அன்லிமிட் சிரிப்பு விருந்து : ‘மதகஜராஜா’ – விமர்சனம்
பொங்கல் படங்களில் மல்லுக்கு நின்ற படங்களில் ஜல்லிக்கட்டு காளையென துள்ளிப் பாய்ந்து பெரிய வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது ‘மதகஜராஜா’.
விஷால், சந்தானம், சடகோபன் ரமேஷ், நித்தின் சத்யா நால்வரும் நண்பர்கள். பள்ளி வாத்தியார் ஒருவரின் மகள் கல்யாணத்தில் ஒன்று சேர்கின்றனர். கலாட்டா கல்யாணமாக மாறும் அந்த கல்யாணத்தில் இருக்கும் சிக்கலை தீர்த்து வைக்கிறார் விஷால். கடமை முடிந்தது கல்யாணம் வாழ்க! என்று அவரவர் ஊருக்கு புறப்படும் நேரத்தில்தான் நண்பர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை தெரியவருகிறது. அந்த பிரச்சனையை தீர்த்து வைக்க சென்னைக்கு வரும் விஷால், அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் வில்லன் சோனு சூட்டுவிடம் “எண்ணி ஏழே நாளில் நண்பர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டவில்லை என்றால் உன் சாம்ராஜ்யத்தையே சரித்துவிடுவேன்” என சவால் விடுகிறார். அந்த நிமிடம் ஸ்டார்ட் ஆகும் கவுண்டவுனின் முடிவென்ன என்பதை திரையில் பார்த்து தெளிய.
பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னாடி வரவேண்டிய படம் தடைகளை உடைத்து லேட்டா வந்திருந்தாலும் லேட்டஸ்ட் டேஸ்ட்டுடன் ஆடியன்ஸுக்கு அன்லிமிட் சிரிப்பு விருந்து வைக்கிறது.
சந்தானம் அன் கோவுடன் கலகலப்பு, அஞ்சலி, வரலட்சுமியுடன் கிளுகிளுப்பு, சோனு சூட்டுடன் பேர் பாடி மோதல் என ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் விஷால். இந்த சூட்டுடன் சுந்தர் சி காம்பினேஷனில் இன்னொரு படம் அமைந்தால் விஷால் மார்க்கெட் விர்ரென்று ஏறலாம்.
இப்படியொரு சந்தானத்திற்காகதான் காத்திருந்தோம் என்பதுபோல தனது கலாய்ப்பில் தியேட்டரையே குலுங்க வைக்கிறார் சந்தானம். குறிப்பாக அஞ்சலியின் அப்பாவாக வரும் சுவாமிநாதனை வார்த்தைகளால் வெளுத்தெடுக்கும் இடங்கள் பொங்கலோ பொங்கல்…
கவர்ச்சி கரும்பென இளசுகளுக்கு இனிப்பூட்டும் அஞ்சலியும் வருவும் போட்டி போட்டுக்கொண்டு கிளாமர் விருந்து படைக்கின்றனர். சில இடங்களில் ஓவராகவும் போகிறது.
அமைச்சராக மனோபாலா அட்டகாசம். பிணமாக நடிக்கும் காட்சியில் சிரித்து சிரித்து வயிறு பஞ்சராகிறது. மிஸ் யூ சார்!
வில்லனாக சோனு சூட், விஷாலின் நண்பர்களாக சடகோபன் ரமேஷ், நித்தின் சத்யா, ஆட்டோ டிரைவராக மணிவண்ணன், சோனு சூட் அடிபொடிகளில் ஒருவராக சிட்டிபாபு உள்பட லாரி நிறைய ஆர்ட்டிஸ்டை இறக்கி இருக்கிறார்கள். அவரவர் ஏரியாவில் கரெக்டா விளையாடியுள்ளனர்.
ஏற்கனவே ஹிட் அடித்த இரண்டு பாடல்களும் படமான விதமும் அருமை. இரண்டாம் பாதி படத்தில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாமோ என்று தோன்றினாலும் காமெடி ஜானருக்கு ஏற்ற எடிட்டிங்கை கச்சிதமாக செய்திருக்கிறார் எடிட்டர் கே.எல்.பிரவீன்.
வழக்கமான தனது ஃபார்முலாவில் வழக்கமான மசாலாவை தடவி ‘மதகஜராஜாவை’ மணக்க வைத்திருக்கிறார் சுந்தர்.சி. “நம்பி வாங்க சந்தோஷமா போங்க” என்பதற்கு கேரண்டி தருகிறார் இந்த ‘MGR’.