சங்கீதா கல்யாண் நடிப்பில் சரிதாவின் சாயல் : ‘பராரி’ – ஒரு பார்வை
திருவண்ணாமலை மாவட்டம் ராஜாபாளையம். இரு பிரிவுகளாக வாழும் மக்கள். வயிற்றுப் பிழைப்பு, வருமானம், வணங்கும் தெய்வம் ஒன்றாக இருந்தாலும் நான் பெரியவன் நீ தாழ்ந்தவன் என்ற சாதி வெறி தலை விரித்து ஆடுகிறது. இவர்களது பிரிவில் தனது சுய நலத்திற்காக மேலும் எண்ணெய் ஊற்றி எரியவைக்கிறான் குரு ராஜேந்திரன்.
ஒரு கட்டத்தில் ஜூஸ் ஃபேக்டரியில் வேலை செய்வதற்காக இரு பிரிவை சேர்ந்தவர்களையும் பெங்களூருக்கு அழைத்துச்செல்கிறார் ஏஜெண்ட் ஒருவர். போகும் இடத்தில் அரசியல்வாதி ஒருவரின் இன வெறியில் பஞ்சம் பிழைக்க போனவர்களின் மானத்திற்கும் உயிருக்கும் உத்திரவாதம் இல்லாமல் போகிறது. இதில் பூக்கும் ஒரு காதல்; உயர் சாதி வெறியில் இருக்கும் பிரேம் நாத்துடன் மோதல் என நகரும் கதையின் முடிவு, நெஞ்சில் நிறையும் சம்பவம்.
நாயகன் அரிசங்கர், நாயகி சங்கீதா கல்யாண், சாதி வெறி பிடித்தவராக வரும் பிரேம் நாத், அந்த பெங்களூர் வில்லன் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரிடமும் இயல்பு மீறாத நடிப்பு. குறிப்பாக சங்கீதா கல்யாண் நடிப்பில் சரிதாவின் சாயல். அந்த கண்களும் பார்வையும் அடி மனசை வருடுகிறது.
ஷான் ரோல்டனின் ஒரு மாண்டேஜ் பாடல் அருமை. பின்னணி இசையிலும் குறைவில்லா தரம். கிராம வாழ்வியலை கண்முன் நிறுத்தும் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், தொழிற்சாலை நெடியையும் உணர வைக்க தவறவில்லை.
படம் ஆரம்பித்த சில காட்சிகளில் எங்கே மாரிசெல்வராஜ், பா.ரஞ்சித் வரிசையில் சேர்த்துகொள்வாரோ இயக்குநர் என்று சற்றே அதிர்ச்சி ஏற்படுவது உண்மையே. ஆனால் அதில் எந்தப் பக்கமும் தடுமாறி நிற்காமல், திரைக்கதையை வேறொரு பாதைக்கு அழைத்துச்சென்று நேர்மையாக நடந்திருக்கிறார் இயக்குநர் எழில் பெரியவேடி.
இருந்தாலும் அடுத்தடுத்து இயக்கப்போகும் படத்தில் சாதியை கையில் எடுக்காமல் இருந்தால் தமிழ் சினிமாவுக்கு நல்லது.
‘பராரி’ பார்க்கலாம்!