மீட்டருக்கு மேல் தாவாத சரத்குமார் : ’நிறங்கள் மூன்று’ எப்படி?…
மூளையை கசக்கி எழுதிய கதை, திருடு போய்விட்ட டென்ஷனில் வருங்கால இயக்குநர் அதர்வா. காணாமல் போன மகளை தேடி அலையும் அப்பா ரகுமான். தப்பு செய்தது மினிஸ்டர் மகன் என்றாலும் பயப்படாமல் அவனை கைது செய்து பரேடு நடத்தும் இன்ஸ்பெக்டர் சரத்குமார். இந்த மூன்று புள்ளிகளையும் இணைத்தால் ‘நிறங்கள் மூன்று’ ரெடி.
கதை காணாமல் போனதும் போதை மருந்தை உட்கொண்டு அதர்வா செயும் ஆரம்ப அலப்பறைகள் படத்தின் தொடக்கத்திலேயே சுவாரஷ்யத்தை குறைக்கிறது. நடிப்பிலும் கொஞ்சம் ஓவர் டோசேஜாக இருப்பது படம் பார்ப்பவர்களை தைலம் தேட வைக்கிறது. எதார்த்திற்கு வாங்க எசமான்.
காசுக்கும் ஆசை கடமைக்கும் ஆசை என்பதுபோன்ற வித்தியாச இன்ஸ்பெக்டராக சரத்குமார் அடித்து நொறுக்கி இருக்கிறார். அவருக்கே இந்த கேரக்டர் புதிதாக அமைந்திருக்கிறது. மீட்டருக்கு மேல் தாவாமல் நடிப்பில் மின்னுகிறார்.
மகளை காணாத தவிப்பு ஒரு பக்கம்; குற்ற உணர்வில் உள்ளுக்குள் அனுபவிக்கும் வலியை, வேதனையை கடத்துவது இன்னொரு பக்கம் என வழக்கம் போலவே ரகுமான் நடிப்பு நச்.
உடன் படிக்கும் அம்மு அபிராமியை காதலிக்கும் துஷ்யந்த் ஜெயபிரகாஷின் நடிப்பில் எல்லாவித உணர்வுகளையும் பிரதிபலிக்கும் திறன் எட்டிப்பார்க்கிறது. சினிமா எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள் தம்பி! அம்மு அபிராமிக்கு ஒரு சில காட்சிகளே என்றாலும் சிறப்பு செய்திருக்கிறார்.
த்ரில்லர் படத்திற்கு ஏற்ற ஒளிக்கலவையை வரம்பு மீறாமல் கொடுத்து சிறப்பு சேர்த்திருக்கும் டிஜோ டாமிக்கு பாராட்டுகள்! பின்னணி இசை கொஞ்சம் எரிச்சலே.
படத்தின் நீளத்தை இழுப்பதற்காகவே முதல் பாதி படத்தில் தேவையற்ற காட்சிகளை திணித்திருப்பது தெரிகிறது. எடிட்டிங்கிலாவது சமரசம் இல்லாமல் தேவையற்ற ஆணிகளை பிடுங்கி இருந்தால் கதை, கச்சிதமாக இருந்திருக்கும். நிஜமாகவே இரண்டாம் பாதி படத்தின் பலமே முதல் பாதியை மன்னிக்க வைக்கிறது.
க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகளில் பேசும் வசனம், சமூக அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிறது. குறைகளை கவனித்து சரி செய்திருந்தால் ‘நிறங்கள் மூன்று’ முத்தாக ஜொலித்திருக்கும்!
-amalan