திரை விமர்சனம்

அபூர்வ ஆவணம்  ‘பூர்வீகம்’ : திரை விமர்சனம்

விஞ்ஞானம் வளர வளர நமது பூர்வீகத்தை, நமது வேரை, நமது பண்பாட்டை, நமது பழக்க வழக்கங்களை தொலைத்துவிட்டோம். நாகரீகம் என்ற போர்வைக்குள் முடங்கி நரக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த உண்மையை எதார்த்தமாக சொல்லி இதயம் தொடும் நல்ல படைப்பு  ‘பூர்வீகம்’.

சகோதரிகளுடன் பிறந்த போஸ் வெங்கட், தன்னைப்போலவே தனது மகன் கிராம வாழ்க்கை வாழக்கூடாது என்று நினைக்கிறார். அதற்காக உடன் பிறப்புகளையும் வெறுத்து ஒதுக்குகிறார். போஸ்வெங்கட் ஆசைப்பட்டது போலவே மகன் கதிரை சென்னையில் படிக்க வைத்து அங்கேயே செட்டில் ஆக வைக்கிறார். ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பிறந்த பூமியையும், உறவுகளையும் மறந்தால், வெறுத்தால் இந்த மண்ணும், இயற்கையும் தரும் தண்டனை என்ன என்பதை போஸ் வெங்கட்டுக்கு கற்றுத்தருகிறது கசப்பான அனுபவம். போஸ்வெங்கட்டின் நேற்றையை இன்றைய, நாளைய தலைமுறை உணர்த்தும் பாடமே இந்தப் படம்.

கதையின் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் கதிருக்கு இரண்டு தலைமுறை வேடம். அதை சிரத்தை எடுத்து சிறப்பாக செய்திருக்கிறார். உறுத்தல் இல்லாத இயல்பான நடிப்பு கதிரின் பலம். ஒரு தலைமுறையில் கிராமத்து இளைஞனாக இன்னொரு தலைமுறையில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் டார்ச்சர் மனைவி சூசனின் கணவனாக இறுவேறு வேடங்களில் தன்னை சரியாக பொருத்தியிருக்கிறார்.

சங்கிலி முருகன் ஃபிளாஸ்பேக்கில் அவருக்கு அப்பாவாக வரும் இளவரசு பிரமாதம். மகனுக்கு சம்பந்தம் போடும் முறை, பெண்ணின் நடவடிக்கையை பார்த்தே அவரது குணத்தை கணிக்கும் முறை, பிறக்கப்போகும் பேரப் பிள்ளையின் ஆரோக்கிய வளர்ப்பிற்காக செய்யும் முன்னேற்பாடுகள் என நமது பாட்டன் முப்பாட்டன்களை கண்முன் நிறுத்தும் கதாபாத்திரத்தில் நெகிழ வைக்கிறார்.

வீண் பந்தாவிற்கும் வரட்டு கெளரவத்திற்கும் உடன் பிறப்புகளை துரத்தியடிக்கும் போஸ்வெங்கட், தன் நினைத்ததற்கு நேர்மாறாக மகனின் வாழ்க்கை அமைந்த கவலையை, சோகத்தை, இழப்பை வெளிப்படுத்தும் நடிப்பில் உருகவைக்கிறார். அவரது மனைவியாக வரும் ஸ்ரீரஞ்சனியும் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

கதிரின் மனைவிகளாக வரும்  மியா ஸ்ரீ, சூசன் இருவரும் அருமையான தேர்வுகள். குடும்ப உறவுகள் சிதறுவதையும், பண்பாடு பழக்க வழக்கங்களை மகன் போஸ்வெங்கட் மறந்ததையும் நினைத்து கலங்கும் கதாபாத்திரத்தில் சங்கிலி முருகனின் நடிப்பு ஓவர் ஆக்டிங்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு இதமான பின்னணி இசையை கேட்கும் வாய்ப்பு. படத்தின் ஒருபகுதி 1950களில் நடப்பதுபோல காட்டப்படுகிறது.  அதற்கு பொருத்தமான இசைக்கருவிகளை பயண்படுத்தியிருப்பதற்காகவே இசையமைப்பாளர் சாணக்கியாவிற்கு பாராட்டுகள்! இரண்டு பாடல்கள் இதயம் பறிக்கிறது.

கான்கிரீட் காடுகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறிவரும் கிராமங்களால் இந்த தலைமுறை சந்திக்கும் சிக்கல், இழப்பு, சொர்க்கம் என்பது சொகுசு வாழ்க்கையில் இல்லை சொந்த பூமியில்தான் என உணர்த்தும் ஒரு கதையை படமாக்கியதற்காகவே இயக்குநர் ஜி.கிருஷ்ணனுக்கு ஒரு பூங்கொத்து!

‘பூர்வீகம்’ ஆபூர்வ ஆவணம்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE