‘நான் கடவுள்’ ஆர்யாவாக மாறி ஆடும் ஆட்டம் ருத்ரம் : ‘சீசா’ – விமர்சனம்
வழக்கமான ஒரு க்ரைம் த்ரில்லர் என்றாலும் கதையின் மெயின் பாய்ண்ட் இன்றைய சமூகத்தில் பலரை பாதாளத்தில் தள்ளும் ஒரு விஷயம் இருப்பதும், அந்த பாதாளத்தை நாம் எட்டிப் பார்க்காதவரை வாழும் வாழ்க்கை சொர்க்கம் என்ற செய்தியை உணர்த்தும் படம்.
தொழிலதிபர் வீட்டில் நடக்கும் ஒரு கொலை. விசாரணையில் இறங்கும் போலீஸுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி. அந்த கொலை நடந்த பிறகு தொழிலதிபரும் அவரது மனைவியும் தலைமறைவாகின்றனர். கொலையானது வீட்டு வேலைக்காரர்தான். அதற்காக அவர்கள் ஏன் தலைமறைவாக வேண்டும்?… துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ் வேட்டையில் சிக்கும் குற்றவாளி யார்? கொலையாளி யார்? என்பதற்கெல்லாம் விடை தருகிறது க்ளைமாக்ஸ்.
தொழிலதிபராக புதுமுகம் நிஷாந்த் ரூசோ. முதல் படம் என்றாலும் முகத்தில் பதட்டத்தை காட்டாமல் நடித்திருப்பது சிறப்பு. மனப்பிறழ்வால் தன்னை சிவன் என்று சொல்லிக்கொண்டு ‘நான் கடவுள்’ ஆர்யாவாக மாறி ஆடும் ஆட்டம் ருத்ரம். அதே சமயம் அன்புக்காக ஏங்கும் ஏக்கத்திலும் உருக்குகிறார்.
ரூசோவின் காதல் மனைவியாக வரும் பாடினி குமார் குடும்ப குத்து விளக்காக இருக்கிறார், கிளாமர் ஏரியாவிலும் ஜொலிக்கிறார்; நடிப்பிலும் மின்னுகிறார்.
இன்ஸ்பெக்டர் டெம்பிளேட்டில் வழக்கம்போலவே கச்சிதமாக தன்னை பொருத்திக்கொண்டிருக்கிறார். விசாரணையில் நேர்மையில் துளியும் சிதறாமல் இருப்பதும்; குற்றவாளி தேடலில் திணறுவதும் என அவரது கேரக்டரின் டென்ஷனை ஆடியன்ஸுக்கும் கடத்துவது சிறப்பு.
கமிஷனராக வரும் நிழல்கள்ரவி அரைநாள் கால்ஷீட்டில் நடித்துக்கொடுத்துவிட்டு நடையை கட்டியிருக்கிறார். ரூசோவின் நண்பராக மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டராக ஆதேஷ் பாலா, வீட்டு வேலைக்காரராக நடித்திருக்கும் மாஸ்டர் ராஜநாயகம் பாடினியின் தம்பியாக வருபர் அனைவரும் அவரவர் பங்கை சரியாக செய்துள்ளனர். பாடினி தந்தையாக வரும் இயக்குநர் அரவிந்தராஜ் நடிப்பு ஓவர் டோசேஜ்.
பெருமாள் – மணிவண்ணனின் ஒளிப்பதிவு க்ரைம் த்ரில்லர் மோடில் கனக்கச்சிதம். சரண்குமாரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
படத்தின் கதையை எழுதியிருக்கும் செந்தில் வேலன் மருத்துவர் என்பதால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைவிட மோசமான பழக்கம் கொண்டவர்கள்தான் சமூகத்தின் ஆபத்து என்ற கருத்தை கதையில் அழகாக பின்னியிருக்கிறார்.
டாக்டர் செந்தில் வேலனின் கதைக்கு ஏற்ற திரைமொழி கொடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குநர் குணா சுப்ரமணியம்.
சிறுசிறு குறைகள் இருந்தாலும் ‘சீசா’ பார்க்கலாம்!