சினிமா செய்திகள்

எதிர்பார்ப்பை பற்ற வைத்த ‘ஜீவி -2’

கடந்த 2019ல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..

 

இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித்தான் உருவாக்கப்பட்டிருந்தது..

 

எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும் இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும். அதைத் தெரிந்துகொண்ட நாயகன் அந்த நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வார். அவரால் அது முடிந்ததா என்பது தான் முதல் பாகத்தின் கதை..

 

இந்த தொடர்பியல் விதி அத்துடன் முடிந்து விட்டதா, இல்லை மீண்டும் தொடருமா என ஹீரோவின் நண்பன் கேட்கும் கேள்வியில்தான் இந்த  இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குநர் VJ கோபிநாத்தே எழுதியுள்ளார்.

 

இரண்டாம் பாகம் உருவான சூழல் குறித்து இயக்குனர் கோபிநாத் பகிர்ந்துகொண்டதாவது:-

“ஜீவி” படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலுக்காக ஒரு கதை எழுதி அவரிடம் ஒப்புதலும் வாங்கி இருந்தேன்.. ஆனால் கடந்த இரண்டு வருட காலத்தில் கொரோனா தாக்கம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது.

 

ஏற்கனவே தான்  நடித்து வந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தாமதமாக, அதற்குள் சின்னதாக ஒரு படம் பண்ணிவிட்டு வந்து விடுங்களேன் எனக் கேட்டுக்கொண்டார் விஷ்ணு விஷால்.

 

அப்போது தான் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் என்னிடம், நீங்கள் ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்குங்கள் எனக் கூறினார்..  இரண்டாம் பாகத்திற்கான எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் முதல் பாகத்தை உருவாக்கி இருந்தோம்..

 

கதாசிரியர் பாபு தமிழிடம்  இரண்டாம் பாக ஐடியா பற்றி சொன்னபோது, நிச்சயமாக இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்பே இல்லை.. அதிலும் உடனடியாக கதை உருவாக்குவதற்கான சாத்தியமும் இல்லை எனக் கூறிவிட்டார்.. ஆனால் தயாரிப்பாளர் கார்த்திகேயன் விடாப்பிடியாக என்னை உற்சாகப்படுத்தவே, அவரிடம் 15 நாட்கள் அவகாசம் கேட்டு,  இரண்டே நாட்களில்  கதையை எழுதி முடித்தேன்”.

 

இயக்குநர் VJ கோபிநாத் ஜீவி-2 படத்திற்கான கதையை சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார் என செய்திகள் பரவ ஆரம்பிக்கவே., எதிர்பாராதவிதமாக “மாநாடு” படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் கைகளுக்கு இந்த படம் சென்றது. முதல் பாகத்தில் நடித்த வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகிணி, மைம் கோபி, ‘அருவி’ திருநாவுக்கரசு என அனைவருமே இந்தப்படத்திலும் தொடர்கிறார்கள்.

 

அதேபோல ஒளிப்பதிவாளர் பிரவீண் குமார், இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி, படத்தொகுப்பாளர் பிரவீண் கே.எல் என அதே வெற்றி தொழில்நுட்பக் கூட்டணி தான் இந்தப்படத்திலும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE