க்ளைமாக்ஸ் காட்சி அதற்கு சாட்சி : ‘ஆர்ய மாலா’ – விமர்சனம்
1982. வடலூர் அருகே உள்ள கிராமம். பருவ வயதை எட்டியும் பருவம் அடையாமல் இருக்கும் நாயகி மனிஷா ஜித். இதனால் அவமானம், ஏக்கம் எல்லாம் சுமக்கிறார். ஒருநாள் பூப்பெய்கிறார். அதன்பின் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது நாயகன் ஆர்.எஸ்.கார்த்தியை சந்திக்கிறார். அந்த சந்திப்பு காதலாகி கசிந்துருகும்போது மனிஷாவின் தாய்மாமன் ஜேம்ஸ் யுவனுக்கு தெரிந்து மனிஷாவின் கன்னத்தில் ஓங்கி அறைய.. மாமா… என்று அலறி எழுந்தால்.. அட அது கனவு.
இந்த டிவிஸ்ட் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று ஆடியன்ஸ் சீட்டு நுனிக்கு வந்தால் அடுத்த டிவிஸ்ட் ரெடி. அதாவது.. கனவில் வந்த நாயகன் ஆர்.எஸ்.கார்த்தி, இப்போது நிஜத்தில்.. நேரில். மனிஷாவின் ஊருக்கு கூத்து கலைஞனாக வரும் கார்த்தி, மனிஷா மேல் காதலாகிறார். “இதற்காகதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்று மனிஷா மனசும் பொங்குகிறது. ஆனால் ..ஆனால்.. காதலை சொல்லும் நாயகனின் மனசை சிதைக்கிறார் மனிஷா.. அது ஏன்? மனிஷாவின் வாழ்க்கை பூக்களமா? போர்க்களமா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.
நாயகன் ஆர்.எஸ்.கார்த்தி அறிமுகம் என்பது அவரது நடிப்பில் தெரிகிறது. ஆனாலும் கூத்துகலைஞனாக வரும் காட்சிகளில் பிரமாதம். காதல் செய்யும் நேரத்தில் வில்லன் பார்வை பார்ப்பதை மட்டும் தவிர்க்கலாம்.
பல படங்களில் பார்த்த முகம் மனிஷா. இயல்பான அழகில் இதயம் நுழைகிறார். நடிப்பிலும் அட்டகாசம். க்ளைமாக்ஸ் காட்சி அதற்கு சாட்சி. தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜேம்ஸ்யுவன் நாயகியின் தாய்மாமனாக வருகிறார். அந்த கிராமிய பாட்டில் அசத்தும் ஜேம்ஸ், ரியாக்ஸன் ஏரியாவில் பாடம் படிக்கனும். அப்புறம் மனிஷாவின் அம்மாவாக எலிசபெத், இன்னொரு தாய் மாமனாக டெரர் காட்டும் காலஞ்சென்ற மாரிமுத்து, கூத்து சபாவின் ஆசானாக மறைந்த டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் அனைவரும் அவரவரது பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள்.
கான்செப்ட் ரொம்ப பழசு சார். ஆனாலும் ஒரு சினிமா செய்யணும்னு வந்த ஆர்வத்திற்கு வரவேற்பு. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்துகள்!
‘ஆர்யமாலா’ – சோதனை முயற்சி!
– தஞ்சை அமலன்