‘சார்’.. ரைட்டா தப்பா? : விமர்சனம்
சற்குணம் இயக்கத்தில் ‘வாகை சூடாவா’ன்னு ஒரு படம் வந்தது தெரியுமா? ஆமா தெரியும்.. அதுக்கென்ன? அந்த கான்செப்ட்தான் சார் இந்த ‘சார்’ரும்.
அந்த கான்செப்ட் என்ன?
செங்கல் சூளையில் அடிமைப்பட்டு இருக்கும் மக்களின் வாரிசுகளை கல்விச் செல்வம் கொடுத்து உயர்த்த துடிக்கும் ஆசிரியர் விமல். அங்கு நாயகி இனியாவுடன் காதல். ஆண்டாண்டு காலம் அடிமைகளாக இருக்கும் மக்களை மடை மாற்றினால் ஆண்டுகொண்டிருப்பவர்களுக்கு கோபம் வரும்தானே?.. அதனால் கற்பிக்கும் ஆசிரியரை காவு வாங்க துடிக்கிறது ஆதிக்க சக்தி. இதில் ஜெயிப்பது யார்? என்பதே க்ளைமாக்ஸ்.
அந்த சமையலை வேறு பாத்திரத்தில் மாற்றி சூடுபடுத்திக் கொடுத்தால் சுடச்சுட ‘சார்’ ரெடி.
சமீபத்தில் வந்த விமல் படம் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. இந்தப் படத்தில் விமலின் நடிப்பு அத்தனை இயல்பு. அரவணைத்துக்கொள்ளும் நடிப்பு. அது இதில் மிஸ். நடிக்கிறார் என்று தெரிகிறது. அதற்கு காரனம் இயக்குனர்தான்.
தாத்தாவின் கனவை, அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் மகனாக உண்மையான ஆசிரியராக விமல் வேடமிட்டிருக்கிறார். ஆனால், கதை 1950, 1960, 1980 என்று பறக்கும்போது கதை கேட்டபோது விமலுக்கு காது லேதோ என்று தொன்றுகிறது.
விமலின் தந்தையாக, சேவை மனம் கொண்ட ஆசிரியராக சரவணன் கேரக்டர் உண்மையிலேயே மனசை உலுக்கி எடுக்கிறது. நடிப்பில் மட்டும் கொடுத்த சம்பளத்திற்கு சற்றே அதிகம். அதற்கும் காரணம் இயக்குனரே.
நாயகியாக சாயா தேவி.. தமிழ் அழகு. நடிப்பிலும் இயல்பு. கதைப்படி அவரை வில்லன் கடத்தி வைத்து கெடுக்கிறான் கொடுமை படுத்துகிறான். ஆனால் எத்தனை நாள் அவர் குத்துயிரும் குலை உயிருமாக வில்லன் இடத்திலேயே கிடக்கிறார் என்பது காதில் காலி ஃபிளவர்.
சாதி வெறியும் அடக்குமுறையும் கொண்டவராக வரும் ஜெயபாலன் உள்ளிட்டவர்களின் நடிப்பு ஓவர் ஆக்டிங்.
மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள்.. இருக்கட்டும் சார். கதைதான் உயிர்… திரைக்கதைதான் ரத்தம் என்று இருக்கையில். இந்த இரண்டும் செத்துப்போனால். மற்றது எல்லாமே மனசில் நிற்காது.
போஸ் வெங்கட்… நிகழ்காலத்துக்கு வாங்க சார்!
‘சார்’ போர்!