என்றால் நல்லா இல்லை என்று சொல்லுங்கள், நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று சொல்லுங்கள். அந்த படம் ஏன் நன்றாக இல்லை என்பதை எழுதுங்கள். அப்போது தான் அதுபோன்ற படங்களை திரும்ப எடுக்க மாட்டார்கள். உண்மையான கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு முதலில் மூளை தான் பாதிப்புக்குள்ளாகும். அந்த அளவுக்கு அன்று கஷ்ட்டப்பட்டு நடித்தார்கள். எம்.ஜி.ஆர் தனது ஒவ்வொரு படத்திலும் உயிரை கொடுத்து நடித்தார், ஆனால் இன்று எந்த கஷ்ட்டமும் இல்லாமல் மிக சாதாரணமாக நடிக்கிறார்கள். இயக்குநர்கள் ஜாலியாக படம் இயக்குகிறார்கள். இயக்குநர் என்றால் அந்த துறையை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள வேண்டும், அந்த காலத்தில் அப்படி தெரிந்துக்கொண்டு தான் படம் இயக்கினார்கள். ஆனால், இன்று படம் இயக்க இயக்க அந்த துறை பற்றி தெரிந்துக் கொள்கிறார்கள். பிலிம் இருந்த போது இத்தனை அடி எடுக்க வேண்டும், அப்போது தான் இவ்வளவு படம் கிடைக்கும் என்ற கட்டுப்பாடு இருந்தது. காரணம், ஒவ்வொரு அடியும் பணம். ஆனால் டிஜிட்டல் வந்த பிறகு இஷ்ட்டத்துக்கு காட்சிகளை படமாக்குகிறார்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம் கண்டபடி காட்சிகளை படமாக்கிவிட்டு, அதை முழுமையாக பார்க்காமல் எடிட் செய்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி சிறப்பான படங்கள் வரும். எனவே, நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கதை முதற்கொண்டு அனைத்தையும் சரியான திட்டமிடலுன் செய்தால் தயாரிப்பாளர்களை நிச்சயம் காப்பாற்றலாம், நஷ்ட்டத்தை ஓரளவு தவிர்க்கலாம். அதை தவிர்த்து மிகச்சிறந்த கதையில், மிகச்சிறந்த விசயத்தை சொல்லும் போது நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறலாம். இந்த 3 மூன்று விசயங்கள் இல்லாமல் படம் எடுத்துவிட்டு, தியேட்டர் கிடைக்கவில்லை, சங்கங்கள் ஒத்துழப்பதில்லை, என்று மற்றவர்களை குறை சொல்வது சரியில்லை.

’செல்ல குட்டி’ படம் எளிமையாக இருந்தாலும் சிறப்பானதாக இருக்கிறது. படத்தை தயாரித்த மணிபாய் இந்த படம் மூலம் வெற்றி பெற வேண்டும். இயக்குநர், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் என அனைவரும் பெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.

இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் பேரரசு பேசுகையில், “செல்ல குட்டி படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் சிறப்பாக இருந்தது. கதாநாயகிகள் ஹோம்லியாக நன்றாக இருக்கிறார்கள், நாயகர்கள் நன்றாக இருக்கிறார்கள். பாடல்களும் சரி, பாடல்களை காட்சியமைத்த விதமும் சரி ரசிக்கும்படி இருந்தது. நீண்ட நாட்களாகிறது இதுபோன்ற காதல் படங்களை பார்த்து, காதல் படங்கள் எப்போதும் ரசிக்கும்படி இருக்கும், அந்த வகையில் இந்த செல்ல குட்டி படமும் ரசிக்கும்படி இருக்கிறது. வேகமாக படம் எடுப்பது படம் அல்ல, இயக்குநர் என்ன சொல்ல வருகிறாரோ அதை மக்கள் உணர வேண்டும். சோகமான காட்சிகளில் பார்வையாளர்கள் கண்கலங்க வேண்டும், அது தான் இயக்கம். இந்த படத்தில் அந்த தன்மை இருந்தது. இயக்குநர் சகாயநாதன் சிறப்பாக இயக்கியிருந்தார். பாடல்கள் சிறப்பு, குறிப்பாக என்னை விட்டு போனால் என்ற பாடல், “அவள் பறந்து போனாலே..” என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றது, இசையமைப்பாளருக்கு என் பாராட்டுகள். படத்திற்கு பின்னணி இசையமைத்த அண்ணன் சிற்பி அவர்களுக்கு வாழ்த்துகள். விஷாலின் முதல் படம் செல்லமே பெரிய வெற்றி பெற்றது, அதுபோல் இந்த செல்ல குட்டி படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும்.

