‘படைப்பாளன்’ – திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் தலை விரித்தாடும் கதை திருட்டை கையில் எடுத்து தில்லாக ஒரு படத்தை எடுத்திருக்கும் இயக்குனரும் தயாரிப்பாளரும் புடிங்க ஒரு பூங்கொத்தை.
சினிமாவில் இயக்குனராகும் கனவில் இருக்கும் நாயகன் தியான் பிரபு தான் பார்த்து பார்த்து செதுக்கிய கதையை தயாரிப்பாளர் வேல்முருகனிடம் சொல்கிறார். தியான் பிரபு சொன்ன கதையை மார்க்கெட்டில் ஓடும் குதிரையாக இருக்கும் வேறொரு இயக்குனரை வைத்து தயாரிக்க திட்டம் போடுகிறார் வேல் முருகன். இதை எதிர்த்து நிற்கும் தியான் பிரபுவை தீர்த்துக் கட்ட நினைக்கிறார் தயாரிப்பாளர். தியான் பிரபுவுக்கு நியாயம் கிடைக்கிறதா அவரது இயக்குனர் கனவு நனவாகிறதா என்பதே மீதி கதை.
நாயகனாக நடித்திருக்கும் தியான் பிரபுவே கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். முதல் படம் என்றாலும் நிறைய காட்சிகளில் இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருக்கிறார். நாடகத்தனத்தை குறைத்திருந்தால் பார்த்திபன் ஸ்டைலில் இன்னொரு இயக்குனராக அடையாளப்பட்டிருப்பார். இருந்தாலும் யாரும் சொல்லத்துணியாத கதையை கையில் எடுத்ததற்காக பாராட்டலாம்.
அஷ்மிதா, நிலோபர் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இரண்டு நாயகிகள் இருந்தும் பெரிதாக ஈர்க்கவில்லை. ‘காக்கா முட்டை’ புகழ் ராமேஷ், விக்கி இருவரும் பயப்படுவது போல் ஓவராக நடித்து கடுப்பேற்றியுள்ளார்கள். வில்லன்களாக வரும் பாடகர் வேல்முருகன், ‘சதுரங்க வேட்டை’ புகழ் வலவன் இருவரும் மிரட்டுகின்றனர்.
தயாரிப்பாளராக வரும் மனோபாலாவிடம் தியான் பிரபு கதை சொல்லி முடிக்கும் காட்சியில் எதிர்பாராத திருப்பம் படத்திற்கு பலம். கொடைக்கானல் மலை பகுதியின் இரவு நேர காட்சிகளை ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சரியான லைட்டிங் கொடுத்து குட் மார்க் வாங்குகிறார். பாலமுரளியின் பின்னணி இசை நிறைய இடங்களில் மிரள வைக்கிறது.
கதை திருட்டு கதையை ஹாரர் ஸ்டைலில் கொடுத்த வித்தியாச முயற்சி ‘படைப்பாளனை’ பாராட்ட வைக்கிறது