‘அலங்கு’ திரை விமர்சனம்
காடும் காடு சார்ந்த இடமும் கதைக்களமாக அமைந்தால் படம் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும். எனினும் திரைக்கதையில் இருக்கும் தெம்பை பொறுத்தே படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படும். அப்படியான கதை களத்துடன் உருவாகியிருக்கும் ‘அலங்கு’ தரும் அனுபவம் என்ன?…
கதை..
கோவை மாவட்டம் ஆணைக்கட்டி வனப்பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார் நாயகன் குணாநிதி. சீக்கு வந்து சாகக்கிடந்த நாய் ஒன்றை காப்பாற்றி வளர்க்கும் குணாநிதியிடம் நன்றி விசுவாசத்துடன் ஒரு உறவாகவே மாறுகிறது நாய்.
குடும்பக் கடனை அடைத்து வாழ்வாதாரத்தை பெருக்க கேரளா ரப்பர் தோட்டத்துக்கு வேலைக்குப் போகிறார் குணாநிதி. கூடவே நாயும் இரண்டு நண்பர்களும். ரப்பர் தோட்டத்தின் உரிமையாளர் அரசியல்வாதி. தவமாய் தவமிருந்து பெற்ற பெண்குழந்தையை நாய் கடித்த கோபத்தில் ஊரில் உள்ள நாய்களையெல்லாம் கொல்ல உத்தரவிடுகிறார். இதில் நாயகனின் நாயும் சிக்கிக்கொள்கிறது. ஏற்கனவே பகை புகைந்த வில்லனிடமிருந்து நாயை காப்பாற்றும் முயற்சியில் மோதல் முற்றுகிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தடதடக்கும் திரைக்கதையின் முடிவே க்ளைமாக்ஸ்.
நாயகன்..
நாயகன் குணாநிதிக்கு இது முதல் படம். சிறு சிறு குறை இருந்தாலும் நடிப்பில் பார்டர் தாண்டிய பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார். எமோஷன் காட்டிலும் ஆக்ஷனில் தூள் கிளப்புகிறார். வாழ்த்துகள் குணாநிதி!
குணாநிதியின் நண்பர்களாக வருகிற இருவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கின்றனர். குணாநிதியின் தாய் மாமனாக காளிவெங்கட் வழக்கம் போலவே முத்திரை பதிக்கிறார்.
வில்லன்…
வில்லனாக அப்பனி சரத் அட்டகாச தேர்வு. ஆத்திரம் தீராமல் குணாநிதியை துரத்திச் செல்லும் காட்சிகளில் மனிதர் சீறி இருக்கிறார். தொடர்ந்து இவரை தேடி வில்லன் வாய்ப்புகள் வரிசை கட்டும். அரசியல்வாதியாக செம்பன் வினோத்திடம் நடிப்பாற்றல் தெரிந்தாலும் அவரை குறைவாகவே பயன் படுத்தியுள்ளனர்.
மற்ற கதாபாத்திரங்கள்..
குணாநிதியின் அம்மாவாக மலையாள நடிகை ஸ்ரீரேகா. க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் ஏஜெண்ட் டீனா ஸ்டைலில் அட்டாக் செய்வது அட்டகாச பர்ஃபாமென்ஸ். இவர்களுடன் காளி கேரக்டரில் நடித்திருக்கும் அந்த நாயிடமும் உயிரோட்ட நடிப்பு.
தொழில்நுட்பம்..
காட்டின் அழகையும் மிரட்டலையும் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறது பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு! விஷுவல் எஃபெக்ட்ஸ் மட்டும் இன்னும் தரமாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. கதை போக்கின் இடையிடையே தொழிலாளர் பிரச்சனை, சாதி வெறி, கேரள கழிவுகள் தமிழக எல்லையில் குவிக்கும் பிரச்சனை என மக்கள் பிரச்சனையை அலசி இருக்கும் இயக்குநர் எஸ்.பி.சக்திவேலை பாராட்டலாம்.
திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் ‘அலங்கு’ அனைத்து தரப்பினரையும் ஈர்த்திருக்கும். இருப்பினும் கவர்ச்சி திணிப்பற்ற ஒரு படமாக வந்திருக்கும் ‘அலங்கு’வை வரவேற்கலாம்!