மதங்கொண்ட யானையாய் போட்டு பொளக்கிறான் : ‘வணங்கான்’ – விமர்சனம்
கன்னியாகுமரி…
ஒரு ரயில்வே கேட். கதவு திறக்க காத்திருக்கும் பயணிகளிடம் வியாபாரம் செய்யும் திருநங்கைகளை கேவலமாக பேசி தாக்குதல் நடத்துகிறது அறமற்ற அயோக்கிய கும்பல். நமக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி என்ற மனநிலை மனிதர்கள் கண்ணிருந்தும் குருடர்களாக வேடிக்கை பார்க்க, ஒரே ஒருவன் மட்டும் மதங்கொண்ட யானையாய் அந்த கும்பலை போட்டு பொளக்கிறான்.
செவித்திறனும் பேச்சுத் திறனும் இல்லாத அருண்விஜய்தான் அந்த அவன். இதுதான் அவரது கேரக்டர். அநீதிக்கு எதிராக இவன் கொந்தளித்தால் எந்தக் கொம்பனாலும் அடக்கமுடியாது. பாச மலரான தங்கை ரிதா, தேன் குடித்த வண்டாய் தன்னிடம் மயங்கிக்கிடக்கும் நாயகி ரோஷினி பிரகாஷ், சர்ச் பாதிரியார் என்று அருண்விஜய்யின் உலகம் ரொம்ப சிறியது.
பெண்களுக்கு எதிராக தீஞ்செயல் செய்தவர்கள் பற்றி செய்திகளில் படிக்கும்போதும் பார்க்கும்போதும் நமக்கெல்லாம் கொதிக்கும்தானே?… ஆனால் களமிறங்கி ஏதாவது செய்வோமா? அது எப்படி அதெல்லாம் பிராக்டிக்கலா ஒத்து வராதே?.. ஆனால் பார்க்கும் சினிமாவில் அப்படி ஒருவன் இருந்தால் வரவேற்க தோன்றும்தானே? அப்படி இரண்டு மூன்று மனித மிருகங்களை அருண்விஜய் வேட்டையாடுவதும் அதனால் அருண்விஜய்யின் சிறிய உலகம் சிதறுவதும்தான் ‘வணங்கான்’.
“நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்பதுபோல கம்பேக் கொடுத்திருக்கிறார் பாலா.
பாலாவின் உலகத்தில் எதுவெல்லாம் இருக்குமோ அல்லது எதையெல்லாம் எதிர்பார்ப்போமோ அவையெல்லாம் இருக்கிறது. அவ்வப்போது மெய் சிலிர்க்கிறது. ஆரம்பமே அதிரடியாய் தொடங்கும் படம்.. கொலை, கோர்ட், காவல் நிலையம், விசாரணை, கொலையை நான்தான் செய்தேன் என்று அருண்விஜய் ஒப்புக்கொண்ட பிறகும் அதற்கான காரணங்கள் கிடைக்காமல் காவல்துறை திணறுவது என திரைக்கதை கொடுக்கும் விறுவிறுப்பு க்ளைமாக்ஸில்தான் அடங்குகிறது.
பத்தோடு பதினொன்றாக நடித்தவர்கள்கூட பாலா படத்திற்குள் வந்தால் வேறொரு இறக்கை முளைத்து பறப்பார்கள். அருண்விஜய்யும் புதிய சிறகு முளைத்தது போல நடிப்பில் வானம் தொடுகிறார். பேரன்பும் பெருங்கோபமும் பின்னிய கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். குற்றவாளிகளை துரத்தி துரத்தி சாத்தும்போது “சாது மிரண்டால் காடு கொள்ளாது” பழமொழி அருண்விஜய்யின் உருவமாய் மாறுவதை காண முடிகிறது. தன்னை நினைத்து கலங்கும் தங்கையின் நிலை கண்டு உடைந்தழும் காட்சிகளில் நம்மையும் உருகவைக்கிறார்.
சுற்றுலா வழிகாட்டியாக நாயகி ரோஷினி பிரகாஷ். விவேகானந்தர் பற்றி பலமொழிகளில் பயணிகளிடம் அடிக்கும் லெக்சரில் சிக்ஸர் அடிக்கிறார். அடித்தாலும் துவைத்தாலும் அருண்விஜய்யை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகள் ரசனை.
தங்கையாக வரும் ரிதா அட்டகாசம். நூறு படங்கள் கொடுத்த அனுபவம்போல அத்தனை சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமா இயக்குநர்கள் கவனம் ரிதா நடிப்பு மீது விழுவது நிச்சயம். கண்டிப்பு மிக்க காவல் துறை கண்கானிப்பாளராக வழக்கம்போலவே சிறப்பு சேர்த்திருக்கிறார் சமுத்திரகனி.
நேர்மையான நீதிபதியாக மிஷ்கின் பிரமாதம். கோர்ட் காட்சிகளில் செமையா ஸ்கோர் செய்திருக்கிறார். பாலாவின் நக்கல் நையாண்டி வசனத்தில் அழகாக சவாரி செய்திருக்கும் மிஷ்கினுக்கு பாராட்டுகள்!
நாயகியின் தந்தையாக சண்முகராஜன், பார் ஓனராக அருள்தாஸ், தோற்றத்தில் 80% சிவாஜியாக இருக்கும் பாதிரியார் என பிற கேரக்டர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்துள்ளனர். பாலாவின் கண்களாக மாறி சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஆர்.பி.குருதேவ்.
இளையராஜா இருக்கவேண்டிய இடத்தில் சாம் சி.எஸ். நல்லவேளை காப்பாற்றி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் இசையில் அந்த முதல் பாடல் நெகிழச்செய்கிறது.
‘பிதாமகனை’ நினைவூட்டும் அருண்விஜய் கதாபாத்திரம், குளியல் அறை காட்சியில் ஏன் அவ்வளவு டீட்டெயில் என்ற கேள்வி, மாற்றுத்திறனாளிகளின் உலகத்திலிருந்து விடுபடாத பாலா என சில குறைகள் இருந்தாலும் ‘வணங்கான்’ பார்க்கலாம்.