டயானா டூ லேடி சூப்பர் ஸ்டார் : நெட்ஃப்ளிக்ஸில் படபடக்கும் நயன்தாராவின் வாழ்க்கை பக்கங்கள்
நாயகனோ, நாயகியோ சினிமாவில் பட்டங்களும் பாராட்டுகளும் பெறுவதென்பது அத்தனை எளிதல்ல. அதிலும் சூப்பர் ஸ்டார் பட்டம் சொல்லவே வேண்டியதில்லை. எத்தனையோ கதாநாயகிகளை கடந்து வந்த தமிழ் சினிமாவில், லேடி சூப்பர் ஸ்டார் பட்டம், நயன்தாராவுக்கு மட்டுமே கிடைத்த புதையல். இந்த புதையல் வெறுமனே கிடைத்ததல்ல. அத்தனையும் நயன்தாராவின் திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு.
அந்த பரிசுக்கு தகுதியானவரா நயன்தாரா. சினிமாவில் அவர் தொட்ட உச்சத்தின் பின்னணி பக்கங்கங்கள் என்ன என்பதை அலசியெடுத்து உருவாக்கப்பட்டுள்ளது ‘நயன்தாரா’ – பியாண்ட் தி ஃபேரி டேல்’ ஆவணப்படம்.
அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாராவின் காதல் கல்யாணம் மெயின் ரோலாகி நம்மை ரசிக்க வைக்கிறது. நெட் ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் இப்படத்தில் வேறென்ன சிறப்புகள்?…
அலசலாம்….
‘ நயன்தாராவிலிருந்து தொடங்கும் படத்தில் சென்று ஒவ்வொன்றாக நடிகர்கள் உபேந்திரா, நாகர்ஜுனா, இயக்குநர்கள் நெல்சன், விஷ்ணுவர்தன், அட்லீ, நடிகை ராதிகா சரத்குமார் என சினிமா நட்சத்திரங்களின் பேட்டியும் இடம்பெறுகிறது. ஆரம்பத்தில் டயானாவாக இருந்து பின்னாளில் நயன்தாராவாக உருவெடுத்தது தொடர்பாக நயன்தாரவை அறிமுகப்படுத்திய இயக்குநர் சத்யன் அந்திக்காடு அடுக்கும் விஷங்கள் நிறைய.
`ஐயா’ படம்தான் கோலிவுட்டில் நயன் அறிமுகமான படம். அந்தப் படத்தை `கவிதாலயா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. எனவே அந்நிறுவனத்தை சேர்ந்த புஷ்பா கந்தசாமி, நயன்தாராவின் நடிப்பு, அவர் பழகும் விதம் குறித்தும் பகிர்ந்துள்ளார். “நயன் – விக்னேஷ் சிவனுக்கிடையே நடக்கும்; நடந்த காதல் சண்டைக்கு பஞ்சாயத்துதாரரும் பலி ஆடும் நான்தான்” என நெல்சன் போகிற போக்கில் நகச்சுவையாக சொல்வது ரசனை.
இதன் பிறகு நேரடியாக `நானும் ரெளடிதான்’ திரைப்படம் அவர்களுக்கு இடையில் எப்படிக் காதலை மலரச் செய்தது என இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் எடுத்துரைக்கிறார்கள் . `நானும் ரெளடிதான்’ படத்தின் சர்ச்சையான அந்த மேக்கிங் காட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
அப்புறம் அவர்களுது கல்யாண மேடையும், காஷ்ட்யூம் டிசைனும் ஆஹா அழகு. அவர்களுது குழந்தைகள் வருகைக்கு பிந்தைய பக்கங்களுடன் ஆவணப்படம் முடியும்போது திரைப்படம் பார்த்த திருப்திக்கு கேரண்டி.