நம்மூர் பார்த்திபன் மாதிரி கன்னட சினிமாவில் உபேந்திரா : ‘UI’- விமர்சனம்
நம்மூர் பார்த்திபன் மாதிரி கன்னட சினிமாவில் வித்தியாசமான நடிகர் கம் இயக்குனர் உபேந்திரா. ‘ஓம்’ , ‘A’ என இவர் இயக்கிய படங்களே அவரது புதுமைக்கு சாட்சி. இந்தமுறையும் புது முயற்சியுடன் ‘UI’ படத்தை இயக்கி நடித்துள்ளார்.
படம் எப்படி?
சாதாரண மக்கள் தொடங்கி பெரு முதலாளிகள், கார்ப்பரேட் முதலைகள், அரசியல் பெருச்சாலிகள் வரை பூமித்தாயை வண்புணர்வு செய்து இந்த உலகத்தை எப்படியெல்லாம் சிதைத்துக்கொண்டிருக்கிறோம் என்ற செய்தியை வீதி நாடக வடிவில் சொல்வதே படத்தின் கதை.
நல்லவன், கெட்டவன் என்று இரட்டை வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். இது ஃபார்முலா வழக்கமான சினிமா டெம்பிளேட் என்றாலும் கதை சொல்லும் விதத்தில் வித்தியாச குவியல். படம் முழுக்க சமூக அக்கறை இருப்பதை காண முடிகிறது. ஆனால் திரைமொழியாக சொன்ன விதத்தில் இடியாப்ப சிக்கலும் குழப்ப ரேகையும் படம் நெடுக நீடிப்பது பலவீனம்.
நாயகி ரேஷ்மா நானையாவுக்கு உபேந்திராவை ஒருதலையாக லவ்வும் வேலை. கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் கிளர்ச்சி தவிர அவரது கேரக்டர் கதைக்கு தேவையில்லாத ஆணி. இன்னும் நிறைய கேரக்டர்கள் அணிவகுத்து நின்றாலும் எல்லோருமே ஓவர் ஆக்டிங் மோடில் நிலைகுத்தி நிற்பது எரிச்சல்.
கலை இயக்கம், ஒளிப்பதிவு இரண்டும் படத்தின் பெரிய பலம். ஆனால் பிரமாண்டத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று இயக்குனர் திணறி இருப்பது தெரிகிறது.
கதையாக எடுத்துக்கொண்ட விஷயத்தில் வழக்கம்போலவே வென்றிருக்கும் உபேந்திரா, அதை சொல்ல வந்ததில் சொதப்பி இருப்பதால் ஏமாற்றமாகிறது.
தெளிவான திரைக்கதைக்கு மெனக்கெட்டிருந்தால் ‘UI’ ரசிகர்களின் மனதை வென்றிருக்கும்!
-amalan