சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் – ராஷ்மிகா நடிக்கும் ‘சீதா ராமம்’

வைஜயந்தி மூவிஸ்  சி அஸ்வினி தத் வழங்க  ஸ்வப்னா சினிமா  பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்ச்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘சீதா ராமம்’.  துல்கர் சல்மான், ராஷ்மிகா, மிருணாள் தாகூர்,  சுமந்த் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவரான ராஷ்மிகா வேறொரு படப்பிடிப்பில் இருந்தததால் கலந்துகொள்ளவில்லை மற்றொரு நாயகியான மிருணாள் தாகூர் பேசுகையில், ”  ‘சீதா ராமம்’ படத்தில் சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளில் நன்றாக நடனமாடியிருக்கிறேன் என  பாராட்டுகிறார்கள். இதற்கு நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர்தான் காரணம். காஷ்மீர் குளிரில்  கடினமாக உழைத்து அந்த பாடல் காட்சிகளை உருவாக்கினார். என்னுடைய கலை உலக பயணத்தில் முதன் முதலாக அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.  அனைத்து இளம் நடிகைகளும் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் இது. துல்கர் சல்மான் போன்ற ரசிகைகள் அதிகம் கொண்டாடும் நடிகருடன் இணைந்து நடித்திருப்பது மறக்க இயலாதது. ” என்றார்.

நடிகர் சுமந்த் பேசுகையில், ” தெலுங்கு திரை உலகில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தாலும், ‘சீதா ராமம்’ படத்தில்தான் முதல் முதலாக அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்ககுனர் ஹனு ராகவபுடி கதையை விவரித்ததும், பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்துவதற்காக முதன் முதலாக சென்னைக்கு வருகை தந்திருக்கிறேன். அன்பு காட்டிய ரசிகர்களுக்கு நன்றி. 1960 களில் காஷ்மீர் பின்னணியில் ராணுவ வீரரின் காதலை சொல்லும் இப்படத்தை காதல் காவியமாக இயக்குனர் செதுக்கி  இருக்கிறார்.” என்றார்.

துல்கர் சல்மான் பேசியதாவது :-

” நான் இதற்கு முன்னர் நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும், இதுபோன்ற வித்தியாசமான காதல் கதையில் நடித்ததில்லை. கதை நடக்கும் காலகட்டம், கதை களம், கதாபாத்திர பின்னணி என பல அம்சங்கள் சிறப்பாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதிலும் காதலை கடிதம் மூலம் வெளிப்படுத்தும் 1960 காலகட்டத்து அனுபவங்கள் மிகச் சிறப்பாக ‘சீதா ராமம்’ படத்தில் இடம் பெற்றிருக்கிறது. தற்போதுள்ள தலைமுறைக்கு   கடிதம் எழுதுவது என்பதே புரியாத விஷயம். படத்தில் இடம் பிடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பானவை. இயக்குநர் எல்லா கதாபாத்திரங்களையும் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். கலைஞர்கள் அனைவரும் இயக்குநரின் கற்பனையை படைப்பாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்கினோம்.  ‘சீதா ராமம் ‘தமிழ் பதிப்பிலும் நானே பின்னணி பேசி இருக்கிறேன். ” என்றார்.

‘சீதா ராமம்’ படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்க, பி. எஸ். வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE