‘பொன்னியின் செல்வன்’ எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய படம் : மணிரத்னம் தகவல்
வந்திய தேவன் ஒரு இளவரசன் ஆனால் அவனுக்கு நாடு கிடையாது என்றாலும் பேராசை கொண்டவன். அவனுக்கு பெண் ஆசை பொன் ஆசை என எல்லா ஆசைகளும் உண்டு. ஆனால், மிகவும் நேர்மையானவன். அப்படிப்பட்ட கேரக்டரை புரிந்துகொண்டு நடித்தது புது அனுபவமாக இருந்தது. ”
ஜெயம் ரவி பேசும்போது, “ஒருமுறை மணி சாரின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தவறிவிட்டது. அதற்காக என்னை திட்டுவதற்காக தான் அழைத்தார் என்று அவரது அலுவலகம் சென்றேன். ஆனால், நீ தான் பொன்னியின் செல்வனாக நடிக்க போகிறாய் என்று கூறினார். இந்த மேடையைவிட அவர் கூறிய அந்த தருணம் தான் புல்லரிக்கும் தருணமாக இருந்தது. பல பேரின் கனவு நனவாகி இருக்கிறது. எங்களுடைய கனவும் நனவாகியிருக்கிறது. பல லட்சம் பேர் இந்த புத்தகத்தை படித்திருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் இதைப் பற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால், இதை ஒரே ஆளாக திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் மணி சார். அவருக்கு தலை வணங்குகிறேன். ” என்றார்.
இயக்குனர் மணிரத்னம் பேசும்போது, “நான் கல்லூரியில் படித்தபோது இந்த புத்தகம் படித்தேன். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. கல்கிக்கு முதல் நன்றி. இப்படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் நடிக்க வேண்டியது. ஆனால், முடியாமல் போனதற்கான காரணம் இன்று புரிந்தது. எங்களுக்காக விட்டு சென்றிருக்கிறார். எவ்வளவு பேர் முயற்சித்திருக்கிறார்கள். நானும் 3 முறை 1980 களில் இருந்து முயற்சி செய்து இப்போதுதான் முடித்திருக்கிறேன். இங்கு உள்ளவர்கள் அனைவராலும் தான் இது சாத்தியமானது. இவர்கள் இல்லையென்றால், இது சாத்தியமில்லை. முக்கியமாக ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி” என்றார்.
இசையாமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் பேசும்போது, “30 வருடங்களாக எனக்கு பாஸ் மணிரத்னம் சார் தான். ஒருவருக்குள் இருக்கும் திறமையை எப்படி வெளியே எடுப்பது என்பதை நான் மணி சாரிடம் தான் கற்றுக் கொண்டேன். பொறுமை, மனிதநேயம், அன்பு, ஊக்குவித்தல் என்றவர் தான் மணி சார். இப்படத்திற்கு இசையமைக்க பல இடங்களுக்கு சென்று ஆராய்ச்சி செய்தோம். அப்போது பாலி என்ற இடத்திற்கு சென்று 2 வாரம் தங்கி அங்குள்ள இசைக்கருவிகளை பற்றி ஆராய்ச்சி செய்தோம். அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அந்த காலத்திலும் அனைவரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியிருக்கிறார்கள். ஆகவே, இது நம் எல்லோருடைய படம் என்று கூறவேண்டும்” என்றார்.