திரை விமர்சனம்

 சமுத்திரகனி படம் பார்ப்பவர்களின் மனதில் ஒரு பாடமாய் பதிவாகிறார் : ‘திரு.மாணிக்கம்’ – விமர்சனம்

இந்த உலகில் சில விலங்குகள் சில பறவைகள் போல மனிதர்களின் நேர்மையும் அருகிக்கொண்டே வருகிறது. ஒருவனிடம் நேர்மை இருந்தால் அவனை ஆச்சரிய பொருளாகவும் அதிசய மனிதனாகவும் அத்தி பூத்தது போலவும்தான் பார்க்கப்படுகிறான். அப்படி ஒருவனின் கதையே  ‘திரு.மாணிக்கம்’.

கேரளாவின் குமுளியில் லாட்டரி கடை நடத்தும் சமுத்திரகனி கீழ் நடுத்தர வர்க்கத்தின் எல்லா சிரமங்களையும் எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்தும் மனிதர். இவரது மனைவி அனன்யா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். சேதாரம் நிறைந்த வாழ்வாதாரம் என்றாலும் சமுத்திரகனியின் பெரிய சொத்தே நேர்மைதான்.

பேச்சுத்திறன் குறைபாடுள்ள மகளின் சிகிச்சை செலவு, புதிய கடைக்கு அட்வான்ஸ் தர திணறும் நிலை என சிக்கலான ஒரு சூழலில் இவரிடம் வறுமை மட்டுமே வாழ்க்கையாக இருக்கும் பாரதிராஜா லாட்டரி சீட்டு வாங்குகிறார். பணம் இல்லாத காரணத்தால் தான் தேர்வு செய்த லாட்டரி சீட்டை நாளை பணம் கொடுத்து வாங்கிக்கொள்வதாக சொல்லி செல்கிறார். மறுநாள் அந்த லாட்டரி சீட்டுக்கு ஒன்றரை கோடி பரிசு விழுகிறது. பணம் கொடுக்காத பரிசு சீட்டு என்றாலும் இது பாரதிராஜாவுக்குதான் சொந்தம் அவரிடம் சீட்டை கொடுப்பதே நேர்மை என நினைக்கும் சமுத்திரகனி, பாரதிராஜாவை தேடிச்செல்லும் பயணமும் அந்த பயணம் தரும் சிக்கலும் வில்லங்கமுமே கதை.

சமுத்திரகனிக்காகவே அளந்து செய்த கதை அமைந்திருப்பதால் அழகாக அதில் பொருத்திக்கொண்டு மாணிக்கமாக வாழ்ந்திருக்கிறார் சமுத்திரகனி. பல பிரச்சனைகளை சந்தித்தாலும் நேர்மையின் பிடி தளராமல் தனது முடிவில் இறுதிவரை உறுதியாய் இருப்பது படம் பார்ப்பவர்களின் மனதில் ஒரு பாடமாய் பதிவாகிறார்.

இவரது மனைவியாக வரும் அனன்யா, கணவனின் கஷ்டம் அறிந்து நல்ல துணையாக நடந்துகொண்டாலும் பரிசு தொகை நமக்குதான் சொந்தம் என கணவனிடம் மல்லுக்கு நிற்கும்போது மன மாற்றத்தின் தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் விதம் பிரமாதம்.

முதுமை, வறுமை, இயலாமை இந்த மூன்றும் கலந்த நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார் பாரதிராஜா. சமுத்திரகனியை நல்வழிப்படுத்தும் இஸ்லாமியராக நாசர், பாதிரியாராக சின்னிஜெயந்த், சக பயணியாக தம்பி ராமையா, டிரைவராக ஸ்ரீமன் போலீஸாக கருணாகரன், பாரதிராஜாவின் மனைவியாக வடிவுக்கரசி என அனுபவம் முதிர்ந்த நடிகர்கள் அநேகர் இருந்தும் அவர்களிடம் மீட்டருக்கு தப்பிய நடிப்பையே காண முடிகிறது. குறிப்பாக தம்பி ராமையா ஓவர்.. ஓவர்.. ஓவரோ ஓவர்.

குமுளி, இடுக்கி உள்ளிட்ட லொகேஷன்கள் ஒளிப்பதிவின் தரம் கூட்ட உதவியுள்ளது. ஃபிளாஷ்பேக் காட்சியின் நீளம், சமுத்திரகனியின் பயணம் தரும் அலுப்பு என எடிட் செய்யவேண்டிய காட்சிகள் நிறைய. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை சமுத்திரகனியின் பதற்றத்தை நமக்கும் கடத்தி சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.

ஏற்கனவே வெளியான ‘பம்பர்’ படத்தின் ஒன்லைன்தான் என்றாலும் திரைக்கதையின் போக்கில் வேறுப்பட்டு நிற்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.

“நேர்மைனா என்ன?… மற்றவர்களின் துயரத்திற்கு தோள் கொடுக்கும்போது கண்ணிலிருந்து வரும் இரண்டு சொட்டு கண்ணீர்தான். அது தானாதானே வருது.. அப்புறம் ஏன் அதை கொண்டாடுறோம்?..” என்பது போன்ற ஆழமான வசனம் நெகிழச்செய்கிறது.

லாட்டரி என்பது ஒரு சூதாட்டம்தான். அந்த தொழிலை நேர்மையான மனிதன் எப்படி செய்ய முடியும்?.. என்ற முரணும் நடிகர்களின் நடிப்பு, காட்சிப்படுத்திய விதம் என திரைமொழியில் எட்டிப்பார்க்கும் சீரியல் டைப்பும் படத்தின் பலவீனம்.

எனினும் நேர்மையை போதிக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திற்கும்  ‘திரு.மாணிக்கம்’ சிறு விதையாக இந்த சமுகத்தில் விழுவதற்கும் அடிக்கலாம் சல்யூட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE