போலீஸ் ராஜாங்கம் நடத்தும் மோடி : ராகுல் காந்தி காட்டம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடந்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்கட்சித் தலைவர்கள் மிரட்டப்படுவதைக் கண்டித்தும் ராகுல் காந்தி டெல்லியின் முக்கிய சாலையான ராஜபாதையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தியை தடுப்புக் காவலில் கைது செய்து டெல்லி போலீஸார் அழைத்துச் சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கே.சி.வேணுகோபால், கே. சுரேஷ், இம்ரான் பிரதாகார்ஹி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
போலீஸார் நடவடிக்கை குறித்து ராகுல் காந்தி பேசும்போது, “மத்திய அரசு சர்வாதிகார முறையில் ஆட்சி செய்கிறது. நாடாளுமன்றத்தின் உள்ளே எந்தவித விவாதத்தையும் அனுமதிக்க மறுக்கிறார்கள். வெளியே போராட்டம் செய்தால் தலைவர்களை கைது செய்கிறார்கள். இந்தியா போலீஸ் நாடாக மாறிவிட்டது. மோடிதான் அதன் ராஜா” என்றார்.
முன்னதாக இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை செய்தனர்.
இந்தப் போராட்டத்தின்போது இந்திய தேசிய காங்கிரஸின் இளைஞர் தலைவர் சீனிவாசன் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.