‘ஆரகன்’ – விமர்சனம்
அழகிய மலைக்காடு அதில் ஒரு வீடு.. என விஷுவல் ட்ரீட்டை விரும்புபவர்களுக்கும் அமானுஷ்ய தேடிகளுக்கும் விருந்துவைக்கும் படம் ‘ஆரகன்’.
அதென்ன ஆரகன் என கூகுள் செய்தால் வேடதாரி, கபட நாடகம் போடுபவன், அழித்தல் செயலை செய்பவன் என்று பல பொருட்கள் கொட்டுகிறது. டைட்டில் சரி… கதைக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கா?… இருக்கு.
கதை என்ன?…
நாயகன் மைக்கேல் தங்கதுரையும் ஆதரவற்ற பெண்ணான கவிப்பிரியாவும் உயிருக்குயிராய் காதலிக்கிறார்கள். இந்த காதலுக்கு குறுக்கே வில்லனாய் வருகிறது ஒரு சூழ்நிலை. அதாவது மலைக்காட்டுக்குள் ஒரு வீட்டில் தனியாக இருக்கும் ஸ்ரீரஞ்சனியை பராமரித்துக்கொள்ளும் வேலைக்காக செல்கிறார் கவிப்ரியா. ரிஸ்கான ஏரியா என்று தெரிந்தும் கைநிறைய பணம் கிடைக்கும் ஆசையில் ரிஸ்க் எடுக்க துணிந்து அந்த வீட்டிற்கு செல்கிறார் கவிப்ரியா.
போன இடத்தில் புதுசு புதுசாக பூதம் கிளம்புகிறது. அதாவது அந்த வீடு, அங்கு நடக்கும் சம்பவங்கள், ஸ்ரீரஞ்சனியின் செயல் எல்லாமே புரியாத புதிராக இருக்கிறது. அந்த சூழல் என்ன? கவிப்ரியா அங்கிருந்து திரும்புகிறாரா இல்லையா என்பதே கதை.
கவிப்ரியா மீதான காதலில் உருகும் காட்சியில் லவ்வர் பாயாக மனம் பறிக்கிறார் மைக்கேல் தங்கதுரை. ஒரு கட்டத்தில் யாரும் எதிர்பாராதவகையில் அவரது இன்னொரு குணாதிசயம் வெளிப்படும் இடத்தில் பரவாயில்லை மைக்கேலுக்கு நடிப்பும் வருகிறதே என்று பாராட்ட தோன்றுகிறது.
நாயகி கவிப்ரியா மேக்கப் அப்பாத இயல்பான அழகில் அழகு நிலவாக ஜொலிக்கிறார். தனிமை, வெறுமை, அமானுஷ்ய காட்சிகளை பார்த்து முகத்தில் காட்டும் அச்சம் என கவனம் ஈர்க்கிறார். வெல்டன் கவிப்ரியா. ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட மற்ற கேரக்டர்களும் தங்கள் பங்குக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.
படத்தின் ஆகச்சிறந்த பலம் சூர்யா வைத்தியின் ஒளிப்பதிவு. வனத்தின் அழகை வார்த்தெடுக்கும் அதே நேரத்தில் மர்மதேசமாக அதனை காட்சிப்படுத்தி ஒளிப்பதிவை கிலிப்பதிவாக செய்து பயமுறுத்தியுள்ளார். இசையமைப்பாளர்கள் விவேக் – ஜெஷ்வந்த் இருவரும் பின்னணியில் படம் பார்ப்பவர்களை பதறவைக்கின்றனர்.
இயக்கம் அருண் கே.ஆர். வித்தியாசமான கதைக்களத்தில் புதிய அனுபத்தை தருகிறார். ஆனால் சில இடங்களில் குழப்பத்தில் தடுமாறும் திரைக்கதையை தெளிவாக செதுக்க தவறி இருக்கிறார். சிறுசிறு தடுமாற்றங்களை தவிர்த்திருந்தால் ‘ஆரகனை’ அம்புட்டு ரசித்திருக்கலாம்.
– தஞ்சை அமலன்