“இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்” என்பதுபோல.. ‘நேசிப்பாயா’ – விமர்சனம்
முரளி வீட்டிலிருந்து இன்னொரு நடிகராக ஆகாஷ் முரளி அறிமுகமாகியிருக்கும் படம். இன்னொரு பக்கம் விஷ்ணுவர்தன் இயக்கம் என்பதால் ‘நேசிப்பாயா’வுக்கு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஹீரோவும் இயக்குநரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கின்றனரா?.. பார்க்கலாம் வாங்க!…
ஐடி ஃபீல்டில் வேலைசெய்யும் ஆகாஷ் முரளி – அதிதிக்கும் இடையே காதல். அவ்வப்போது கருத்து மோதலுடன் நொண்டியடிக்கும் காதல் ஒருக்கட்டத்தில் பிரேக் அப் ஆகிறது. போர்ச்சுகலில் வேலை கிடைக்கும் அதிதி அங்கே போகிறார். போன இடத்தில் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு செல்கிறார். அந்த கொலை பின்னணி என்ன? உண்மையான குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடித்து காதலியை மீட்கும் வேலையில் இறங்கும் ஆகாஷ் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மிச்ச கதை.
ஆகாஷுக்கு நடிப்பில் இது முதல்படி. அனுபவ குறைவை வெளிப்படுத்துகிறது அவரது உணர்வுகள். குரலில் அப்படியே அதர்வாவை உரித்து வைக்கிறார். ரொமான்ஸ் ஏரியாவில் பார்டரில் பாஸ் ஆகும் ஆகாஷ், ஃபீலிங்ஸ் ஏரியாவில் ஏனோ ஒற்றை இலக்க மதிப்பெண்களை பெறுகிறார். அப்பா முரளியின் படங்களை அடிக்கடி பார்த்தாலே நடிப்பில் தேறிடுவீங்க ஆகாஷ்! எனிவே அடுத்த படத்தில் அடிச்சு ஆட வாழ்த்துகள்!
துடுக்கான ஏரியாவில் கலக்கும் அதிதிக்கும் ஃபீலிங்ஸ் ஏரியாவில் நடுநடுங்கும் வீக்னஸ்.. மைனஸ். அளவு கடந்த அன்பை கடத்தும் ஆகாஷிடம் கோபத்தை கொட்டி தீர்ப்பதெல்லாம் செயற்கையின் உச்சம்.
போர்ச்சுகல் பெரும்புள்ளியாக சரத்குமார், அவரது மனைவியாக குஷ்பு, சரத்தின் நண்பராக ராஜா, போலீஸ் சிறப்பு அதிகாரியாக பிரபு என அனுபவப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தும் அவர்களுக்கான தீனி சரியாக கிடைக்காதது ஏமாற்றம்.
படத்தின் நீளத்தை இழுக்க வேண்டும் என்பதற்காகவே லோக்கல் கைகூலி, அவனது தங்கை, சிறையில் அதிதியை போட்டுத்தள்ள முயலும் அவனது காதலி என மற்ற கேரக்டர்களும் ஜவ் ஜவ்…
கதையின் அடிநாதமும் காட்சி அமைப்புகளும் வீக் ரூட்டில் பயணிப்பதால் இசையமைப்பாளர் யுவனும் திருவிழாவில் காணாமல் போல குழந்தைபோல திண்டாடி இருக்கிறார். ஒரு காதல் பாட்டாவது இதயம் தொடவேண்டுமே.. மருந்துக்கும் மெலடி இல்லை.
சென்னை, பெங்களூர், போர்ச்சுகல் என்று எந்த லொகேஷன் என்றாலும் அதனதன் அழகை அள்ளித்தருகிறது கேமரூன் எரிக் பிரிசனின் ஒளிப்பதிவு. ஸ்டண்ட் காட்சிகளும் பக்கா. ஆனாலும் ஹீரோ ஆகாஷ் அடிப்பதை காட்டிலும் “இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்” என்பதுபோல அடிவாங்குவதுதான் அதிகம்.
வெளிநாட்டில் எடுக்கவேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டு கதை எழுதியிருப்பார் போல விஷ்ணுவர்தன். அதனாலேயே அழுத்தமற்ற திரைக்கதை, ஆங்காங்கே திணிக்கப்பட்ட காட்சிகள் என கதையின் உயிர் போர்ச்சுகல் போயும் ஊசலாடுகிறது. ரொமான்ஸ் த்ரில்லரில் கில்லாடியான இயக்குநர் ‘நேசிப்பாயா’வை பொறுத்தவரை முடிந்த அளவு சோதிக்கிறார்.
அதிக செலவில் தயாரான போர்ச்சுகல் டிராமா இந்த ‘நேசிப்பாயா’.