திரை விமர்சனம்

இப்‘போதைக்கு’ அவசர அவசியம் : ‘பாட்டல் ராதா’ விமர்சனம்

“மது உடல் நலத்திற்கு கேடு”    “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்”  பாட்டல் அளவில் மட்டும்  இருக்கும் இந்த வாசகம், பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டுவதற்கு சமம். இந்த ஆதங்கம் + ஆல்கஹால் ஆபத்தை கலந்தெடுத்தால்  ‘பாட்டல் ராதா’ ரெடி.

‘ஓபன்’ பண்ணினா… வேலை செய்யும் இடத்தில் சக தொழிலாளியுடன் சண்டை இழுத்துக்கொண்டிருக்கிறார் குருசோமசுந்தரம் காரணம்.. உள்ளே போன  ‘சரக்கு’. அழகான காதல் மனைவி, அன்பான இரண்டு குழந்தைகள் என்று குடும்பத்தலைவனாக இருக்கும் குருசோமசுந்தரம், தொழிலில் சுதி சுத்தம் என்றாலும் அவனது குடி பழக்கத்தால் குடும்பமும் வாழ்க்கையும் ‘தள்ளாடுகிறது’. இதனால் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படுகிறார் . அங்கிருந்து திருந்தி வெளியே வராமல் திருட்டுத்தனமாக வெளியேறும் குருசோமசுந்தரத்தின் மிச்ச மீதி வாழ்க்கை எப்படியெல்லாம் ‘தடுமாறுகிறது’ என்பதே கதை.

அற்புதமான கலைஞன் என்பதை மறுபடியுமாக நிருபித்திருக்கிறார் குருசோமசுந்தரம். எத்தனையோ நடிகர்கள் குடிகாரர்களாக நடித்திருக்கிறார்கள். ஆனால்  நடிப்பாக தெரியாத ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் சோமசுந்தரம். விழி பிதுங்கி விழுந்துவிடுவதுபோன்று போதையின் தாக்கத்தை நமக்கு கடத்துவது அசாத்திய நடிப்பு.  “இப்படி குடிக்கிறேனேங்கற கவலையிலதான் நான் குடிக்கிறேன்” என்று நமட்டு சிரிப்பு சிரிப்பது; காவல் நிலையத்திலேயே சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்களை பிரித்து குடிப்பது; ஏமாற்றி குடிப்பது; பேக்கரியில் திருடிக்கொண்டு ஓடி தனது இயலாமையை; குற்றத்தை உணர்ந்து தலையில் அடித்துக்கொள்வது; மனைவி இன்னொருவனுடன்  செல்வதை கண்டு மனம் நோவது என ‘பாட்டல் ராதா’ கேரக்டருக்கு உயிர் ’தண்ணி’ ஊற்றி இருக்கும் குருசோமசுந்தரத்தின் நடிப்பு  ‘தெளிவு’க்கு வாழ்த்துகள்!

மொடா குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட ஏழை மனைவியின் உடல்மொழி எப்படி இருக்கும்  முக பாவனை எப்படி இருக்கும் என்று கேரக்டரின் நுட்பம் தெரிந்த நடிப்பில் பாட்டல் ராதாவின் மனைவியாக வாழ்ந்திருக்கிறார் சஞ்சனா நடராஜன்.

வழக்கத்திற்கு மாறான ஒரு கதாபாத்திரம் ஜான்விஜய்க்கு. போதை மறுவாழ்வு மைய நிர்வாகியாக வருபவர் சன்னமான குரலில் அடக்கி வாசித்திருக்கிறார். குடிகாரனாக கடந்து வந்த பாதையை சொல்லும் இடம் நெகிழ்வு.

சோமசுந்தரத்தின் குடி கூட்டாளிகளாக வருபவர்கள், குடிகார தந்தையாக இருந்தும் குருசோமசுந்தரம் மீது பாசம் காட்டும் குழந்தைகள், மறுவாழ்வு மையத்தில் இருக்கும் மது நோயாளிகள் என படத்தில் அனைத்து கேரக்டர்களுமே அவரவர் பங்கிற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

மறுவாழ்வு மையம், மதுபானக்கூடம், சோமசுந்தரத்தின் வீடு என களத்திற்கு ஏற்ற வெளிச்சத்தை கொடுத்து ரியல் அனுபவத்தை உணரவைக்கும் ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவு நேர்த்தி. இதற்கு பெரிதும் உதவி இருக்கும் கலை இயக்கமும் கவனிக்கத்தக்கது. இயல்பை விட்டு விலகாத ஷான் ரோல்டனின் பின்னணி இசைக்கு சபாஷ்!

இந்தப் படத்தில் நாட்டில் உள்ள குடிகாரர்கள் திருந்தப்போவதில்லை. ஆனால் இப்’போதைக்கு’ இது அவசிய அவசரம் என்பதை உணர்ந்து அக்கறையுடன் கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் தினகரன் சிவலிங்கம் பாராட்டுக்குரியவர்!

பிரச்சார நெடி இல்லாத திரைக்கதை தரத்தை பாராட்டும் அதே நேரம், குடி ஆறுக்கு அணை போடாத அரசாங்கத்தையும் நேர்மையாக ‘அதட்டி’ இருந்தால்  ‘பாட்டல் ராதா’ ‘FULL’ ஃபீல் தந்திருப்பான்.

-thanjai amalan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE