‘தேஜாவு’ – திரை விமர்சனம்
“சார் நான் ஒரு எழுத்தாளர். என் கதையில் வரும் சில கேரக்டர்கள் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். அதனால் எனக்கு பாதுகாப்பு வேண்டும்” என்று போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தாளர் அச்யுத் குமார், புகார் கொடுக்கும் முதல் காட்சியிலேயே, அட.. இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே என்று எதிர்பார்ப்புடன் படத்துடன் ஒன்ற ஆரம்பிக்கிறோம்.
அச்யுத்குமார் கொடுக்கும் புகாரை கிறுக்குத்தனமாக நினைக்கும் போலீசார், மறுநாளே அவர் எழுதும் க்ரைம் கதை, நிஜத்தில் அப்படியே நடக்க, பரபரப்பாகிறது காவல் துறை. இதற்கிடையே டிஜிபி மதுபாலாவின் மகள், மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். அந்த சம்பவமும் எழுத்தாளரின் கதையில் வர படத்தில் வரும் போலீசுக்கும் படம் பார்க்கும் நமக்கும் டென்ஷன் தொற்றிக்கொள்கிறது.
எழுத்தாளர் எழுதுவதெல்லாம் ஏன் நடக்கிறது? மதுபாலாவின் மகளை கடத்தியது யார்? என்பதை கண்டுபிடிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் அருள்நிதி. தனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்டை அருள்நிதி கச்சிதமாக முடித்துக்கொடுக்கிறாரா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
வித்தியாசமான கதையை யோசித்ததற்காகவே அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசனை பாராட்ட வேண்டும். முதல்பாதி படத்தில் விறுவிறுப்பும் பரபரப்பும் என்றால் இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட திருப்பங்கள் எதிர்பார்ப்புகள் என ‘தேஜாவு’ செம வேகம்.
எப்போதுமே வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதிக்கு இதில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார். எனக்கு ஹீரோயின் வேணும், டூயட் வேணும், ஃபைட் வேணும் என அடம் பிடிக்காமல் கதை என்ன கேட்கிறதோ அந்த எல்லைக்குள் மட்டும் விளையாடி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடிக்கிறார்.
டிஜிபியாக மதுபாலாவுக்கு நடிப்பில் ஸ்கோர் செய்ய நல்ல வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். எழுத்தாளராக வரும் அச்யுத்குமார் அருமையான தேர்வு. அலட்டல் இல்லாத நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார். ”நீங்க எழுதுற கதையோட க்ளைமாக்ஸை முன்னாடியே எழுதி தாங்களேன்” என்று கேட்கும் போலீஸிடம், “கடைசியா குடிக்க வேண்டிய பெக்கை முதல் ரவுண்டிலேயே குடிக்க முடியுமா?” என்று கேட்கும் போது தியேட்டரில் சிரிப்பலை.
படத்துக்கு படம் மெறுகேறிக்கொண்டே போகும் காளிவெங்கட் இதில் கான்ஸ்டபில் கேரக்டரில் பிரமாதப்படுத்துகிறார். ஆங்காங்கே சிரிக்கவும் வைக்கிறார்.
பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவும், அருள் சித்தார்த்தின் எடிட்டிங், ஜிப்ரானின் பின்னணி இசை மூன்றும் படத்திற்கு பெரிய பலம். படத்தை விறுப்பாக நகர்த்திச்செல்வதற்கு எடிட்டிங் பெரிதும் உதவி இருக்கிறது.
லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ‘தேஜாவு’ ரசிக்க வைக்கிறது.