சிறிய படங்கள் பற்றி பேசி இங்கு பலர் பல பயத்தை காண்பித்து விட்டார்கள், அப்படி இல்லை, சின்ன படங்கள் ஓடும். துணை முதல்வராகியிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். கலைஞர் குடும்பத்தில் இருந்து வந்தாலும், அவரை நடிகராக தான் முதலில் தெரியும், அதனால் நம் சினிமா துறையில் இருந்து துணை முதல்வராகியிருக்கும் அவரை வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒவ்வொரு சங்கமாக அழைத்து பேசுகிறார்கள், என்னை பொருத்தவரை சினிமா துறையில் இருந்து துணை முதல்வராகியிருக்கும் அவரிடம் இதைப் பற்றி பேச வேண்டும். இங்கு பேசிய உதயகுமார் சாரின் பேச்சை கேட்கும் போது சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் வலிக்கும். எம்.ஜி.ஆர் காலத்திலும், ரஜினி காலத்திலும் சினிமா என்பது ஏழைக்கானது. உழைப்பவர்கள் அனைவரும் அதன் களைப்பை தீர்ப்பதற்கான இடமாக திரையரங்கம் இருந்தது. அன்று பணக்காரர்கள் படம் எடுத்தார்கள், ஏழைகள் பார்த்தார்கள். இன்று பணக்காரர்களால் மட்டும் தான் தியேட்டர் சென்று படம் பார்க்கும் நிலை வந்துவிட்டது. ஏழைகளுக்கான இடமாக தியேட்டர்கள் இல்லை. அங்கு விற்கப்படும் பொருட்களின் விலை மிக அதிகமாக இருக்கிறது. ஏழைகளுக்கான தியேட்டர்கள் வேண்டும். துணை முதல்வருக்கு நாம் இதை கோரிக்கையாக வைக்க வேண்டும். ஏழைகளுக்கு சாப்பிடுவதற்காக ஜெயலலிதா அம்மா உணவகம் கொண்டு வந்தது போல், படம் பார்க்க ஏழைகளுக்கான திரையரங்கத்தை அரசு உருவாக்க வேண்டும். இதை செய்ய முடியுமே தவிர, டிக்கெட் விலை குறைப்பது, வரி குறைப்பது முடியாது. எனவே, திரையரங்கம் ஏழைகளுக்கான இடமாக மாற வேண்டும், அதை அரசு செய்ய வேண்டும், என்று கோரிக்கை வைத்து விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.,

நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், “இரண்டு இயக்குநர்கள் பேசினார்கள், அவர்கள் இரண்டு பேருக்கும் சில விசயங்கள் தெரியவில்லை. கமலா திரையரங்கில் 100 ரூபாய்க்கு டிக்கெட் கொடுக்கிறார்கள், காசி தியேட்டரில் வாரம் ஒரு முறை 100 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதை அனைத்து நாட்களிலும் விற்பதில்லையே ஏன்?, இதை பற்றி சிந்திங்க, பேசுங்க. சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் இந்த நிறுவனங்கள் தான் பெரிய படங்களை வாங்குகிறார்கள். தயாரிப்பாளர் சங்க, இயக்குநர் சங்கம் அவர்களிடம் பேசுங்க, அந்த கூட்டத்திற்கு துணை முதல்வரை கூப்பிடுங்க, பேசுங்க. மூன்று நாட்களில் தீர்வு வந்துவிடும். இங்க என்ன பிரச்சனை, உள்ளுக்குள்ளேயே சண்டை வருது. வேலை நிறுத்தத்தை கொண்டு வரீங்க, அது தேவையில்லை. வேலை நிறுத்தமே வேண்டாம், இங்கு படம் தயாரிக்க தயாராக இருக்கிறார்கள். நடிகர்கள் சம்பளத்தை உயர்த்துவதில்லை, தயாரிப்பாளர்கள் தான் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். ரஜினிகாந்த் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிகொண்டு இருந்தார், அப்போது தயரிப்பாளர் தான் அவர் சம்பளத்தை 1 லட்சத்திற்கு மேல் உயரத்தினார். யுடியுபராக நான் உண்மை தான் பேசுவேன், பத்திரிகையாளர்கள் நல்லா இல்லாத படத்தை நல்லா இருக்கு என்று சொல்வதில்லை, அப்படி சொன்னாலும் அதை சினிமாக்காரர்கள் பாராட்ட தான் வேண்டும், உங்களுக்கு தானே அது நல்லது, அதை செய்பவர்களை திட்டாதீர்கள். எனவே பத்திரிகையாளர்கள் மீது ஆர்.வி.உதயகுமார் வைக்கும் குற்றச்சாட்டை வாபாஸ் பெற வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு ஒரு படத்தை எப்படி விமர்சனம் செய்ய வேண்டும், என்பது தெரியும், எங்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டு, நல்ல படங்கள் எடுக்க பாருங்க. இங்கு இருக்கும் பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும். ஆனால், நீங்கள் அதற்கான முயற்சி எடுப்பதில்லை, அதற்கு காரணம் இங்கு தயாரிப்பாளர்கள் பல அணிகளாக பிரிந்து செயல்படுகிறார்கள். பிரிவை மறந்துவிட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து அரசிடம் பேச வேண்டும். துணை முதல்வராகியிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு தாய் வீடு சினிமா தான், தமிழ மக்களால் அவர் நடிகராக தான் முதலில் அறியப்பட்டார், எனவே அவரையும் பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள், அவர் நிச்சயம் வருவார்.

