ராச்குமார் நடத்தி இருக்கும் ராஜபாட்டை : ‘பயாஸ்கோப்’ ஒரு பார்வை
தமிழ் சினிமாவில் புது முயற்சிகளும், மாறுபட்ட படைப்பாளிகளும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டதில்லை. இந்த வரிசையில் வைத்து பாராட்டப்படவேண்டியவர் இயக்குநர் சங்ககிரி ராச்குமார்.
சில வருடங்களுக்கு முன் இவர் இயக்கி வெளிவந்த ‘வெங்காயம்’ சினிமாக்காரர்களாளும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. ஆனால் அந்தப் படம் பார்வையாளர்களின் கவனம் பெறுவதற்குள் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் ராச்குமார் பட்ட பாடுகள் கண்ணீர் கதை. “ ‘வெங்காயம்’ படம் கருவாகி உருவான கதையையே ஒரு படமாக எடுக்கலாம்” என்று ஒரு பத்திரிகையில் எழுத்தப்பட்ட ஒற்றைவரியே ‘பயாஸ்கோப்’பை உருவாக்க பொறியாக இருந்திருக்கிறது.
ஆம்.. ‘வெங்காயம்’ படமான கதையும் அதை தயாரிக்க சொத்து மட்டுமின்றி மானம், மரியாதை அத்தனையும் அடமானம் வைத்ததையும் தனது உறவுகளும் நட்புகளும் கதை மாந்தர்களானதும் இருக்கின்ற பணத்தை வைத்துக்கொண்டே தொழில்நுட்பம் செய்ததும், வெகுஜன ரசிகர்களுக்கு படத்தை கொண்டு செல்ல சேரன், சத்யராஜ், நடிகை ரோகினி உள்ளிட்ட திரைக் கலைஞர்கள் கைகொடுத்து கரை சேர்த்த நெகிழ்வான தருணங்களை கலந்துக்கட்டி ‘பயாஸ்கோப்’பை தந்திருக்கிறார் ராச்குமார்.
சினிமாவுக்குள் சினிமாவாக நிறைய படங்கள் வந்திருக்கிறது. ஆனால் தியேட்டரில் வெளியான ஒரு சினிமா எடுத்த உண்மை கதையையே ஒரு சினிமாவாக எடுத்தது உலக சினிமாவில் அநேகமாக இது முதல் முறையாக இருக்கலாம்.
கிராமத்து வெள்ளேந்தி மனிதர்களே பாத்திரகளாக மாறினால் நடிப்பு எங்கே இருக்கும்?.. எல்லோருமே இயல்பாகவே செய்திருப்பது படத்தின் ஆகச்சிறப்பு. குறிப்பாக அந்த பாட்டிமார்கள் அடிக்கும் கூத்து இருக்கே..அத்தனை சிரிப்பு. ஒரு காட்சியில் ஒரு பெண்ணிடம் சண்டையிடுவது போல ஒரு அக்காவை நடிக்க வைத்து ஒத்திகை பார்க்கும் ராச்குமாரை ஒரு கை பார்க்கும் அந்த அக்காவின் அலப்பறை… கண்ணில் நீர் வரவைக்கும் சிரிப்போ சிரிப்பு.
படம் பிடிக்கும் கருவிகளுக்கு பறவை, விலங்குகளின் பெயர் வைத்து அழைப்பது ரசனை. உதாரணத்திற்கு கிரேனை ஒட்டகம் என்பதும் கேமிரா ஸ்டாண்டை எருமை என்று அழைப்பதையும் சொல்லலாம்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்ற தொழில் நுட்பத்தில்கூட எளிமையும் இனிமையும் எட்டிப்பார்ப்பதால் இயல்பாக இருக்கிறது. மொத்தத்தில் தொழில் முறை இல்லாத நடிகர்கள், தொழிலாளர்களை வைத்துக்கொண்டு ராச்குமார் நடத்தி இருக்கும் ராஜபாட்டை இந்த ‘பயாஸ்கோப்’.
சில இடங்களில் எட்டிப்பார்க்கும் நாடகத்தனம் போன்ற குறைகள் இருந்தாலும் இந்த புது முயற்சியை கண்டு ரசித்து வரவேற்றால் அதுவே படத்திற்கு தரும் முதல் மரியாதை!
ஆஹா ஃபைண்ட் தளத்தில் காண கிடைக்கும் இந்த ‘பயாஸ்கோப்’புக்காக பிடியுங்கள் ராச்குமார் ஒரு பூங்கொத்து!
-தஞ்சை அமலன்