‘கங்குவா’ நெருப்பு மாதிரி இருக்கும் நிச்சயம் ஜெயிக்கும் : சூர்யா நம்பிக்கை
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் 3d டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது, “சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இத்தனை பேரை வைத்து எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் படம் எடுத்து முடித்திருப்பது சாதாரண விஷயம் கிடையாது. நான் இதுவரை செய்த படங்களிலேயே குறைவான பதட்டத்துடன் இருந்த படம் இதுதான். சூர்யா சாரின் உழைப்பு நிச்சயம் பேசப்படும். முழுப்படமும் நேற்று இரவுதான் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியோடு இந்த விழாவிற்கு கிளம்பி விட்டேன். படம் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக வரக் காரணம் சூர்யா சாரின் அன்பான ரசிகர்கள்தான். 10,500- 11,500 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகியிருந்தால் நமக்கு 4000 ஸ்கிரீன்ஸ்தான் கிடைத்திருக்கும். பான் இந்திய அளவில் இந்தப் படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு இது அடுத்த வெலவல் பாய்ச்சலாக இருக்கும். நன்றி” என்றார்.
விநியோகஸ்தர் சக்திவேலன், “’கங்குவா’ படத்தின் புரமோஷன்கள் ஒவ்வொரு இடத்திலும் திருவிழா போல நடந்து வருகிறது. நேற்று படம் பார்த்த அனைவரும் படத்திற்கு நிறைய பாசிட்டிவான விஷயங்கள் கொடுத்து வருகிறார்கள். சிவா அண்ணன் மற்றும் சூர்யா சாருடைய கடின உழைப்பு உலகம் முழுவதும் கொண்டாடப்படும். நிச்சயம் இது சூர்யா ரசிகர்களுக்கு இரண்டாவது தீபாவளியாக இருக்கும்” என்றார்.
பாடலாசிரியர் விவேகா, “ஒவ்வொரு நாளும் ‘கங்குவா’ படத்திற்கு புதிய மகுடம் சேர்ந்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற ஒரு படத்தை திரையில் கொண்டு வருவதற்கு சிவாவிற்கு பெரிய திரை அனுபவம் வேண்டும். அது அவருக்கு கைகூடியிருக்கிறது. சிறந்த இலக்கிய வார்த்தைகளைக் கொண்டு இந்தப் படத்தில் நான் பாடல்கள் கொடுப்பதற்கு சிவா முக்கிய காரணம். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற சூர்யாவின் முனைப்புதான் ‘கங்குவா’. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”
ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர், “எங்கள் உழைப்பை நம்பிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாருக்கும் அதை செயல்படுத்திய சிவாவுக்கும் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி. என்னுடைய ஆக்ஷன் இந்தப் படத்தில் பேசப்படும் என்றால் அதற்கு முக்கிய காரணமாக சூர்யா இருப்பார். அவரது உழைப்பு படம் வெளியான பிறகு அதிகம் பேசப்படும்” என்றார்.
ஒளிப்பதிவாளர் வெற்றி, “’கங்குவா’ படம் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதை படம் ஆரம்பிப்பதற்கு முன்பே இயக்குநர் சிவா எங்கள் மனதில் பதிய வைத்துவிட்டார். நாங்கள் கேட்ட எல்லா விஷயங்களுக்கும் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்தார். அதற்கு சூர்யா சாருக்கும் சிவா சாருக்கும் நன்றி. இதில் கலை இயக்குநர் மிலன் மற்றும் எடிட்டர் நிஷாந்துடைய மறைவு எங்களுக்கு பெரிய இழப்பு. இவர்கள் எல்லோருடைய உழைப்பும் படம் வெளியான பிறகு கொண்டாடப்படும்” என்றார்.
இயக்குநர் சிவா, “’கங்குவா’ படத்தின் கதையை எழுதும்போது இதை நம்மால் எடுக்க முடியுமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், என் டீம் மீது இருந்த நம்பிக்கையால் ’கங்குவா’ என் வாழ்க்கையில் சிறந்த ஒன்றாக இருக்கும் எனத் தோன்றியது. நேற்று படம் பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு மகிழ்ச்சி. ’கங்குவா’ படம் தொடர்பாக நாங்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றபோது அன்பான ரசிகர்கள் எல்லோருமே ‘அண்ணனுக்கு ஒரு வெற்றிப்படம் வேண்டும்’ எனக் கேட்டார்கள். நிச்சயம் ‘கங்குவா’ அப்படியான படமாக அமையும். நான்கு மணிக்கு எழுந்து மலை, காடு என நாங்கள் கூட்டிப்போனாலும் முழு உழைப்பைக் கொடுத்தார் சூர்யா. படத்தில் ஸ்டண்ட் விதவிதமாக கொரியோகிராஃப் செய்திருக்கிறோம். வெற்றி, மதன் கார்க்கி சார் என படத்தில் கடுமையாக உழைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் சூர்யா பேசியதாவது:-
“ ‘கங்குவா’ போன்ற ஒரு பரிசோதனை முயற்சியை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தைரியமாக முன்னெடுத்துள்ளது பெரிய விஷயம். 170 நாட்களுக்கும் மேல் இந்த படத்தை எடுத்திருப்போம். ’கங்குவா’ படத்தில் அனைவரது உழைப்பும் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகி இருக்காது. வெற்றியுடைய ஒளிப்பதிவு நிச்சயம் இந்திய சினிமாவில் பெரிதாக பேசப்படும். சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் சொன்னால் நான் பத்தாவது மாடியில் இருந்து கூட குதிப்பேன். அந்த அளவுக்கு அவர் மீது நம்பிக்கை எனக்கிருக்கிறது. சண்டைக்குள் ஒரு கதை வைத்து அசத்திவிடுவார். படத்தின் ஆன்மா இசைதான். அதை சரியாகக் கொடுத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். மன்னிப்பு பாடல் எனக்கு மிகப்பிடித்தமானது. தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். வழிபடக்கூடிய கடவுள் தீயாக, நெருப்பாக, குருதியாக இருந்தால் அந்த நில மக்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் வழிபாடு என்ன என்ற விஷயங்களை இதில் கொண்டு வந்திருக்கிறோம். ‘கங்குவா’ திரைப்படம் வெறுமனே ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல் நீங்கள் எடுத்து செல்ல நல்ல விஷயமும் இருக்கும். மன்னிப்பை பற்றி இந்தப் படம் உயர்வாகப் பேசும். ’கங்குவா’ தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். 3000 பேரின் உண்மையான உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். படம் நெருப்பு மாதிரி இருக்கும். உங்கள் அன்பு ‘கங்குவா’ படத்திற்கு தேவை” என்றார்.