செல்ல குட்டி படம் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நன்றாக இருக்கிறது. கதாநாயகர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகள் அழகாக இருக்கிறார்கல், கொஞ்சம் பயிற்சி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் சிற்பி பேசுகையில், “தயாரிப்பாளர் மணிபாய் மூன்று மாதங்களுக்கு முன்பு என்னை சந்தித்து பின்னணி இசை அமைக்க கேட்டுக்கொண்டார். அப்போது படத்தை பார்த்தேன், டபுள் பாசிட்டிவ் பார்த்த போது படம் நன்றாக இருந்தது. ஒரு கதையை மிக அழகாக படமாக்கியிருக்கிறார்கள். செந்தமிழன் சார் கதை, திரைக்கதை நன்றாக இருந்தது. அதைவிட இந்த படத்தை தயாரிப்பாளர் மணிபாய் தான் சுமந்திருக்கிறார். இந்த படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் போது திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன், முழுமையாக ஐந்து முறை பார்த்திருக்கிறேன், எனக்கு ஒரு முறை கூட படம் சலிப்பை ஏற்படுத்தவில்லை, அந்த அளவுக்கு படம் சிறப்பாக வந்திருக்கிறது. இன்று படம் தயாரிப்பது மிகப்பெரிய விசயமாக இருக்கிறது, இந்த காலக்கட்டத்தில் முதல் படத்திலேயே புதுமுகங்களை வைத்து துணிச்சலாக படம் தயாரித்திருக்கும் மணிபாய் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அவர் வெற்றி பெற்றால் நிச்சயம் அடுத்தடுத்து படம் எடுப்பார், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.

நாயகன் டாக்டர்.ரித்தோ பேசுகையில், “சின்ன படம், பெரிய படம் என்று பார்க்காமல் எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. முக்கியமான தயாரிப்பாலர் மணிபாய் அவர்களுக்கு நன்றி, என்னை தேர்வு செய்த இயக்குநருக்கு நன்றி. நா.முத்துக்குமார் சார் வரிகளில் ஒரு சிறப்பான பாட்டு அனைக்கு கிடைத்திருக்கிறது. காதல் பாடல் மக்களுக்கு பிடிக்கும் வகையில் வந்திருக்கிறது. இந்த படம் காதல் கதையாக இருந்தாலும், அதை சாதாரணமாக சொல்லாமல் 90களில் நடக்கும் காதல் கதையாக மீண்டும் நம் நினைவுக்கு அதை கொண்டு வரும் வகையில் சொல்லியிருக்கிறார்கள். படத்தில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ விருப்பம் இல்லை என்றால் அவர்களை விட்டு விட வேண்டும். இருவருக்கு சேர்ந்து வருவது தான் காதல், என்பதை இந்த படத்தில் மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள், நிச்சயம் செல்ல குட்டி படம் ரசிகர்களுக்கு பிடிக்கும், நன்றி.” என்றார்.

படத்தின் மற்றொரு நாயகன் மகேஷ் பேசுகையில், “உழைத்த பணத்தை வைத்து தயாரிப்பாளர் மணிபாய் சார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் எங்களை போன்ற புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது பெரிய விசயம். அந்த படத்திற்கு ஒரு நிகழ்ச்சியை வைத்து, எங்களை மேடை ஏற்றியிருக்கும் அவர் மனசு ரொம்பவே பெரியது. அன்பே சிவம் படத்தில் சொல்வது போல் மனசு தான் கடவுள். ஆனால், அந்த மனசுக்காக படம் ஓடவில்லை. ஆனால், இந்த படம் கதை நன்றாக இருக்கும், நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும், நன்றி.” என்றார்.

படத்தின் நாயகி சிமோ அத்வானி பேசுகையில், “செல்ல குட்டி படத்தின் பாடல்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். முக்கியமாக எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மணிபாய் சாருக்கு நன்றி. இந்த படத்தில் அருமையான மெசஜ் இருக்கு. குடும்பத்துடன் பார்க்க கூடிய இந்த படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும், என்று நம்புகிறேன்.” என்றார்.

இறுதியில் நன்றியுரை ஆற்றிய படத்தின் தயாரிப்பாளர் வி.மணிபாய் பேசுகையில், “செல்ல குட்டி படத்தையும், படக்குழுவினரையும் வாழ்ந்த வந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. உங்களை போல் தான் நானும் ரொம்ப கஷ்ட்டப்பட்டு தான் இந்த சினிமாவுக்கு வந்திருக்கிறேன். கோயம்பேட்டு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி தான் என் வாழ்க்கையை தொடங்கினேன். நான் பெரிய பணக்கார வீட்டு பையன் கிடையாது, கடுமையாக உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன், நீங்கள் தான் செல்ல குட்டி படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து என்னை வாழ வைக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” என்றார்.

90-களில் பிறந்தவர்களின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை, நட்பு மற்றும் காதலை பிரதிபலிக்கும் வண்ணம், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உருவாகியுள்ள ‘செல்ல குட்டி’ திரைப்படம் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE